Wednesday, March 15, 2023

ஆசிரியர் ( சிறுகதை )

 90 ஆண்டு கால கட்டடம் அது, செங்கல்க்கு பதில் கற்கள் அடுக்கி கட்டப்பட்டிருக்கும், மேலே ஓட்டு கூரை, சுவர் உயரம் எப்படியும் 15 அடி வரும், கற்கள் என்பதால் சுவர் மேடு பள்ளங்களாக இருக்கும், ஆனால் மண்ணால் கட்டிய சுவர் போல தோன்ற வில்லை, வேறு ஏதோ மண்ணுடன் சேர்க்க பட்டிருக்க வேண்டும், தற்கால சிமின்ட் போல உறுதியாக இருக்கும். ஒவ்வொரு அறையும் இது போல தான், பெரிய பெரிய ஹால் போல, ஜன்னல் ஆறு அடி உயரம் கொண்டவை, ஜன்னல் கம்பிகள் வலுவானவை. 6-10 வகுப்பு வரை உள்ள எங்கள் உயர்நிலை பள்ளி இந்த தோற்றத்தில் இருந்தாலும், விளையாட்டு மைதானம் எதிர்புறம் உள்ள ஆரம்ப நிலைப்பள்ளி புதிய கட்டிடம். செங்கல்களால் கட்டப்பட்ட உயரம் குறைவான் சின்ன  சின்ன அறைகள் வரிசையாக இருக்கும், மூன்று அடி சுவர்தான், மீதி உயரத்தை மர சட்டகங்களால் தடுத்து இருப்பார்கள். ஐசக் ஜான் நிக்கோலாஸ் வாத்தியார் இருக்கும் அறை இந்த இரு கட்டிடங்களையும் சேராமல் மைதானத்திற்கு நேர்எதிர் ஓரத்தில் இருக்கும், ஐசக் வாத்தியார் மற்ற வாத்தியார்களுடன் பேச மாட்டார், ஆசிரியர் அறையில் எல்லா ஆசிரியர்களும் இருப்பார்கள், இவர் அங்கு போய் நாங்கள் பார்த்ததே இல்லை, வகுப்பு முடிந்தவுடன் இங்கு வந்து விடுவார், இந்த அறை உண்மையில் தொழிற்கல்வி அறை, இங்கு டேனியல் வாத்தியார்தான் தொழிற்கல்வி எடுப்பார், அதாவது ஆசாரி வேலை சொல்லி கொடுப்பார், இந்த அறையின் ஒரு மூலையில்தான் டேபிள் போட்டு ஐசக் வாத்தியார் அமர்ந்து இருப்பார்.


அந்த டேபிளில் ஐசக் வாத்தியார் அமர்ந்திருக்கும் போது இரண்டு விசயத்தை பார்க்கலாம் ஒன்று சிகரெட், இன்னொன்று டேபிளில் இருக்கும் பழைய குட்டி ரேடியோ. எந்நேரமும் சிகரெட் புகைப்பார், பஞ்சு இல்லாத கோல்டபிளேக், புகை நாற்றம் அவரிடம் எப்போதும் இருக்கும், கரிய நிறம், குட்டையான சுருள்சுருள் முடி, நெற்றியில் வழியும் அளவு எண்ணெய் தேய்த்து இருப்பார், வற்றிய உடலை உடை மறைத்திருக்கும், கைகளில் நரம்புகள் வரிவரியாக தெரியும், அவர் பாடம் எடுப்பதை பார்க்காதவர்கள் அவருக்கு பேச வராது என்றே நினைப்பார்கள், வேறு எங்குமே அவர் பேசி யாருமே பார்த்தது இல்லை. அவருக்கு ஒரு விஷயத்தில் படுபயங்கர பிரியம் இருந்தது, அது கிரிக்கெட், அந்த ரேடியோ அதற்க்குதான், கிரிக்கெட் நடக்கும்போது எந்நேரமும் கமெண்ட்ரி கேட்டு கொண்டிருப்பார், அவர் மனம் ரேடியோவிற்குள் புகுந்து விட்டது போல இருக்கும், அல்லது அவர் காதுக்குள் ரேடியோ புகுந்து விட்டது போல!


ஐசக் வாத்தியார் எங்களுக்கு கணக்கு பாடம் எடுப்பவர், ஒன்பதாவதிலும் அவர்தான் எனக்கு கணக்கு பாடத்திற்கு வந்தார், அவர் வகுப்பு ஆரம்பமாகிறது என்றாலே அறை நிசப்தத்திற்குள் புகுந்து விடும், அவர் நடந்து வரும் காலடி சத்தம் கேட்கும் போதே சன்னமாக வயிறு எங்கள் எல்லோருக்கும் கலக்க ஆரம்பித்து விடும். அவரை பார்த்து பயப்பட ஒரு முக்கிய காரணம் அவர் பாடம் எடுக்கும் விதம்தான், அவர் கணக்கு பாடத்தை அவரே போட்டு எல்லாம் விளக்க மாட்டார், கேள்வியை போர்டில் எழுதி ஏதாவது ஒரு மாணவனை அழைத்து போட வைப்பார், அன்று எவனுக்கு சனியின் அனுக்ரகம் இருக்கிறதோ அவன் மாட்டுவான், ஒவ்வொரு தவறுக்கும் பின்பக்கம் பிரம்பு வந்து மோதி செல்லும். அவருக்கும் கருணைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, அழுதால் அடி சேர்ந்து விழும், வகுப்பில் அடி குறைவாக வாங்குபவர்கள் மிக சிலர்தான், அதில் நானும் ஒருவன்!


எனக்கு ஆங்கிலம் வராது, ஆனால் மற்றப்பாடங்கள் நன்றாக வரும், கணக்கில்  நல்ல ஆர்வம் உண்டு, சிலசமயம் ஐசக் வாத்தியார் யாராவது வந்து போடுங்கள் என்பார், அப்போது நான் எழுந்து சென்று போடுவேன். சிலசமயம் கணக்கு கடினமானது என்றால் அவரே என்னை அழைப்பார். ஆர்வதோடு சென்று போடுவேன், கூட ஒன்றிரண்டு அடியும் வாங்குவேன்! ஐசக் வாத்தியார் என்னை கண்டு கொண்டது முதல் மாதிரி தேர்வு சமயத்தில்தான். அதுவரை எழுந்து சென்று எல்லாம் கணக்கு போட சென்றதில்லை, எல்லோருக்கும் இருந்த பயம் எனக்கும் இருந்தது. தேர்வு முடிந்து விடைதாள்களை திருத்தி ஒவ்வொருவருக்காக கொடுத்து கொண்டிருந்தார், அது 50 மதிப்பெண் அளவுக்கான தேர்வு, 20 க்கும் கீழே இருப்பவர்கள் தாள்களை கையில் தராமல் கீழே வீசி கொண்டிருந்தார், என் பெயர் அழைத்ததும் நான் போய் அருகில் நின்றேன், தாளில் இருந்து பார்வையைவிட்டு நிமிர்ந்து என்னை பார்த்தார், " ஏன் எல்லா கேள்வியும் எழுதல " என்றார், உண்மையில் அதில் இருந்த இரண்டு முக்கியமான கேள்விகள் நடத்தும் போது நான் வர வில்லை, அம்மை காரணமாக 15 நாள் வரை வராமல் இருந்தேன், அவர் கேட்டதும் நடுங்கி இந்த காரணத்தையே சொன்னேன். அவர் தாளை என் கைகளில் அளித்தார். நான் தாளை பார்த்தபோது 15 என்று இருந்தது, அவர் திட்டாததும், தாளை தரையில் எரியாததும் எனக்கு ஆச்சிரியத்தை கொடுத்தது, பக்கத்தில் அமர்ந்திருந்த நண்பன் அகமது 23 வாங்கி இருந்தான், ஆனால் அவன் தாளை அவர் தரையில்தான் வீசியிருந்தார், அகமது கோபமாகி விட்டான், மெல்ல என் காதிற்கு மட்டும் கேட்கும் படியாக " இந்தஆள் லூசாடா " என்றான். நான் தாளை அவசரமாக திருப்பி பார்த்தேன், அவர் எனக்கு கைகளில் தாள் அளித்ததன் காரணம் புரிந்தது, நான் மொத்தம் 15 மதிப்பெண்களுக்குதான் விடை எழுதி இருந்தேன், எல்லாமே சரியான பதில்கள், முழு மதிப்பெண்கள், 15 மதிப்பெண்களுக்கு எழுதி அதை முழுமையாக பெற்றிருக்கிறேன், மகிழ்ச்சியாக இருந்தது.


ஆனால் அகமது ஐசக் வாத்தியாரை லூசு என்று சொல்ல இது மட்டும் காரணம் அல்ல, அப்படி ஒரு சந்தேகம் எங்கள் வகுப்பில் இருந்த எல்லோருக்கும் உண்டு, ஒரு நிகழ்வுதான் இதற்கு காரணம், அது நடந்து சில நாள் ஆகி இருக்கும், சட்டென வகுப்பில் இருந்த ஸ்பீக்கர் பேட்டியில் எச்எம் பேச ஆரம்பித்தார் " யாரும் பதறாமல், அவசரபடாமல் வகுப்பு விட்டு வெளியேறி மைதானம் பக்கம் வாருங்கள், ஆசிரியர்கள் மாணவர்களை சீக்கிரம் வெளியேற்றி மைதானம் பக்கம் கொண்டு வாருங்கள், அவசரம், பள்ளியில் குண்டு வைக்க பட்டுள்ளதாக சந்தேக எச்சரிக்கை வந்துள்ளது " என்றார். நாங்கள் அரக்கபரக்க எழுந்து ஓடினோம், ஆனால் பயம் என்று சொல்ல முடியாது, ஏற்கனவே சில மாதம் முன்புதான் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்து முடிந்து இருந்தது, கோவை குண்டுவெடிப்பு என்று அதற்கு பெயர் வைத்திருந்தார்கள், அதன் பிறகு இப்படி சட்டென ஏதாவது இப்படி புரளி வரும், மக்கள் அலறுவார்கள், பிறகு சற்று நேரத்திலேயே அது புரளி என்று தெரிந்து விடும். வகுப்பில் எழுந்து எல்லோரும் ஓடும் போது ஐசக் வாத்தியார் மட்டும் அப்படியே இருக்கையில் சாதாரணமாக அமர்ந்து இருந்தார். அவரிடம் அதிகமாக அடிவாங்கி பெயர் வாங்கி இருந்த மனோஜ் அவ்வளவு அவசரத்திலும் அவரிடம் சென்று " வாங்க சார் போவோம் " என்றார். அவர் சிரித்து " நீ போ, நான் வரேன் " என்றார்.


மாதிரி தேர்வுக்கு பிறகு நான் கணக்கில் தீவிர ஆர்வம் செலுத்தினேன், அவருக்கும் என்னிடம் வெளியே காட்டி கொள்ளாத விசேஷ அன்பு இருந்தது, அவர் காட்டி கொள்ள வில்லையே தவிர மாணவர்கள் எல்லோருக்கும் அது தெரிந்திருந்தது, அது என் மீது சிலர்க்கு பொறாமையும் அளித்தது, ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர் ஒவ்வொருவரையும் கவனித்தார், அவர்களுக்கு ஏற்ப அவர்களை வளர வைத்தார், ஆனால் ஒன்று அவரிடம் இருந்து பயின்றாக வேண்டும் அல்லது வகுப்பு விட்டு ஓடிவிட வேண்டும் என்ற நிலை இருந்தது, நாகராஜ் இவருக்கு பயந்து படிப்பை விட்டு வீட்டை விட்டு ஓடி போய் பிறகு கண்டுபிடிக்க பட்டு கடைசியில் படிப்பே வேண்டாம் என்று வேலைக்கு போய் விட்டான், அவனுக்கு வில்லன் இவர்!


