Monday, January 27, 2025

தோற்றம் (குறுங்கதை)

  அந்த காலி நிலத்தின் முன்பக்கத்தை தகரத்தால் மறக்கும் வேலை இன்று செய்ய வேண்டி இருந்தது . நண்பரின் நிலம் அது , குடிகாரர்கள் , சிறுநீர் கழிப்பவர்கள் தொந்தரவுகளால் அந்த நிலத்தின் முன்பகுதியை வண்ண தகரத்தால் மறைத்து தரும் படி கேட்டிருந்தார் . தகரம் நிற்க கூடிய ஃப்ரேம் வேலைகளை நேற்றே முடித்து விட்டிருந்தேன் , இன்று சென்று ஒரு மணிநேரம் வேலை செய்தால் தகரத்தை வைத்து வேலையை முடித்து விடலாம் . உதவியாளர் பாண்டியை கூட அழைத்து கொண்டு வேலைக்கு கிளம்பினேன் .


அந்த நிலம் சிறு நிலம்தான் , ஆனால் நகரத்தின் மையத்தில் இருந்தது , பெரிய தொகை கொடுத்து நண்பர் அதை வாங்கி இருந்தார் , வரிசையாக கடைகள் என செல்லும் அந்த சாலையில் அந்த நிலம் மட்டும் கட்டிடம் இல்லாத புதர்கள் மண்டிய நிலமாக இருந்தது . குடிகாரர்களுக்கு அந்த நிலம் தோதுவாக இருந்தது , சிறுநீர் கழிப்பிடமாகவும் ஆகி இருந்தது , எனவேதான் நண்பர் வேறு வழியில்லாமல் தகர மறைப்பை போடும் நிலைக்கு வந்திருந்தார் . எனக்கும் அதனால் ஒரு வேலை கிடைத்தது .


தகரம் மறைக்க வேண்டி முதல் தகரம் வைத்து ஸ்க்ரூ மாட்டும் போதுதான் அவனை பார்த்தேன் , அருகில் இருந்த ஷட்டர் மூடிய கடையின் முன்பு அமர்ந்து இருந்தான் . சற்று அழுக்கான உடை அணிந்திருந்தான் , போதை ஆசாமி போல இருந்தான் , குடிகாரனுக்குரிய கண்கள் ,சீவாத எண்ணெய் காணாத செம்பட்டை முடி ,தூக்கத்தில் பாதியில் எழுந்து வந்தவன் போல இருந்தான் , இவனை போல பலரை பார்த்து இருக்கிறேன் , கையில் ஏதாவது பொருள் கிடைத்தால் கொண்டு போய் விற்று குடித்து விடுவார்கள் , குடிப்பதற்காக கையேந்த யோசிக்கவே மாட்டார்கள் . எனக்கு ஒவ்வொரு முறையும் தகர சீட்டை உள்ளே இருந்து எடுத்து வந்து மாட்ட வேண்டி இருந்தது , உள்ளே செல்லும் போது ஸ்க்ரூ செய்யும் டிரில்லிங் மிஷினை இவன் திருடி சென்று விடுவானோ என்ற பயம் இருந்தது , எனவே உள்ளே செல்லும் போது மிசினையும் எடுத்து உள்ளே சென்று வந்து கொண்டிருந்தேன் . 


அவன் நான் தகர சீட் மாட்டும் வேலையை உற்று நோக்கி கொண்டிருந்தான் , அவன் கவனம் முழுதும் நான் எப்படி செய்கிறேன் என்பதை காண்பதில் இருந்தது . நான் இப்படி மூன்று முறை தகரம் மாட்டி உள்ளே மிஷின் எடுத்து கொண்டு சென்றிருப்பேன், நான்காவது முறை இன்அப்படி உள்ளே செல்லும் போது அவன் என்னை "அண்ணா" என சட்டென அழைத்தான் ,நான் திரும்பி அவனை பார்த்தேன் , அவன் கீழே கை காட்டிய படி "போன் கீழே விழுந்திருக்கு பாருங்க" என்றான் , அவன் காட்டிய இடத்தில் ,கிட்டதட்ட அவன் அருகில்  என் போன் தவறி கீழே விழுந்திருந்தது . நான் அதை அறியாமல் உள்ளே தகரம் எடுக்க சென்று கொண்டிருந்தேன் !

No comments:

Post a Comment

விமர்சனம் - சில எண்ணங்கள்

 ( இரு ஆண்டுகள் முன்பு எழுதியது ) தூரன் விழாவில் பிகே ராஜ சேகரன் அவர்கள் உரையாடல் நிகழ்வில் அவரிடம் கேட்க பட்ட ஒரு கேள்வி மற்றும் அதற்கு அவர...