வீட்டின் முன்பு இரு கொம்புகள் போல இரு பக்கமும் ஒன்று என இரண்டு மரங்கள் எங்கள் வீட்டில் இருந்தன . முன்பு எட்டு மரங்கள் இருந்தன , வீட்டை விரிவாக்கி கட்டும் போது மீதி மரங்களை எடுத்துவிட்டு இந்த இரண்டை மட்டும் எடுக்காமல் விட்டுவிட்டோம் , அம்மாவின் பிடிவாதம் காரணமாக . அம்மாவுக்கு வீட்டை விரிவாக்கியதிலேயே இஷ்டம் இல்லை , வீட்டின் முன்புறத்தின் அழகே போய் விட்டது என்று எப்போதும் புலம்பி கொண்டிருப்பாள் .
இரண்டு தென்னைகளும் நன்றாக காய் காய்க்கும் , இருமாத இடைவெளிகளில் காய்கள் எடுப்போம் , அம்மா எங்கள் தேவை போக மீதி காய்களை அருகில் இருக்கும் மளிகை கடைக்கு விற்று விடுவாள் . முன்பு காய்கள் பறிக்க சாமி தாத்தா வருவார் , மரம் ஏறும் சமயத்தில் இவருக்கு சட்டென்று எப்படி சக்தி வருகிறது என்று தோன்றும் , சிறுவனை போல சட்சட்டென்று ஏறி விடுவார் . சட்டை இல்லாத ,தொப்பை இல்லாத , ஒல்லியான கருப்பு உடல் , துண்டை தலையில் முண்டாசு போல கட்டி இருப்பார் . எப்போதும் மதியம் போல வருவார் , அம்மா உணவு அளித்து விடுவாள் , அவர் கிளம்பும் போது அம்மா பணம் கொடுப்பார் ,அது எவ்வளவு இருக்கும் என்று அவர் பார்த்ததே இல்லை . போன வருடம் அவர் மறைந்த பிறகு எங்களுக்கு காய் பறிக்க ஆட்களே அமைய வில்லை , இரண்டு மரங்கள் மட்டும் என்பதால் யாரும் ஆர்வமாக வருவது இல்லை , பலமுறை அழைத்து வற்புறுத்த வேண்டும் ,அப்போதுதான் வருவார்கள் , அப்படி வந்தால் அவர்கள் கேக்கும் கூலி கிடைக்கும் காய்களின் விலையை விட அதிகமாக இருக்கும் . பிறகு நான் காய்கள் பறிக்க ஆட்களை தேடுவதையே விட்டு விட்டேன் , அம்மா ரொம்பவும் வற்புறுத்தினால் அப்போது மட்டும் யாராவது கிடைப்பார்களா என்று தேடி பார்ப்பேன் . இந்த முறை ஏனோ சுத்தமாக ஆட்களே கிடைக்காமல் இருந்தது , அம்மாவிடம் பேசாமல் வெட்டிவிட்டு போய் விடலாம் என்றேன் .
இந்த சமயத்தில் தான் அவரை பார்த்தேன் ! பார்த்த போதே மரமேறுபவர் என்று தெரிந்தது , மரம் ஏறுவதற்கான கயிறும், சீவும் அறுவாளும் வைத்திருந்தார் . 35 வயது இருக்கலாம் , கருப்பு நிறம் ,உயரமாக இருந்தார் ,கண்கள் நீண்ட நாட்கள் தூங்காதவர் போல பழுத்து இருந்தன ,தெருவின் இருபக்கமும் பார்த்த படியே சென்று கொண்டிருந்தார் , நான் இருசக்கர வாகனத்தை நிறுத்தி ,இறங்கி அவர் அருகில் சென்றேன் .
" அண்ணா , காய் பறிக்கணும் வரீங்களா, அடுத்த வீதில தான் வீடு " என்றேன் .
"போலாங்க" என்றார் .