அரை பரீட்சை வரை சந்தோசமாக போய் கொண்டிருந்த என் வாழ்விலும் சனிஸ்வரன் வந்து விளையாட ஆரம்பித்தார், எனக்கு அவரிடம் இருந்த பயம் போய் அசட்டு தைரியம் வந்தது, ஒருமுறை விடுமுறை எடுத்து ஊர்சுற்ற போய் விட்டேன், அன்று முக்கிமான தேற்றம் எடுத்திருந்தார் போல, எனக்கு தெரியவில்லை, மறுநாள் எப்போதும் போல சென்றேன். அவர் வகுப்பு தொடங்கி அவர் உள்ளே வந்ததும் என்னை பார்த்தார், " நேத்து ஏன் வரல " என்றார். "உடம்பு சரியில்ல சார் " என்றேன், நான் சொன்னது பொய் என்பதை போல பார்த்தார், அப்போது சனி என் நாவில் புகுந்து " சார், நான் நேத்து நடந்த பாடத்தை பார்த்து படிச்சுடறேன் " என்றேன். அவர் ஒரு நிமிடம் மவுனமாக நின்று " வெளிய போ " என்றார். நான் தயங்கி நின்றேன், அவர் உருமி " வெளிய போடா " என்றார், நான் பயந்து வேகமாக சென்று வெளியே போய் நின்றேன்.  பிறகு அவர் வழக்கம் போல பாடம் நடத்தினார், உள்ளே அழைக்கவே இல்லை.


அன்றிரவு எனக்கு தூக்கம் பிடிக்க வில்லை, அவமான படுத்தி விட்டார் என்று நினைத்தேன், பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன், யோசித்து யோசித்து நாளை வகுப்பில் செல்லாமல் வெளியேவே நின்று விட வேண்டும், அவர் அழைத்தால்தான் உள்ளே போக வேண்டும் என்று முடிவு செய்து தூங்கினேன், காலை முழுதும் அதுதான் நினைப்பாக இருந்தது, காலை இன்ட்ரெவல் முடித்து முதல் வகுப்பு கணிதம், நான் உள்ளே செல்லாமல் வெளியேவே நின்றேன், அகமது "வாடா உள்ள " என்றான், நான் முகத்தை வீராப்பாக வைத்து " நான் வரல " என்றேன், அவன் " நீ ஐசக் ட்ட உதை வாங்க போறது நிச்சயம்டா " என்று திட்டி உள்ளே சென்றான், வகுப்பில் எல்லோரும் என்னை பார்த்தனர், ஆனால் யாரும் ஏதும் கேட்க வில்லை. ஐசக் வாத்தியார் வருவது தூரத்தில் தெரிந்தது, எனக்கு ஒன்னுக்கு வருவது போல இருந்தது, ஐந்து நிமிடம் முன்புதான் ஒன்னுக்கு போயிருந்தேன்! அவர் அருகில் வரவர கால் நடுங்க ஆரம்பித்தது, என்ன ஆனாலும் அவர் அழைக்காமல் உள்ளே செல்ல கூடாது என்று நினைத்தேன். அருகில் வந்தவர் என்னை ஒரு கணம் நின்று பார்த்தார், பிறகு ஏதும் சொல்லாமல் உள்ளே சென்று விட்டார். பாடம் எடுக்க தொடங்கி விட்டார், நேரம் செல்ல செல்ல என் உறுதி குறைந்து கொண்டே வந்தது, அவர் என்னை பொருட்படுத்தவே இல்லை, கடைசில் அழைக்க மாட்டாரா என்று ஏங்கினேன், அப்போதும் அவர் அழைக்காமல் உள்ளே போக கூடாது என்ற எண்ணம் இருந்தது. வகுப்பு முடிந்தது. அவர் வெளியே வந்தார், என்னை திரும்பி கூட பார்க்க வில்லை, நொந்து போய் விட்டேன்.


தூக்கம் இன்றும் போனது, தைரியம் எல்லாம் காணாமல் போய் விட்டது. அடுத்தநாள் வந்தது, வகுப்பு வந்தது, சத்தம் இல்லாமல் அவர் வரும் முன்பே போய் என் இருக்கையில் அமர்ந்து கொண்டேன், வந்தவர் நேராக என்னை பார்த்தார், தொடர்ந்து அவர் பார்க்க வேறு வழியில்லாமல் எழுந்து நின்றேன், அவர் நிதானமாக " வெளிய போ " என்றார். நான் பலவீனமான குரலில் " சாரி சார் " என்றேன் அவர் நான் சொல்லி முடிக்கும் முன்பே " வெளிய போடா " என்றார். சட்டென எங்கிருந்தோ வந்த ரோசத்துடன் எழுந்து கோபமாக வெளியே சென்றேன். அவர் பிறகு இது எதுவும் நடக்காதது போல பாடம் எடுக்க துவங்கி விட்டார். கோபமும் அழுகை மனநிலையும் வந்தது, இனி அவர் கூப்பிடாம உள்ள போகவே கூடாது என்று முடிவு செய்தேன், என்ன ஆனாலும் சரி என்று எண்ணிக்கொண்டேன், தொடர்ந்து அந்த வாரம் முழுதும் உள்ளே செல்லாமல் வெளியேவே தரையில் அமர்ந்து கொண்டேன், அவர் கூப்பிடவே இல்லை, அடுத்தடுத்த வாரங்களும் அது நீண்டது, நான் மன்னிப்பு கேட்டால் உள்ளே விடுவார் என்று அகமது சொன்னார், நான் அவனிடம் " இந்த வகுப்பே எனக்கு வேணாம்டா " என்றேன். அவர் வகுப்பில் உள்ளே செல்லும் போதும் வெளியே செல்லும் போதும் எழுந்து நிற்பேன், ஆனால் நான் இருந்ததையே அவர் மறைந்து விட்டவர் போல நடந்து கொண்டார்.


பி.டி வாத்தியார்தான் என்னை ஐசக் வாத்தியார் வெளியே அனுப்பியதை முதலில் கண்டுபிடித்தார். நடந்து சென்றவர் நான் வெளியே இருப்பதை பார்த்து என்னை அழைத்தார் " ஏ வெளிய உட்கார்ந்து இருக்க " என்றார். "இல்லை சார் சும்மா தான் "என்றேன், அவர் முறைக்க பிறகு நடந்ததை சொன்னேன் " படிப்பை கெடுத்துக்காத, நல்லா படிக்கறவன் நீ " என்றார். நான் ஒன்றும் சொல்லாமல் நின்றேன், " சரி போ " என்று சொல்லி விட்டு கிளம்பினார்.


அந்த ஆண்டு முழுதும் நான் பிறகு அவர் வகுப்பிற்குள் போகவே இல்லை, அவரும் அழைக்க வில்லை, நானும் உள்ளே வருகிறேன் என்று கெஞ்ச வில்லை, வகுப்புகள் முடித்து பொது தேர்வுக்கு முன்பான ஒரு தயார் படுத்தலுக்கான மாதிரி தேர்வு நடந்தது. கணக்கு தேர்வில் தேர்வு ஹாலில் சட்டென உள்ளே வந்தவர்,எழுதி கொண்டிருந்த என்னை பார்த்து " என் பாடத்தை எழுதாத, வெளிய போ " என்றார். சட்டென அழுது விட்டேன், மொத்த தைரியமும் ஓடி போனது, அழுது நின்று கொண்டு " சாரி சார் " என்றேன், அவர் ஏதும் சொல்லாமல் வெளியே சென்று விட்டார். வகுப்பில் இருந்த ஆசிரியர் என்னிடம் எழுது என்பது போல சைகை காட்டினார்.


தேர்வுகள் முடிந்து வெறும் வகுப்பு சில நாள் இருந்தது, பொது தேர்விற்கான நாட்கள் ஒரு வாரம்தான் இருந்தது, ஹால் டிக்கெட் கொடுப்பது பற்றி தேர்வு ஹாலில் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி எல்லாம் எச் எம் வகுப்பிற்கு நேராக வந்து பேசி சென்றார். எனக்கு வீட்டில் பத்தாவது மேல் படிக்கும் சூழல் இல்லை, வேலைக்கு போவது என்று இருந்தமையாமல் மற்றவர்களிடம் இருந்த மார்க் சார்ந்த ஆர்வம் எனக்கு இல்லாமல் இருந்தது, எப்படியாவது பாஸ் ஆனால் போதும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. அதனால் மற்றவர்களை விட நான் பதட்டம் இல்லாமல் இருந்தேன். மதியம் உணவு முடிந்து வகுப்புஅறையில் அமர்ந்து நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தேன், முந்திய நாள் நடந்த கிரிக்கெட் பற்றித்தான் பேச்சு ஓடிகொண்டிருந்தது, அசாருதினை நான் திட்ட அகமது வெங்கடபதி ராஜுவை திட்டி கொண்டிருந்தான். அப்போது ஒரு வேறுவகுப்பு பையன் உள்ளே வந்து " சிவசங்கரன் யாரு, ஐசக் மாஸ்டர் வந்து பார்க்க சொன்னாரு " என்றான், சிவசங்கரன் நான்தான், மொத்த 10 ம் வகுப்பு மூன்று வகுப்பிலும் ஒரு சிவசங்கரன் நான் மட்டுமே இருக்கிறேன். பயந்து வீட்டேன். கண்கள் கலங்கி விட்டன, அகமது " நேரா போய் கால்ல விழுந்துடுடா " என்றான்.


அவர் இருந்த தொழிற்கல்வி கூட அறைக்கு சென்றேன், உடல் என் கட்டுப்பாட்டில் இல்லாதது போல இருந்தது. அறைக்குள் அவர் சிகரெட் பிடித்து அமர்ந்திருந்தார். நான் வாசலில் அவரை பார்த்தப்படி உள்ளே செல்லாமல் நின்று கொண்டேன், என்னை பார்த்ததும் உள்ளே வா என்பது போன்று தலை அசைத்தார். டேபிள் அருகில் போய் நின்று கொண்டேன். என்ன சொல்வது என்று தெரியாமல் அவரை பார்த்து கொண்டிருந்தேன், கண்களில் எந்த நேரமும் அழ நீர் காத்திருந்தது. அவர் சிகரெட் அனைத்து, மீதியை அருகில் இருந்த பிளாசிட்டிக் குப்பை தொட்டியில் போட்டார். சில கணம் ஏதும் பேசாமல் இருந்தார். பிறகு என்னை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்து " நீ செண்டம் வாங்க கூடியன்னு நினைச்சேன் , லைப்ப வீணாடிச்சுடாத, போ, ஒழுங்கா படி " என்றார். பிறகு மேற்கொண்டு ஏதும் சொல்லாமல் "போ" என்றார்.


பொது தேர்வுகள் நடந்தன, ஆங்கிலத்தில் சரியாக எழுத வில்லை, மீது பாடங்கள் சுலபமாகதான் இருந்தன, கணக்கில் கிராப் தப்பு செய்து விட்டேன் என்று வெளியே வந்து நண்பர்களுடன் பேசும் போதே தேடிந்தது, - ஐ + என்று நினைத்து கணக்கு போட்டு கிராப் போயிருந்தேன், அது முற்றிலும் தவறாக போயிருந்தது, அந்த வருத்தம் ஒரு நாள் முழுதும் இருந்தது, மற்ற பாடங்கள் பரவாஇல்லை ரகத்தில் எழுதி இருந்தேன். பிறகு தேர்வுகள் முடிந்தது, நான் தேர்வு முடிந்த கையொடு ஒரு பால் கம்பெனியில் வேலைக்கும் சேர்ந்து விட்டேன்.


இரு மாதங்கள் முடிந்து தேர்வு முடிவுகள் வந்து இருந்தன, நான் ஆங்கிலத்தில் பெயில் ஆவேன் எண்ணி இருந்தேன், ஆச்சிரியமாக 62 வாங்கி இருந்தேன், ஐந்து பாடங்கள் என 500 க்கு 408 வாங்கி இருந்தேன், எப்படி வாங்கினேன் என்பது எனக்கே ஆச்சிரியமாக இருந்தது, அம்மா மேல படி என்று சொல்லி மேலும் ஆச்சிரியம் கொடுத்தாள். ஆனால் எனக்கு தேர்வு முடிவில் இருந்த பெரிய திருப்தி கணக்கில் 91 மதிப்பெண் எடுத்து இருந்தேன், கிராப் சரியாக இருந்தால் 100 எடுத்திருப்பேன் போல. நான் பள்ளி நோக்கி கிட்டத்தட்ட ஓடினேன், முதல் மதிப்பென் எடுத்த மாரியப்பன் நின்று கொண்டிருந்தான், 480 அவன் பொறாமையாக இருந்தது. ஆனால் அவன் அறிவியலில் மார்க் குறைந்து விட்டது என்று புலம்பி கொண்டிருந்தான். நான் நேராக தொழிற்கல்வி கூட அறை நோக்கி ஓடினேன். தூரத்திலேயே ஐசக் வாத்தியார் இருப்பது தெரிந்தது. போய் வாசலில் நின்று கொண்டேன்.


ஏதேச்சையாக வாசல் பார்த்தவர் என்னை பார்த்து சற்று ஆச்சிரியம் அடைந்தார், வா என்பது போல முகஅசைவு காட்டினார். நான் அருகில் சென்று நின்றேன். என்ன என்பது போல பார்த்தார். நான் திணறல் மொழியில் " சார் கணக்குல 90 வாங்கிட்டேன்  சார் " என்றேன். அவர் கண்களில் ஈரம் படர்வது போல தெரிந்தது, எழுந்து நின்றார், பிறகு டேபிளில் இருந்து நகர்ந்து என் பக்கம் வந்தார், கைகள் நீட்டினார், நான் அவர் ஹான்சேக் தர கை நீட்டுகிறார் என்று எண்ணி என் வலது கை நீட்டினேன், அவர் தன் இரு பெரிய கைகளை கொண்டு என் கைகளை அனைத்து கொண்டார், " நல்லா படி, போ " என்றார்!






 

Sunday, May 15, 2022

கனவு (சிறுகதை )

 கனவு 


அறைக்குள் அமைதி நிறைந்திருந்தது,  ஒற்றை அறை,  கதவை ஒட்டி சமையற்கட்டு திட்டு, சில பழையதான  சமையற் பாத்திரங்கள்,  கதவுக்கு நேரெதிர் சுவரின் வலது மூலையில் 5 அடி இரும்பு பீரோ,  அதையொட்டி சிறுமேசை அதில் எந்தியவியல் புத்தகங்கள்,  அதையொட்டி ஒரு சாலானி, அதன் மீதும் அதன் கீழும் குடங்கள், நீர் பாத்திரங்கள், 

 அறையில் நடு உச்சியில் ஒரு எந்திர காற்றாடி,  இவ்வளவுதான் அறை,  காற்றாடியின் கீழ் பிளாஸ்டிக் பாயின் மீதிருந்த துணி விரிப்பில் சரஸ்வதி  தூங்கி கொண்டிருந்தாள், அவள் அருகில் சங்கர், அவள் மகன், இன்ஜினியரிங் 2 ஆண்டு படித்திருக்கிறான்,  அவனும் உறக்கத்தில் இருந்தான், குளத்தில் கல் விழுவதை போல மணி 5.30 நெருங்கியதும் சரஸ்வதி தூக்கம் கலைத்து எழுந்தாள். 


கலைந்திருந்த  போர்வையை எடுத்து சங்கர் மீது சரியாக போர்த்திவிட்டாள்,  தான் நிதானித்து திரும்புவதற்குள் வளர்ந்து பெரியவனாகி விட்டான் மகன்  என்று அடிக்கடி இப்போது எண்ணிக்கொள்கிறாள் , இப்பொழுதெல்லாம்  அவன் முகம் பார்க்க  தலையை உயர்த்தி கொள்ள வேண்டியிருக்கிறது சரஸ்வதிக்கு,  தனது கனவு நிறையும் கணம் நெருங்கி வருவதை எண்ணி எப்போதும் அதிள் கனல் மூட்டி அதிலேயே வாழ்ந்து கொண்டிருப்பாள்.  


எழுந்து முகம் கழுவினாள், சுவர்கடிகாரத்தில் நேரத்தை பார்த்தாள் , ஸ்டவ்வில் தீக்குச்சியை வைத்து நெருப்பு பற்றவைப்பதை போல அவளுள் அவசர மனநிலை பற்றி கொண்டது, துரித கதியில் கழுவ வேண்டிய பாத்திரங்களை எடுத்து வாசல் வந்தாள், கதவுக்கு வெளியே வலதுபக்கத்தில் இருந்த கழுவுமிடத்தில் பாத்திரங்களை போட்டு கழுவினாள்,  பின் எழுந்து வாசலை சுத்தம் செய்தாள்,  மணி 6.00 ஆக ஆரம்பித்திருந்தது,  உள்ளே வந்து மூன்று ப்ளஸிட்டிக் குடங்களை எடுத்து உப்புத்தண்ணி வரும் பொது குழாய்க்கு சென்றாள்,  அங்கு ஏற்கனவே மூன்று பேர் நின்றிருந்தனர்,  அவர்களுக்கு அடுத்து குடங்களை வைத்து நின்றாள்,  பின் அவளுக்கு பின்வந்த ஒரு பெண்மணியிடம் "பாத்துக்குங்கம்மா" என்று சொல்லி அவசரமாக வீடு நோக்கி சென்றாள்,  உள்ளே  சென்று ஸ்டவ் பற்றவைத்து அலுமினிய சோற்றுப்பானையை வைத்து அதில் இரு கிளாஸ்  அரிசியை  நீரில் கழுவிய பின்  போட்டாள்,  பின் " சங்கரு, டே சங்கரு " என்று கத்திவிட்டு  பொதுக்குழாய் நோக்கி வேகம் கொண்டு நடந்தாள்,  அவளது இரு குடங்களில் அந்த பெண்மணி நீர்பிடித்து வைத்திருந்தாள்,  மூன்றாவது குடம் நிறைந்து கொண்டிருந்தது,  அவள் அந்த பெண்மணியிடம் "வந்தரங்கமா " என்று சொல்லி ஒரு குடத்தை இடது  இடுப்பிலும் இன்னொரு குடத்தை வலது  கையிலுமாக எடுத்து வீடு நோக்கி வேகமாக நடந்தாள் ,  அறையில் சங்கர் அடுப்பில் இருந்த  சோற்றுப்பானையை கிளறி கொண்டிருந்தான்,  அவள் குடங்களை இறக்கி, அதை நீர்ப்பாத்திரத்தில் ஊற்றிவிட்டு பின் காலி குடத்தை  சங்கரிடம் கொடுத்தாள்,  அவன் ஏதும் சொல்லாமல் குடங்களை எடுத்து பொது குழாய் நோக்கி சென்றான்,   சரஸ்வதி காய்கறிகளை எடுத்து குழம்பு செய்வதற்கு ஆயத்தமானாள். 


சங்கர் கையில் காலேஜ்பேக் எடுத்துக்கொண்டும், சரஸ்வதி சாப்பாடு கூடையை எடுத்து கொண்டும் பஸ்ஸ்டாண்ட் நோக்கி நடந்து  சென்று கொண்டிருந்தனர், சரஸ்வதி கூடையில் இருந்த மணிபர்ஸை பிரித்து அதில் இருந்து 50 ரூபாய் எடுத்து மகனிடம் கொடுத்து " சாயங்காலம் எங்கையும் சுத்தாம வீடு வந்து சேரு " என்று சொல்லி மேடும் ஏதோ ஞாபகம் வந்தவளாக மீண்டும் மணிபர்ஸை எடுத்து இன்னொரு 50 ரூபாய் கொடுத்து " கோதுமையை அரச்சு கொண்டுவந்துருடா " என்றாள், அவன் ஏதும் சொல்லாமல் வாங்கி வைத்து கொண்டான்.  அவன் பஸ் ஏறுவது வரை அவன் கூட நின்றாள், அவன் படிக்கட்டில் ஏறி திரும்பி " வரம்மா " என்று சொல்லி உள்ளே போனான், பஸ் நகர்ந்து சென்றபிறகு இன்னும் அரைகிலோ மீட்டர் தூரத்தில் இருந்த தனது பனியன் துணி அச்சகம் நோக்கி நடந்தாள். 


அவள் கூட்டத்திற்குள் உள்ளே போக 9.10 ஆகி விட்டது,  வாசலின் சற்று உள்ளே இருந்த டேபிளில் இருந்த ஞானம் " தினமும் இப்படி லேட்டாவே வா " என்று கடிந்தான், அவள் ஏதும் சொல்லாமல் உள்ளே போனாள்,  அவள் போகும்போது,  " இதுவே நாங்க அஞ்சு நிமிஷம் லேட்டா அனுப்பினா எழவுவீட்டு கிழவி மாதிரி மூஞ்ச வச்சுக்கறது " என்றான் ஞானம், அதற்குள் அவள் உள்ளே சென்று விட்டிருந்தாள்,  ஞானம் தான் சொன்ன வார்த்தையை திரும்ப தனக்குள்  யோசித்துப்பார்த்து  சிரித்து கொண்டான். 


இது நீண்ட டேபிளில் வரிசையாக துணிகளை விரித்து போட்டு, ஒன்றுபோலவே அச்சு வைத்து அச்செடுக்கும் வகையான துணி அச்சகம்,  டேபிள் 6 அடி அகலமும் 80 அடி நீளமும் இருக்கும்,  இடத்திற்கு ஏற்ப பல நீளத்தின் அளவு மாறும்,  அகலம் ஒரே அளவுதான், ஒரு கூடத்தில் இப்படி நான்கைந்து டேபிள்கள் இருக்கும்.  இருபக்கமும் வரிசையாக துணிகள் எடுக்கப்படும்,  பின் அதன் மேல் அச்சு பிளேட் வைத்து அச்சு உருவாக்குவார்கள்,  எத்தனை நிறங்கள் வேண்டுமே அத்தனை முறை அதன் மீது அச்சேற்றுவார்கள், அச்சு திரும்ப திரும்ப வைக்கப்பட்டாலும் துளிகூட பிழையில்லாமல், மாறாமல் ஒரேபோல அச்சு விழுந்திருக்கும்,  தவறின் சாத்தியம் என்பது 1% தான். முதலில் வரிசையாக துணியினை அடுக்குவார்கள், பெரும்பாலும் அது பனியனின் முன்பாகமாக இருக்கும்,  பின் அச்சு பிளேட்டின் நடுமையமும், துணியின் நடுமையமும் இருக்கும் படியாக பிளேட் ஸ்டாப்பரை சரி செய்வார்கள், அந்த ஸ்டாப்பரை ஒட்டி வைக்கும் பொழுது தானாக துணியின் மையமும் அச்சு பிளேட்டின் மையமும் சரியாக வந்தமையும்,  ஸ்டாப்பர் என்பது டேபிள் இரு விளிம்பிலும் இருக்கும் சிறு அலுமினிய நீள் காடிபட்டை அதில் ஸ்டாப்பராக பயன்படுத்தப்படும் போல்டை  இடதும் வலதுமாக  நகர்த்தமுடியும்.  