இரு சக்கர வாகனத்தில் அவரை கூட்டி கொண்டு வீட்டிற்கு வந்தேன் . வெளி கதவு திறக்கும் சத்தம் கேட்டு அம்மா வெளியே வந்தாள், அவரை பார்த்து மலர்ந்தவள் என்னை பார்த்து "எங்க இருந்து பிடிச்ச இவரை" என்றாள் .
"பக்கத்து வீதியில் நடந்து போயிட்டு இருந்தாரு ' என்றேன் .
வந்தவர் சட்டையை கழற்றி , கயிறை பெல்ட் போல கால்களுக்கு மாட்டி மரம் ஏற ஆரம்பித்தார் , தவளை தவ்வி தவ்வி ஏறுவதை போல அவர் மரத்தில் ஏறுவது இருந்தது , 20 நிமிடங்களில் இரு மரங்களிலும் வேலையை முடித்து இறங்கி விட்டார் . அம்மா என்னிடம் பணம் கொடுக்கும் படி சைகையில் சொன்னாள், நான் இருநூறு ரூபாய் எடுத்து அவருக்கு கொடுத்தேன் . வாங்கி கொண்டவர் , ஏதோ சொல்வதற்கு தயங்குவது போல நின்று பின் தன் கைப்பையில் இருந்த கவரில் இருந்து ஒரு போட்டோ எடுத்து என்னிடம் காட்டினார் . அது ஒரு பெண்ணின் புகைப்படம் ! கிராமத்து முகம் , சற்று மாநிறத்தில் அழகாக இருந்தாள் , நான் இவர் மனைவியாக இருக்கும் என்று யூகித்தேன். அவர் " இவங்களை எங்கயாவது பார்த்து இருக்கீங்களா " என்றார் .
நான் மீண்டும் அந்த புகைப்படத்தை பார்த்தேன் , அவரை நோக்கி " பார்த்தது இல்லைங்க , இவங்க யாரு " என்றேன் .
" சம்சாரம்தாங்க , காணாம் போயிட்டாங்க , எங்க ஊர்காரர் இவளை இங்க திருப்பூர் பஸ் ஸ்டாண்டுல வச்சு பார்த்து இருக்காரு , அதான் இங்க எங்கயாவது இருப்பானு தேடிட்டு இருக்கேன்" என்றார் .
எனக்கு கேட்க திகிலாக இருந்தது , " எவ்வளவு நாளா தேடறீங்க" என்றேன் .
"இன்னையோட 40 நாள் ஆச்சுங்க ஊருல இருந்து கிளம்பி "என்றார் .
" எங்க தங்றீங்க " என்றேன் .
பதில் சொல்லாமல் சோகமாக புன்னகைத்தார் .
"4 வது படிக்கற பொண்ணு இருக்குங்க , அம்மாட்ட பாக்க விட்டு வந்திருக்கேன்" என்றார் .
ஏதோ சொல்ல வந்தவர் பின்பு அதை தவிர்க்கும் இயல்பு காட்டி "சரி கிளம்பறேங்க"என்று சொல்லி வெளியேறினார் .
நான் " எங்கயாவது ட்ராப் பண்ணனுமா " என்று கேட்டேன் , "வேணாம்ங்க" என்று சொல்லி விட்டு நடந்து சென்றார் , அவர் செல்வதை பார்த்து கொண்டிருந்தேன் , பிறகு வீட்டின் வாசலை திரும்பி பார்த்த போது அம்மா நின்று இருந்தாள்,
"பாவம் மா அந்த ஆளு " என்றேன் அம்மாவிடம் .
"அந்த பொண்ணு அவன்கிட்ட மாட்ட கூடாது" என்றாள் அம்மா .
நான் மனம் அதிர்ந்து " ஏன்" என்றேன் . அம்மா பதி
ல் ஏதும் சொல்லாமல் உள்ளே சென்றாள்.
No comments:
Post a Comment