சரஸ்வதி போல மேலும் அங்கு 4 பெண்கள் உண்டு, அது தவிர 7 ஆண்கள் இவர்கள் 11 பேர்தான் பணியாளர்கள், இது தவிர  ஞானம் மேனேஜர், முதலாளி  உள்ளே ஆபிஸில் இருப்பார்.


 வண்டி கிளம்பியது போல அச்சு வேலை சரஸ்வதி உள்ளே செல்லும்போதே துவங்க ஆரம்பித்திருந்தது,  அவள் அதனுடன் இணைந்து கொண்டாள்,  பணியாளான அருள்  சரஸ்வதியிடம்  உரிமையாக பேசுபவன்,  அவளும்  அவனிடம் பாசம் காட்டுவாள்,  அவனுக்காக டீ எடுத்து வைத்திருப்பாள்,  அவனும் அவளுக்கு வேலை நேரத்தில் உதவிகள் செய்து கொடுப்பாள்.  இவர்கள் இருவரையும் இணைத்து மற்றவர்கள் கிசுகிசுத்து கொள்வார்கள். 


சரஸ்வதி துணியில் அச்சாகி இருந்த வடிவத்தை பார்த்தாள் , ஒரு பார்பி கேர்ள் ஓவியம் அது , கையில் ஷாப்பிங் துணிப்பைகளும்,  சிகப்பு முடியும் பொம்மைக்குரிய முகமும் கொண்டிருந்தாள்,  நீல நிற டிரௌசர் அணிந்திருந்தாள், ஷு மஞ்சள் நிறத்தில் இருந்தது,  கண்கொட்டாமல் சிலநிமிடங்கள் அவளையே பார்த்தபடி தன்னை மறந்து நின்றிருந்தாள்,  தூரத்திலிருந்து ஞானத்தின் குரல் " அங்க என்ன வேலையை பார்க்க நின்னுட்டு இருக்க " என்று கத்துவது கேட்கவும் சுதாகரித்து வேலையில் கவனம் செலுத்தினாள், ஆனால் அந்த பார்பி கேள் மீதுதான் அவள் கவனம் இருந்தது,  வரிசையாக எல்லா துணிகளிலும் பார்பி கேர்ள்கள்,  எல்லாமே அவளையே பார்த்து கொண்டிருப்பதாக உணர்ந்தாள், பின் அந்த உணர்தலை தனக்குள் உணர்ந்து சிரித்தாள். 


டீ பிரேக் நேரம் ஆகியிருந்தது,  அவள் சிறுநீர் கழிக்க கழிவறை நோக்கி சென்றாள், அது கூடத்தின் நேர்பின்னால் இருந்தது,  கூடத்தின் பின்கதவு வழியாக சென்றாள்,  கழிவறையின் முன் திருப்பத்தில் சட்டெனெ அருள் நிற்பது தெரிந்து சரஸ்வதி துணுக்குற்றாள்,  சில நொடிகள்தான் , அவன்  சிரித்தவாறே சுற்றும்முற்றும் பார்த்து சட்டெனெ சரஸ்வதியின் மார்பை வேகமாக கசக்க ஆரம்பித்தான், அவள் அவன் கைகளை பலவந்தமாக தடுத்து தள்ளி  கழிவறைக்கு உள்ளே புகுந்து தாழை போட்டு  கொண்டாள்,  அவன் சோர்வுற்றவனாக நடந்து கூடத்திற்கு முன்பு நின்றிருந்த டீ டேபிள் நோக்கி நடந்தான்,  அவள் அவன் போனதை உணர்ந்து வெளியே வந்தாள்,  பின் அவளும் டீ டேபிள் நோக்கி நடந்தாள்.  டீ சாப்பிடும் தருணத்தில் இருவருமே ஒருவரையொருவர் நோக்கி கொள்ள வில்லை,  அவள் முகத்தில் அப்படியான நிகழ்வு நடந்ததை போன்ற எந்த சலனமும் இல்லாது இருந்தாள்,  பின் டீ நேரம் முடிந்து வேலை ஆரம்பித்ததும் பழையபடி வேலையில் மூழ்கினாள்,  பார்பி கேள்கள் அவளை பார்க்க விரும்பி கொண்டிருந்தன,  ஆனால் அவள் தனக்குள் மூழ்கி வேலையில் ஆழ்ந்தாள். 


மதிய நேரத்தில் எல்லோரும் உணவு கூடையை எடுத்து உணவு அருந்த அமர்ந்து கொண்டிருந்தனர்,  சரஸ்வதி அருளுக்கு அருகில் போய் அமர்ந்து கொண்டாள்,  இருவரும் உண்டு கொண்டிருந்தனர், அவள் தனது குழம்பு பாத்திரத்தில் இருந்த குழம்பில் கொஞ்சம் அவனுக்கு கொடுத்தான்,  மெதுவான அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் " இது மாதிரி இனிமேல் பண்ணாத " என்றாள். 


சரஸ்வதி மீது அருள் கொண்ட ஆர்வம் அவனுக்கு ஞானம் சொல்லி வந்த ஒன்று,  சரஸ்வதி இதுவரை ஏலெட்டு பேருடன் குடும்பம் நடத்தியவள் என்று ஞானம் முதலில் சொன்னபோது அருள் அதிர்ந்தான்,  அவளில் அது மாதிரி எந்த இயல்பையும் அவன் அதுவரை கண்டதில்லை,  அவள் தன் வேலை தவிர வேறு எதிலும் ஆர்வமில்லாதவள் அவள் என்று எண்ணிக்கொண்டிருந்தான், வீண் பேச்சு, சிரிப்பு எதுவும் அவளிடம் இருக்காது,  ப்ரோக்ராம் செய்து அளிக்க பட்ட எந்திரம் போல வேலை பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டிருப்பவள் என்று அவனுக்கு தோன்றும்.  ஞானம் அப்படி சொன்னபோது அவனுக்கு அது பெரிய ஆச்சிரியம் அளித்தது. 


ஞானத்திடம் அருள்" இப்ப யார்கூட இருக்கா " என்று கேட்டான்,  அவன் அவனை ஏறஇறங்க பார்த்து " இப்ப யாரும் இல்ல, அவன் பையன் இங்க காலேஜ் படிக்க இந்த ஊர் வந்தது முதல் மாறிட்டா " என்றான், " அதுக்கு முன்னாடி புருஷன் மாதிரி எவனாவது கூட இருப்பான், ஒருவருசம் இரண்டு வருஷம் னு, அப்பறம் ஆள் மாறும்,  நான் கூட கொஞ்சநாள் வைத்திருந்தேன் " என்று கண்களை சிமிட்டி சிரித்தான். 


அருள் அதன் பிறகு அவளிடம் எவ்வளவோ நெருங்கி பார்த்தான்,  உண்மையில் படுதீவிரமாக காதலித்தான்,  அவளது மூக்குத்தி முகம் அவனுக்கு கொள்ளை பிரியமாக இருந்தது,  பற்கள் சற்று முந்தியிருந்தாலும் அதை உதடுகள் வைத்து அழகாக மறைத்து கொள்வாள், அப்படி செய்யும்பொழுது அவளும் முகம் உம் என்று இருக்கும், அதை மிக ரசிப்பான்,  மாசு மருவமில்லாத வெளிர் கருப்பு நிறம், வெயிலில் மின்னக்கூட செய்யும் என்று நினைத்து கொள்வான்,  அவளுக்கு முடி குறைவு என்பதுதான் அவனுக்கு சற்று வருத்தத்தை கொடுத்தது,  அவளது இளம்தொப்பை சேலையால் இல்லாதது போல மறைமாயம் செய்திருக்கும்,  அளவான மார்புகள்,  அவள் அவனை பாக்காத போது அவனது கவனம் அவளது மார்பில்தான் இருக்கும்,  இருமுறை எதேச்சையாக இடிப்பதை போல அவளது பிருஷ்டத்தை அவன் உடல் தொட்டிருக்கிறது,  அவளிடம் எந்த சமிஞ்சையும் வெளிப்படாது, அவள் என்ன உணர்கிறாள் என்று அறியாது குழம்பிப்போய்த்தான் மார்பில் கைவைக்கும் யோசனைக்கு வந்தான். 


வேலை நேரம் முடியும் சமயம் நெருங்கிகொண்டிருந்தது, அவள் முதலாளி இருக்கும் ஆபிஸ் நோக்கி சென்றாள், அவள் செல்வதை அருள் சற்று திகிலுடன் நோக்கி கொண்டிருந்தான்,  ஞானமும் அவள் ஆபிஸ் போவதை பார்த்து கொண்டிருந்தான்,  உள்ளே டேபிள் ஒரு இளைஞன் இருந்தான் அவனது தந்தை உருவாக்கிய நிறுவனம் அது, இப்போது இவன் நிறுவனத்தை பார்த்து கொண்டிருந்தான்,  என்ன என்பதை போல அவளை பார்த்தான்,  அவள் " பையனுக்கு காலேஜ் பீஸ் கட்ட பணம் இல்லைனு பத்தாயிரம் ரூபா கேட்டிருந்தேன்,  கொடுத்தீங்கனா ரொம்ப உதவியா இருக்கும் " அவன் சற்று நிமிடங்கள் எடுத்துக்கொண்டு " இப்படி அட்வான்ஸ் வாங்கிட்டே இருந்தா எப்ப இதெல்லாம் கட்டி முடிப்பீங்க " என்று சொல்லியபடி " இந்தாங்க " என்று பணம் எடுத்து கொடுத்தான்.  அவள் மகிழ்வுடன் வாங்கி வெளியேறினாள். 


முதலாளியின் மகன் தனக்குள் ஒரு நிறைவை உணர்ந்தான், அவனுக்கு அப்பா சில விதிகளை வைத்திருந்தார், அதிலொன்று இவளுக்கு பணஉதவி செய்து கொடுப்பதை எந்த காரணம் கொண்டும் நிறுத்த கூடாது என்பது,  கூடவே இவள் பற்றி அப்பா தன்னிடம் சொன்னதும் அவனுக்கு ஞாபகம் வந்தது," தங்கமான பொண்ணுடா அவ "

சரஸ்வதி வீட்டிற்கு வரும்போது இரவு9 மணி ஆகி இருந்தது, சங்கர் பாயில் அமர்ந்து ஏதோ எழுதிகொண்டிருந்தான், அவள் வரும்போது புரோட்டா வாங்கி வந்திருந்தாள், வந்தவள் சுவரில் சாய்ந்து அப்படியே அமர்ந்து கொண்டாள், சங்கர் எழுந்து இரு தட்டுக்களை எடுத்து வந்து அதில் புரோட்டாகள் வைத்து சால்னா ஊற்றினான், இருவரும் சாப்பிட்டனர், சங்கர் வகுப்பில் நடந்தவைகளை, தனக்கு ஆங்கிலம் சரியாக வராத குறைகளை எல்லாம் சொலலி கொண்டிருந்தான்,சரஸ்வதி ஏதும் பேசமால் அவனை வாஞ்சையோடு பார்த்து கொண்டிருந்தாள்.

இரவில் தூங்கிகொண்டிருந்த சங்கரின் கன்னங்களை வருடி, அவன் நல்ல உடை அணிந்து பெரியவேலையில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதை போல எண்ணி கனவு கண்டு கொண்டிருந்தாள்!

Sunday, November 21, 2021

மிச்சம் ( சிறுகதை )

 

" வாடா சீக்கிரம்,  நான் வெளிய போகணும் " 

" அண்ணா 5 நிமிஷம்னா வந்துடுவா, பார்த்துட்டு வந்துடறேன் ணா " என்றேன்.  போனில் அழைத்தது சேகர்அண்ணன்,  என் முதலாளி, இவரின் பலசரக்குக் கடையில்தான் பத்து ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன்.  இப்போது நான் தினமும் காலையில் சந்திக்கும் விநாயகனையும் செல்வியையும் காண வந்தேன்,  விநாயகன் கல் என்பதால் எங்கும் ஓடிவிட முடியாதது என்பதால் இருந்தே இடத்திலேயே அமர்ந்திருக்கிறார்.  கொஞ்சம் முறைப்பது போல தெரிகிறது,  நான் அவர் சிரிப்பது போல தோன்றுகிறார் என்று எண்ணிக்கொண்டேன், அந்த எண்ணம் அவருக்குள் புகுந்து கொள்வது போலத்தான் தெரிகிறது ! ஐயர் அருகில் வந்து " என்ன இன்னும் உன் சினேகிதியை காணுமே " என்று சொல்லி சிரித்தார்.  செல்வி இந்நேரம் வந்து இருக்க வேண்டும், இன்னும் காண வில்லை, சாலையையே பார்த்து கொண்டிருந்தேன், அவள் வருவதை எதிர்நோக்கி, வெளிர்மஞ்சள் மஞ்சள் தாவணி இன்று அணிந்து வருவாள் என்று எண்ணிக்கொண்டேன்,  அவளுக்கு அது பிடித்த நிறம், எனக்கும் !.


அவள் தற்போது லூர்து மாதா கல்லூரியில் வணிகவியல் மூன்றாம் ஆண்டு படிக்கிறாள்.  நாங்கள் காதலிக்க ஆரம்பித்து 5 வருடம் கடந்து விட்டது.  அவள் 10 வது முடிக்கும் போது ஆரம்பித்தது.  யாருக்கும் தெரியாது, எங்களுக்கே பிடி கிடைக்க 5-6 மாதம் ஆனது, பிறகுதான் அவளை நேசிக்கிறேன் என்று புரிந்து கொண்டேன், அதை அவளிடம் சொன்னவுடனே ஏற்று கொண்டு வெட்க சிரிப்புடன் பொருள் வாங்காமலே திரும்பி சென்றாள் ! கல்லூரி படிப்பு முடிந்தவுடன் அவள் வீட்டில் சேகர் அண்ணாவிடம் பேச சொல்ல எண்ணியிருந்தேன்.  அண்ணனுக்கும் சமீபத்தில்தான் தெரியும், கேட்டதும் அதிர்ச்சி கொண்டவர் பாக்கலாம் என்று சொன்னார், பிறகு இந்த காதலை பற்றி எதுவுமே என்னிடம் கேட்டதில்லை. 


7 வது படிக்கும் போது அப்பாவிற்கு உடல்நலம் சுகமில்லாமல் போனது,  சாதாரண காய்ச்சல் முற்றி,  தீவிர காய்ச்சல் ஆகி படுக்கையில் வீழ்ந்தார், பிறகு உடல்நலம் தேற பல மாதங்கள் ஆனது.  தேறினாலும் முன்பு போல அவரால் பணிகளை செய்ய இயல வில்லை. அம்மா கடன்வாங்கி குடும்பம் நடத்தினாள். நான் காந்திஅக்கா மற்றும் நளினிதங்கைக்குட்டி மூவரும் அம்மா அப்பா, அப்பாவின் அம்மா என 6 பேர் சேர்ந்து வாழ்ந்தோம்,  வீட்டின் பத்திரம் அடகு வைத்து சிலமாதம் குடும்பம் ஓடியது.  அம்மா அருகில் வீட்டுவேலைகளுக்கு செல்ல ஆரம்பித்தாள்.  நாங்கள் மூவரும் படித்து கொண்டிருந்தோம்.  பாட்டி அம்மாவை எப்போதும் வைது கொண்டிருப்பாள், அதனாலேயே அவளை எனக்கு பிடிக்காது.  எனக்கு அம்மாதான் பெரிய இஷ்டம், அப்பா மீது விருப்பமும் இல்லை வெறுப்பும் இல்லை,  ஆனால் அவர் உடல்நிலையில் நிகழும் சின்ன பிரச்சனைகளும் எனக்கு மனநடுக்கம் கொடுத்தன.  ஒரு இரவு அம்மா ஏதும் உணவு செய்ய வில்லை,  என்னிடம் வள்ளியம்மை பேக்கரியில் பிரட் வாங்கி வர சொன்னாள் . பங்கு பிரித்து ஆளுக்கு மூன்று துண்டுகள் கிடைக்க சாப்பிட்டோம், அக்கா மெதுவாகத்தான் சாப்பிடுவாள்,  நான் சீக்கிரம் சாப்பிட்டு அக்காவிடம் பிடுங்க பார்ப்பேன்,  அவள் ப்ரட் மீது விளையாட்டுக்கு துப்பி வைப்பாள், நான் பிடுங்க கூடாது என்று, ஆனாலும் அதையும் பிடுங்க பார்ப்பேன், ஆனால் நளினி குட்டியிடம் பிடுங்க மாட்டேன்,  அம்மா அவளாகவே ஒரு துண்டை எனக்கு கொடுப்பாள்.  அம்மாவுக்கு டீ பிடிக்கும், டீ பைத்தியம் என்றே சொல்லலாம், ப்ரட் ம் டீ யும் தான் எங்கள் வீட்டில் வாரத்திற்கு மூன்று நாலாவது துரித உணவாக இருக்கும்.  அப்பா முன்பு வேலைக்கு போய் கொண்டிருக்கும் போது நல்ல பணம் அன்று கிடைத்தால் ஆபிதா கடையில் புரோட்டாவும் சுக்காவும் வாங்கி வருவாள், அவர் வரும் நேரம் நாங்கள் தூங்கி கொண்டிருப்போம், அம்மா எழுப்பி விட்டு கொடுப்பாள், ஆசைஆசையாக தின்போம், அம்மா சுக்கா விரும்பி சாப்பிடுவாள்.  அப்பா முடியாமலான பிறகு புரட்டடா சாப்பிடவே இல்லை. 


அன்று டீ, பிரட் சாப்பிட்டு உறங்க பாயில் வரிசையாக நளினி குட்டி நான் எல்லாம் படுக்கும் போதுதான் என்னை அழைத்தாள்,  வெளியே வந்தேன், அம்மா வெளித்திண்ணையில் அமர்ந்து என்னை அருகில் உட்கார சொன்னாள்.  அருகில் உட்கார்ந்தேன், கைகளால் என் உடலை அனைத்து கொண்டாள்,  பின் கைகளால் என் முடியை கோதினாள்.  அவள் கண்கள் கலங்கி இருந்தன,  " உனக்கு சேகர் அண்ணாவ தெரியும்ல, அவரு திருப்பூர்ல மளிகை கடை வச்சிருக்கார், வேலைக்கு பையன் வேணும்னு சொன்னார்,  அப்பானால இனி முன்ன போல வேலைக்கு போக முடியாது, என்னால தனியா சமாளிக்க முடியல, எனக்கு வழி தெரியல,  காந்தி பெரிய பொண்ணு ஆனதுல இருந்து வயிறுல எந்நேரமும் நெருப்பு எரியுது, எப்படி இதுகளை பாத்துக்க போறேன் னு தெரியாம பயமாவே இருக்கு.  சேகர் அண்ணா மாசம் 1000 ரூபா தரேன் சொன்னார், 3000 ரூபா முன்னாடியே கொடுத்து கூட்டிட்டு போயிக்கறேன் னு சொல்றார், மாசம் கொஞ்சம் கிடைச்சா வீட்டுல கொஞ்சம் பசி அடங்கும்,  உன்னையும் நல்லா பாத்துக்கறேன் னு சொல்றார், பத்து வருஷம் போனா உனக்கு தனியா கடை வச்சு கொடுத்திடறேன் னு சொல்றார்,   உன் படிப்பு போயிடும்,  ஆனா அம்மாக்கு வேற வழியில்லைடா" சொல்லி முடிக்கும் போது அம்மா அழுதாள். " நான் போறேன்மா " என்று சொல்லி அம்மாவை கட்டி கொண்டேன்.  " அழாதமா " என்றேன். 


அடுத்த நாளே சேகர் அண்ணாவுடன் கிளம்பி விட்டேன்.  கடை காலை 5.30 க்கு திறந்தால் இரவு மூட 11 மணி ஆகிவிடும். சேகர் அண்ணாவின் மனைவி மஞ்சுக்கா என்னை தன் குட்டி சகோதரன் போல் பார்த்து கொண்டாள், அவர்கள் என்ன சாப்பிடுவார்களோ அதுதான் எனக்கும் கிடைக்கும்.  நான் இவர்களின் பிள்ளையான ராணி குட்டியிடம் என் காந்திஅக்கா, நளினிகுட்டிகெல்லாம் கொடுக்க வேண்டிய அன்பையெல்லாம் சேர்த்து கொடுத்தேன் .  அவளுக்கும் என்னை பிடிக்கும், வால் போல என் பின்னாலேயே திரிவாள். 


மூன்று மாதம் ஒருமுறை வீட்டுக்கு வருவேன், என் சம்பளத்தை அம்மாவிற்கு மாதம் மாதம் சேகர் அண்ணா அனுப்பி விடுவார், நான் ஊருக்கு போகும்போது 500 ரூபா தருவார்,  நான் எல்லாவற்றையும் அம்மாவுக்கு அப்பாவுக்கு அக்காவுக்கு நளினிக்கு வாங்கி கொடுப்பேன்.  


இப்படியே நாட்கள் போனது.  நான் வளர்ந்தேன், எனக்கு வருடம் கூடக்கூட சம்பளம் சேர்த்து கொடுத்துவந்தார்.  அக்காவுக்கு நல்ல வரன் வந்ததும் அடமானம் வைத்த வீட்டை அடமானம் வாங்கியவரிடமே விற்று மேலும் பணம் வாங்கி அக்காவை  கட்டி கொடுத்தோம், வீட்டை வாங்கிய அண்ணாச்சி நல்லவர்,  சொற்ப வாடகை வாங்கி எங்களை அங்கேயே தங்கிக்கொள்ள அனுமதித்தார், அம்மாவுக்கு அப்பாவுக்கு போன் வாங்கி கொடுத்தேன், அம்மாவுக்கு என் மீது பெருமை, குடும்பத்தை கட்டி காப்பாற்றுகிறேன் என்று.  நளினியை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதே எனக்கும் அம்மாவுக்கும் கனவாக இருந்தது. 

 செல்வியை காதலிப்பது என்பதை அம்மாவிடம் சொன்னால் எப்படி எதிர்கொள்வாள் என்று என்னவே திகிலாக இருந்தது, எனக்கு என் தனிவிருப்பம் எதுவும் என் குடும்பத்திற்கு தீங்கு தந்து விட கூடாது என்ற பயம் இருந்தது, நான் தனியாக கடை வைத்து என்னிடம் காசு வந்த பிறகே அவளை கட்ட முயற்சிப்பேன்,  இதுதான் என் எண்ணம், அம்மா போன வருடம் சேகர் அண்ணா ஊருக்கு வந்த பொழுது " பையனுக்கு கடை வச்சு தரேன் னு சொன்னீங்க " என்று கேட்டாள், அவரும் "தெரியும்மா வருஷ கடைசில பண்ணி கொடுத்திடறேன் " என்றார்.  நான் கிட்டத்தட்ட பகல்கனவுகளில் என் புது கடையில் வாழ்ந்து கொண்டிருந்தேன். 


செல்வி நன்றாக படிப்பாள்,  நாங்கள் எங்கேயும் சேர்ந்து சுற்றியதில்லை,  பேசி கொண்டது கூட குறைவுதான்,  உண்மையில் இந்த 5 வருடமும் பார்வைகள் வழியாகவே காதலித்தோம், முதலில் கண்டுபிடித்தது மஞ்சு அக்காதான்,  அன்றே சேகர் அண்ணாவிடம் சொல்லி விட்டார், அவர் கேட்கவும் நான் தயங்காமல் ஆமாம் என்றேன்.  அதிகப்பிரசங்கி தைரியத்தில் " அண்ணா நீங்கதான் சேர்த்து வைக்கணும் என்றேன் " அவர் ஒன்றும் சொல்ல வில்லை, ஆனால் அவர் பிறகு கொஞ்சம் கடுமை காட்டினார்,  ஆனால் அந்த கடுமைக்கு காரணம் இந்த காதல் எனக்கு தோன்றவில்லை, ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று சற்று புதிராக இருந்தது எனக்கு. 


ஊர் விட்டு இங்கு வந்ததில் இருந்தே தினமும் இந்த பிள்ளையார் சன்னதிக்கு வந்து விடுவேன்.  அய்யருக்கு என்னை பிடிக்கும்,  பிரசாதம் அல்லது பழம் அல்லது தேங்காய் துண்டு ஏதாவது தருவார், ஒன்றும் தராமல் அனுப்ப மாட்டார்.  செல்வி காலேஜ் போக துவங்கியதில் இருந்து தினம் கோவிலுக்கு வர துவங்கினாள், இருவரும் ஒரே நேரத்தில்தான் வருவோம், அவள் என்னை பார்க்கத்தான் கோவிலுக்கு வருகிறாள் என்றே சொல்லிக்கொள்ளலாம்.  பேச வெல்லாம் மாட்டோம், அவளை நான் பார்ப்பேன், அவள் என்னை கிட்டத்தட்ட பார்ப்பாள்!, அவ்வளவுதான், இன்று வரும் நேரம் கடந்து 20 நிமிடம் ஆகிவிட்டது. இன்னும் வரவில்லை. பார்க்காமல் போனால் நிம்மதியாக இருக்காது, எனவே நகம் மனம் தவித்தபடி நின்றிருந்தேன். 


இரண்டு ஆட்டோக்கள் கோவில் நோக்கி வேகமாக வந்தன,  10 பேர் மேல் இறங்கினர், எல்லோரும் கரடு முரடாக இருந்தார்கள்,  வந்தவர்கள் என்னை கோவிலில் இருந்து வெளியே இழுத்து வந்து அடித்து கீழே போட்டு மிதித்தனர், ஐயர் வந்து தடுக்க பார்த்தார், ஒருவன் அவரிடம் " ஐயர் னு பாக்க மாட்டேன், மிதிச்சுடுவேன், அந்த சைடு போ " என்று சொல்லி அவரை மிரட்டினான்.  வந்தவர்களில் ஒருவர் செல்வியின் அப்பா! நான் யாரிடமும் எதுவும் வேண்ட வில்லை, அடிக்காதீர்கள் என்று கூட சொல்ல வில்லை,  அடிவாங்கி வாங்கி கொண்டிருந்தேன்.  அலையலையாக என் உடலில் கைகளும் கால்களும் வேகமாக வந்து மோதி கொண்டிருந்தன,  நெற்றியில், பற்கள் இடையில் ரத்தம் வந்து கொண்டிருந்தன, ஒருவர் சற்றென என் மர்ம உறுப்பின் மீது காலால் ஓங்கி மிதித்தான், அதுவரை அமைதியாக இருந்த நான் வழி தாங்க முடியாமல் கத்தி கதறினேன். 


அரசு ஆஸ்பத்தியில் இருந்து மூன்றாம் நாள் வெளியே வந்தேன்,  சங்கடம் இருந்தாலும் வேறு வழியில்லாமல் கடைமுன்பு போய் நின்றேன்,  இந்த மூன்று நாளும் என்னிடம் விசாரிக்கவோ, மருத்துவமனை பக்கமோ சேகர் அண்ணன் வரவே இல்லை.  எனக்கு அவர் முகம் பார்க்கவே சங்கடமாக இருந்தது தெருவில் என்னால் அவருக்கு அவப்பெயர் வந்துவிட்டதே என்று வருந்தினேன்.  


என்னை பார்த்ததும் மெல்ல அதிர்ச்சி அடைந்தார்,  சட்டென கோபம் வந்தவராக " இங்க எதுக்கு வந்த,  வெளிய போ, இங்க வராதே, உன்னால என் மானமே போச்சு " என்றார்.  தலைகவிழ்ந்து நின்று கொண்டிருந்தேன், பிறகு அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.  எனக்கான கடை எனும் கனவு முறிந்த ஒரு பக்கம், காதல் முறிந்த வேதனை ஒருபக்கம், இதையெல்லாம் விட இதை எப்படி வீட்டில் அம்மாவிடம் சொல்வேன் என்ற பயம்தான் என்னை புரட்டி எடுத்தது.  என்ன செய்வது, எங்கு போவது என்றே தெரியவில்லை, கால்கள் தன்னிச்சையாக கோவில் பக்கம் வந்து நிறுத்தியது. 


ஐயர் இருந்தார்,  அவரை பார்க்கவே நாணமாக இருந்தது.  வெளியேவே நின்று கொண்டேன்,  அவர் என்னை எதேச்சையாக பார்க்கவே ஓடிவந்து கையை பிடித்து கொண்டார், உள்ள வாடா என்று அழைத்து உள்ளே கூட்டி போனார்.  எல்லோருக்குமே வைத்திருந்த பிரசாதத்தை பெரிய தட்டில் போட்டு என்னை சாப்பிட சொன்னார்,  கண்கள் கலங்கி அழும் நிலைக்கு வந்து விட்டிருந்தேன். " சாமி எனக்கு எங்க போறது, என்ன பண்றதுனே தெரியல " என்று சொல்லச்சொல்ல அழுதேன். " உனக்கு ஒன்னும் ஆகாது, சாமி உன் கூட இருக்கும்,  நான் கீரைக்கார வீதியில் இருக்கற சண்முகம் அண்ணாச்சி கிட்ட உன்ன பத்தி சொல்லி இருக்கேன், நீ அங்க போ, நான் அனுப்பினேன் னு சொல்லு, அவர் உன்னை பாத்துக்குவார் " என்றார், நான் நன்றியில் கண்ணீர் மல்கினேன்.  அழாதடா என்றார் சொல்லும் போது அவர் முகத்திலும் கண்ணீர் திரண்டது, நான் என் அம்மாவை அவரில் கண்டேன். 


கிளம்பும் போது 100 ரூபாய் என் மேல் சட்டைக்குள் வைத்தார், "போகும்போது டீ சாப்பிடு,முகம் எல்லாம் கழுவி சுத்தமா போ " என்றார். பின் " அந்த பொண்ணோட அப்பாட்ட சொன்னது யாருனு தெரியுமா " என்றார்,  நான் அதிர்ச்சியில் நின்றேன் " சேகர்தான்,  அவனுக்கு இப்ப உனக்கு கடை வச்சு கொடுக்க வேண்டிய காசு மிச்சம் " என்றார். 

Thursday, October 7, 2021

தீ

 கோவில் வெளிவாசல் முன் கூச்சலும் குழப்பமுமாக பலர் சுற்றி நின்று வாக்குவாதம் செய்து கொண்டிருந்ததை தூரத்திலேயே சந்திரர் பார்த்தார், அவர்தான் இந்த கோவிலின், கோவிலை சுற்றி இருக்கும் அந்தண மக்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர்,  இந்த பொறுப்பு அவரது குடும்பம் தலைமுறை தலைமுறையாக பெற்று வருவது.  கோவில் முன் இப்படி களேபரம் இருப்பதை பார்த்து வருத்தமடைந்து வேகமாக அங்கு வந்தார். அவரை பார்த்ததும் சற்று கூச்சல் குறைந்தது.  சந்திரர் மற்றவர்களை பார்த்து" இங்கு என்ன பிரச்னை, ஏன் கூச்சலிடுகிறீர்கள் " என்றார்.  அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் இன்னொருவரை சுட்டி கட்டி இவர் கோவிலினுள் நுழைய பார்க்கிறார், இவர் புலையர்,  உங்களுக்கு அனுமதியில்லை என்று சொன்னால் கேட்க மறுக்கிறார், அடம் பிடிக்கிறார், அழுகிறார் " என்றார்.  சந்திரர் அவரை திரும்பி பார்த்தார்,  தொட்டால் உதிர்ந்து விடும் போன்ற மென்மையான சிற்றுடலுடன், கண்களில் கண்ணீருடன், இறைவனை காணும் ஏக்கத்துடன் ஒருவர் நின்றிருந்தார், "சந்திரர் உங்கள் பெயர் என்ன" என்றார், அவர் " என் பெயர் நந்தன்,  நந்தனார் என்று எங்கள் ஊரில் அழைப்பார்கள் என்றார். 


சந்திரர்க்கு நினைவு தெரிந்த,  சுயமாக யோசிக்க துவங்கிய நாள் முதல் இந்த மன குழப்பமும், சஞ்சலமும் இருந்தது. சிறுவயதில் தன் தந்தை சுரேந்திரரிடம் சந்திரர் தொடர்ந்து கேட்ட கேள்வி இதுதான் " ஏன் பிறர் ஆலயத்திற்குள் நுழைய கூடாது " என்பதுதான்.  சுரேந்திரர் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு பதில் தருவார்,  அவர்கள் வேறு சமூகம்,  கோவிலுக்கு என்று நியமங்கள்  உண்டு, அதை அவர்கள் பின்பற்றாதவர்கள், இந்த கோவிலுக்கு செல்லும் உரிமை என்பது இந்த நியமங்கள் பின்பற்றும் சமூகத்திற்கு உரியது, நாம் அந்த நியமத்தை பின்பற்றும் சமூகம்,  மேலும் இது பாரம்பரிய உரிமை,  அந்த உரிமை நம்மிடம் மட்டுமே உள்ளது என தனக்கு தோன்றியபடி ஒவ்வொருமுறையும் ஒவ்வொன்றாக சொல்வார்,  ஆனால் சந்திரர்க்கு இதில் எதிலும் திருப்தி கிட்டியதில்லை.  பிறகு வளர்ந்து வாழ்க்கை சிக்கல்களுக்குள் புகுந்து இதை எல்லாம் யோசிப்பதை விட்டுவிட்டார், தந்தை மறையவே சமூக தலைவர் பொறுப்பும் அவருக்கு வந்து சேர முற்றிலும் இதையெல்லாம் யோசிப்பதை மறக்கலானார்.  நந்தனை பார்த்தபோது சந்திரர்க்கு  இதேல்லாம் மனதில் திரும்ப வந்து நின்றது. சந்திரர்க்கு நந்தனை பார்த்தவுடனே பிடித்து போனது,  பக்தி தவிர வேறேதும் அறியாத முகம். 


"நந்தனாரே, கோவிலுக்குள் செல்வதெற்கென்று சில நியமங்கள் உண்டு,  நீங்களோ, உங்கள் சமூகத்தோரே உள்ளே நுழைய அனுமதி இல்லை,  இதுதான் இங்கு நடைமுறை, இந்த நடைமுறையை மாற்றும் அதிகாரம் எனக்கில்லை,  மாற்றம் நிகழாமல் பார்த்து கொள்ளும் இடத்திலேயே நான் இருக்கிறேன்,  எம்மை புரிந்து கொள்ளுங்கள்.  " என்றார். 

நந்தனார் பதில் ஏதும் சொல்லாமல் தலை கவிழ்ந்து அழுது கொண்டிருந்தார்,  சுற்றி இருந்த எல்லோரும் என்ன செய்வது என்றறியாமல் வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்,  எல்லோரின் முகத்திலும் நந்தனார் அழுவதை கண்ட துக்கம் இருந்தது.  கூட்டத்தில் இருந்த ஒருவர் "நியமத்தை மாற்ற முடியாது என்பதால்தான் உங்களை உள்ளே விட மறுக்கிறோம்,  மற்றபடி உங்களை அவமதிப்பதிப்பதற்காக இல்லை,  எங்களுக்கே கூட எல்லோருக்கும் எல்லாம் அனுமதியில்லை, விலக்க பட்டவர்கள் கூட உண்டு " என்றார். 


நந்தனார் கண்ணீருடன் பேசலானார் "இறைவனை தரிசிக்க வழி இல்லை என்றால்,  தரிசிக்கும் தகுதி எனக்கில்லை என்றால் பிறகு இந்த உடலுடன் வாழ்ந்து என்ன பயன்,  என்னை மாய்த்து கொள்வதே சரி " என்றார். 

சந்திரர் துடித்து " இது என்ன பிதற்றல் பேச்சு,  உம் பக்தி ஈடு இணையில்லாதது,  இறைவன் எப்போதும் உன்னுடன் இருப்பார்,  தயவு செய்து வீட்டிற்க்கு செல்லுங்கள், இறைவனின் ஆசிர்வாதம் உன்னோடு உடன் இருக்கும் " என்றார்.  

நந்தனார் ஏதும் சொல்லாமல் கண்ணீருடன் நடந்து விலகி சென்றார். 


செல்லும் போது மனம் முழுதும் தனக்கு இனி வாழ விருப்பமில்லை,  இறைவனை காணாமல் வாழ்ந்து என்ன பயன் என்ற எண்ணமே நந்தனாருக்குள் அரற்றி கொண்டிருந்தது.  நீண்ட தூரம் நடந்தார், நடந்த களைப்பு, உண்ணாமல் இருந்தது எல்லாம் அவரை களைப்பிற்குள்ளாக்கியது,  இருட்டவும் தொடங்கியது,  தூரத்தில் இருந்த ஆலமரத்தின் அடியில் சென்று தரையில் படுத்து கண்மூடினார்,  சுவாசத்திற்கு இணையாக அவர் மனம் முழுதும் அவ்வளவு களைப்பிலும் இறைவனின் நாமம் குடிகொண்டிருந்தது. 


சந்திரர்க்கு இருப்பே கொள்ளவில்லை, முழு தவறு என்று தெரிந்திருந்தும் நியமங்களின், பாரம்பரிய தொடர் வழக்கங்களின் பாரம் தன்னை ஏதும் செய்யவிடாத இயலாமையை எண்ணி தூங்க முடியமால் மனம் தவித்து கொண்டிருந்தார். சந்திரர் உறங்க நெடுநேரமாகி விட்டது. 


மனித உடல் ரூபத்தில் இறைவன் சந்திரர் முன் தோன்றினார்,  சந்திரர் ஆனந்தத்தில் கை தொழுதார், சுற்றி மேகங்கள் சுழன்று கொண்டிருந்தது.  இறைவன் சந்திரரிடம் " அவனை அழைத்து உள்ளே கொண்டு வா, என்னை காண வை " என்றார்.  சந்திரர் " வழக்கத்தை நான் மாற்ற இயலாதே ஸ்வாமி " என்றார், மேலும் " அந்தணர் அல்ல அவர் " என்றார்.  " பிரிவுகள் உங்களுக்குள்தான், எனக்கு நீங்கள் எல்லோரும் ஒன்றுதாம் " என்றார். சந்திரர் " கோவில் நெறிமுறைகள்.. " என்று ஏதோ சொல்லவந்தார், இறைவன் மறுத்து " அதை நான் ஏதும் மறுக்க வில்லை,  அப்படியான நெறிமுறைகளை, வழக்கங்களை அவனுக்கு கற்று கொடு " என்றார்.  தன்னுடல் உலுக்க படுவதை உணர்ந்து எழுந்த சந்திரரை நோக்கி அவர் மனைவி " என்ன தூக்கத்தில் பிதற்றி கொண்டிருக்கிறீர்கள் " என்றார்,  சந்திரர்க்கு கடவுள் தோன்றியது கனவில் என்பது உரைத்தது, முகம் புன்னகையும் மனம் நிம்மதியும் உற்சாகமும் கொண்டது. 


நந்தனாரை ஆளனுப்பி கூட்டி வந்தார், தன் சமூகத்திற்கு தன் கனவில் இறைவனை உரைத்ததை சொன்னார்.  நந்தனார் பிரமை பிடித்தவர் போல் நின்று கொண்டிருந்தார், மெல்ல சந்திரர் உரைத்தது மனதில் புரியவே ஆனந்தத்தில் கண்ணீர் வடித்தார்.  கோவிலின் நெறிமுறைகளை நந்தனார்க்கு சந்திரர் விளக்கினார், பின் மந்திரங்கள் ஓதி முப்பரி நூல் அணிவித்தார்.  பின் மங்கள ஒலிகள் பின்தொடர நந்தனாரின் கையை பிடித்து கொண்டு கோவிலுக்குள் அழைத்து சென்று கருவறைக்குள் கூட்டி வந்தார்,   ஆனந்தத்தில் நந்தனாரின் கண்களின் நீர் வழிந்து கொண்டிருந்தது.  சந்திரரே ஆரத்தி தட்டை எடுத்து இறைவனிடம் காட்டி அர்ச்சித்து பின் தீப தட்டை நந்தனாரினிடம் காட்டி கொண்டார், தீபத்தின் தீயொளியை இரு கைகளால் பற்றி கண்களில் ஒற்றி கொண்டார்,  சந்திரர்க்கு அந்த தீயொளி நந்தனாருக்குள் புகுந்து கொண்டது போல தோன்றியது. 






Friday, April 30, 2021

இந்து மதத்தில் சமத்துவம்

 

தலித் மக்கள் நலன் சார்ந்த உரையாடலில் என் நண்பர் அடிக்கடி சொல்வது இந்து மதத்தில் அடிப்படையிலேயே சமத்துவம் கிடையாது, தலித் மக்கள்  இந்து மதத்தில் இருந்து வெளியேறும் பட்சயதிலேயே அவர்கள் சமத்துவ தளத்திற்குள் வர முடியும், அதனால்தான் அம்பேத்கர் தன் மக்களை கூட அழைத்து கொண்டு  இந்து சமூகத்தில் வெளியேறி பவுத்தம் தழுவினார் என்பார்.  இதை முழுதும் ஒப்புக்கொள்ள முடியாவிட்டாலும் இந்துக்களிடம் இப்போதும் சாதிய நோக்கு, சாதி வழியான உயர்வு தாழ்வு பார்வைகள் இருப்பதை மறுக்க முடியாது, உண்மையில் சமீப ஆண்டுகளில் சாதிய சங்கங்களின் எழுச்சி காரணமாக இது பெருகி வருகிறது. இந்த கீழ்நோக்கு உண்மையில் இந்து சமூகத்தில் இருந்து அகற்ற வாய்ப்பு உள்ளதா என்பதை பார்க்கவே இந்த கட்டுரை எழுதி பார்க்கிறேன். 


சமீபத்தில் கோவை ஞானி மறைவையொட்டி ஜெயமோகன் எழுதிய தொடர் கட்டுரைகளை படித்தேன்,  இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தட்டுப்பட்டது. மார்க்சியர் என்றாலும் கூட கோவை ஞானிக்கு பண்பாடு/கலாச்சாரம்/மதம் மக்களில் செலுத்தும் தாக்கம், பங்களிப்பு பற்றிய புரிதல் இருந்திருக்கிறது.  இதை மறுக்க முடியாது என்று தெரிந்திருக்கிறது, எனவே இந்த பட்டபாட்டினுள் தங்கள் மார்க்சிய தத்துவத்திற்கு இயைந்து போகக்கூடிய கூறுகளை தேடி கண்டடைய முயன்றிருக்கிறார்கள்,  முக்கியமாக கோவை ஞானியின் இணை சிந்தனையாளரான எஸ். என். நாகராஜன் இதற்கு கிட்டத்தட்ட தீர்வையும் கண்டிருக்கிறார்.  அது அத்வைத பின்னணி கொண்ட வைணவ மனநிலையும் அதை வெளிப்படுத்திய ஆழ்வார்களும் கிட்டத்தட்ட மார்க்சியம் முன்வைக்கும் சமத்துவத்தை போதிக்க கூடியவைதான் என.  இவர் சமஸ் க்கு அளித்த பேட்டியில் வைணவ செயல்பாட்டில் ஒரு விஷயமாக முக்குறும்பை துறத்தல்  என்ற ஒன்றை சொல்கிறார், அந்த முக்குறும்பு என்பது சாதி செருக்கு, செல்வ செருக்கு, ஞான செருக்கு என இந்த மூன்றையும் துறத்தல் என.  இவைகளை வாசிக்கும் போது இந்து மதத்திலேயே சமத்துவத்திற்கான வழி இருந்திருக்கிறது, இருக்கிறது என்பதை உணர்ந்தேன். 


ஜெயமோகன் ஞானி பற்றிய கட்டுரைகளில் சொன்ன இன்னொரு விஷயமும் இந்த விவாதத்தில் முக்கியமானது என்று நினைக்கிறேன்,  அது இந்து மதத்தில் இருந்த சீரழிவுகளை போக்க தோன்றிய சீர்திருத்தவாதிகள் எல்லோரும் அத்வைத தரிசன மனநிலை கொண்டவர்கள் என்பது,  அதனை அடிப்படையாக கொண்டு இயங்கியவர்கள் என்பது.  என்னளவில் இது முக்கியமான திறப்பு, ஏனெனில் இந்து மதத்தின் பிரதான ஆதாரமான ஒரு தரிசனம் சமத்துவத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது என்பது, அதாவது அனைத்தும் கடவுளின் ரூபங்கள் என்றால் எல்லாமே சமம்தான் என்றாகி விடுகிறதுதானே, மனிதர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு பொருட்களும் சமம்தான்.  மனித சமத்துவத்தை முன்வைக்கும் மார்க்சியம் விட மேலான உலகிலுள்ள காணும் எல்லாமும் சமம் என்பது பலமடங்கு மேலானதல்லவா. இதை கையில் எடுத்து கொண்டுதான் இந்து மத சீர்திருத்தவாதிகள் மக்கள் சேவையே மகேசன் சேவை என்றார்கள்,  மக்களுக்கிடையே இருந்த சமத்துவமின்மையை நீக்க முயன்றார்கள். என்னளவில் இந்து மதத்தில் அதன் ஆதார தளத்தில் சமத்துவமின்மை இல்லையென்றிருந்தால் இம்மதம் மீது மனவிலக்கம் அடைந்திருப்பேன்.  ஏனெனில் ஆதார தளத்தில் இந்த அம்சம் இல்லையெனில் எவ்வளவு விவாதித்தாலும், மாற்றங்களை நோக்கி நகர முயன்றாலும் அது வீண்தான்.  இந்து மதத்தில் சமத்துவம் இருக்க வேண்டும் என்று எண்ணும் ஒருவனாக எனக்கு இந்துமதத்தில், அதன் ஆதார தளத்தின் அடிப்படை அம்சமே சமத்துவம்தான் என்று உணர்வது பெரிய கொண்டாட்டத்தை அளிக்கும் விசயம். 


ஆனால் புராணங்களில் சாதியவருண  உயர்வு தாழ்வு பார்வைகள் உண்டு,  இதை மறுக்க முடியாது, ஆனால் இந்த புராணங்கள் இந்து மதத்தின் ஆதாரங்கள் அல்ல,  மேலும் வருணங்கள் மாற்றிக்கொள்ள முடியும் என்பது, சாதிகள் மேல் கீழ் நகர முடியும் என்றிருப்பது இந்து மதத்தில் சாதிய ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் அவை நிலையானவை, மாற்றமுடியாதவை அல்ல என்பதை உணர முடிகிறது. 


இந்து மதத்தை வளர்ச்சி பாதைக்கு திருப்ப வேண்டும் என்றால் முதலில் நிகழ்த்த வேண்டியது இந்து மதத்தை பற்றி வெளித்தோற்றத்தில், மக்கள் எண்ணங்களில் இருக்கும் " இந்துமதத்தில் சமத்துவம் இல்லை " எனும் பிம்பத்தை கலைவதுதான்.  முதலில் இந்து மக்களில் உயர்சாதி மனநிலை கொண்டவர்களில் உயர்வு மனநிலையை நீக்கி சமத்துவ நோக்கை உருவாக்க வேண்டும், தலித் மக்களில் தன் மதம் எந்த விதத்திலும் தங்களை தாழ்ந்தவர் ஆக்கவில்லை, எல்லாரையுமே சமமாகதான் பாவிக்கிறது என்ற எண்ணத்தை கொண்டு செல்ல வேண்டும். 


எந்த ஒன்றிற்கும் அதன் அடித்தளத்தில் இருக்கும் தத்துவ கட்டுமானத்திற்க்கேற்பவே அது நிற்கும் வளரும்,  எனவே இந்துமதத்தின் அத்வைத, சமத்துவ தரிசனத்தை மீண்டும் முன்னெடுத்து அடித்தளமாக அமைத்தால் போதும் சமத்துவமின்மை சிக்கலை விட்டு இந்துமதம் நகர ஆரம்பித்து விடும். 

Saturday, April 17, 2021

இசூமியின் நறுமணம் - வாசிப்பு அனுபவம்

 

இசூமியின் நறுமணம் சிறுகதை நூலை தொகுத்து கொள்ள வசதியாக இரண்டாக பகுத்து கொள்கிறேன்.  முதலில் தமிழ் நிலத்தில் நிகழும் கதைகள். 


இந்த தொகுதியில் தமிழ் நிலத்தில் நிகழும் கதைகள் என 4 உள்ளன,  அதில் மூன்று பெரிய குடும்பங்களின் வீழ்ச்சிகளை, அதையொட்டிய மனநிலைகளை பேசும் கதைகள்.  இந்த காலகட்டத்தின் இக்கதைகளில் வரும் குடும்பங்களின் வரலாற்று ஆவணங்கள் என கூட இந்த சிறுகதைகள் சொல்லமுடியும், கூடவே இந்த நிலத்தில் இருந்த சமூகங்களில் நிகழ்ந்த  மாற்றங்களையும் சொல்லி செல்கிறது,  முதல் நோக்கில் இந்த விதத்திலேயே இந்த சிறுகதைகளை முக்கியத்துவம் அமைகிறது என்று நினைக்கிறேன். உதாரணமாக இந்த நான்கில் ஒன்றான "அறமென படுவது யாதென கேட்பின்" எனும் சிறுகதை, இதில் பெரிய குடும்பமாக இருந்து வீழும் குடும்பமாக பிள்ளை சமூகத்தை சேர்ந்த நவநீதம் பிள்ளை வருகிறார்,  சாதாரண நிலையில் இருந்து, அதாவது பிள்ளையிடம் வேலை செய்யும் தொழிலாளியாக இருந்து கடைசியில் பிள்ளையின் வீட்டையே ஜப்தி செய்யும் ஒருவராக சாமிநாத முனையரியராக (கள்ளர் சமூகம் ) வருகிறார்.  பிள்ளை எவ்வாறு வீழ்கிறார், முனையதிரியர் எவ்வாறு மேலே எழுகிறார் என்பதெல்லாம் இந்த சிறுகதை படுசுவாரஸ்யமாக சொல்லிச்செல்கிறது, அதன் வழியாக இந்த கதை மாந்தர்களின் குணநலன்களையும். இது ஆவணம் என்பதை தாண்டி ஸ்வாரஸ்யமான கதை என்பதை, தாண்டி, பாத்திரங்களின் குணங்களை அழகாக காட்டுவதை தாண்டி எவ்வகையில் இலக்கியமாகிறது என்றால் இந்த கதை மனித மனதில் கசடு புகுந்தால் உருவாக்கும் தாக்கங்களை சொல்கிறது என்பதால்தான்.  இந்த கதை தலைப்புதான் அதுவும்.  மேல் விளக்கத்திற்காக இந்த பாடலையும் அதன் அர்த்ததையும் காப்பி பேஸ்ட் செய்கிறேன். //அறமெனப் படுவது யாதெனக் கேட்பின் மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்.’

பிறர்க்கென உதவும் பெருமனம் யாருக்கு வரும்? மனத்துக்கண் மாசில்லாதவனுக்கே வரும் என்க. மனத்துக் கண் மாசு புகுந்துவிட்டால் அங்குப் பொறாமைப்பேய் முதற்கண் குடிபுகும். ஆசையெனும் அரக்கன் வாழ்வான்; வெகுளி எனும் வேண்டாத பண்பு வீறிடும்; இன்னாச் சொல் இனியதோர் இடம்பெறும். என்வேதான் மனத்துக் கண் மாசற்றுத் துலங்கவேண்டும்; அஃதே அறம் என் கிறார் வள்ளுவர்.//

இதில் சாமியாத முனையதிரியர் மனதில் இருக்கும் மாசு அவரை எவ்வளவு பாவத்தின் சம்பளங்கள் வாங்கி கொண்டாலும் கடைசிவரை தூய்மை அடையாமல் தடுக்குகிறது,  கருணையோ,  நன்மையை செய்யும் மனமோ இல்லாமல் ஆக்கி விடுகிறது.  ஒரு  நல்ல இலக்கியம் எதை விட்டு விலகி இருக்க வேண்டும் என்பதை சொல்வதை அது நிகழ்த்தும் மாயத்தை காட்டி புரிய வைக்கும், இந்த கதை அதை நிகழ்த்துகிறது. 

இந்த சிறுகதை தொகுப்பில் இருக்கும் இன்னொரு உலகம் என்பது ஆண் பெண் உறவு, அது நிகழ்த்தும் மாயங்கள்,  இடர்கள்,  த்ரோகங்கள் முக்கியமாக கைவிடல்கள், அது உருவாக்கும் நிராதரவு நிலைகள்.  இதிலிருக்கும் பல கதைகள் இதை மையமாக கொண்டவைதான். இதை அடித்தளமாக கொண்டு வாழ்வில் நிகழும் நம்ப முடியாத புதிர்களையும்,  அது அளிக்கும் ஆச்சிர்யங்களையும் சொல்கின்றன.  உதாரணமாக செர்ரி பிளாசம் கதை,  அதில் வரும் நாயகிக்கு ஜப்பான் மீது கட்டற்ற பிரியம், ஈர்ப்பு இருக்கிறது,  அது ஒருவகையில் முன்குறிப்புணர்த்தலாக கதையில் வருகிறது, ஏனெனில் வாழ்வில் வெறும் மூன்றுநான்கு  நாள் மட்டுமே தங்கும் அங்கு தங்கும் அவள் தன் வாழ்வின் முக்கியமான ஒன்றை இழக்கிறாள், உண்மையில் இழப்பதற்காகவே அங்கு வருகிறாள் ! அந்நிலம் மீதான ஈர்ப்பெல்லாம் இதில் வந்து முடியவா என்பதை காணும் போது வாழ்வின் மர்மம் மீது மிகுந்த திகைப்பு உருகாகிறது. இந்த சிறுகதை இதை தாண்டியும் பல இழைகள் கொண்ட கதை,  குடி உருவாக்கும் சிக்கலை தீவிரமாக சொல்கிறது,  அதை விட குடும்ப உறவில் போன பிறகு தனது உடல்நலன் தன் குடும்பத்தையும் உள்ளடக்கியது எனும் பொறுப்பை தட்டிக்கழிக்கும் பொறுப்பின்மையின் விளைவுகளையும் பேசுகிறது,  இதை தாண்டி இந்த கதையில் இன்னொரு மனித மனம் எடுக்கும் வடிவம் பற்றிய குறிப்பு,  அவள் கணவன் இறந்த அந்த மூன்று நாட்கள் அழாதது.  இக்கதைக்கு சற்று இணையான சூழலை நான் நேரில் பார்த்திருக்கிறேன், என் நண்பன் தன் மனைவியுடன் கர்நாடகாவில் இருந்து ரயிலில் வரும் வழியில் உடல் கோளாறினால் இறந்தான்,  இறந்த கணவனை கொண்டு கோவை வந்திறங்கினாள் அவள் மனைவி,  நான் அவர்களை பார்த்தது பிறகு வீட்டில் நண்பன் அலங்கரிக்க பட்டு சடலமாக,  அருகில் அவள் அவனையே பார்த்தபடி அழாமல் இருந்து கொண்டிருந்தாள், அவள் அழாதது எனக்கு, அங்கிருந்தவர்களுக்கு பெரிய பதபதைப்பை அளித்தது, இந்த சிறுகதை இந்நிகழ்வை ஞாபக படுத்தியது,  மனம் ஏன் அப்படி ஒரு நிலை எடுத்து அழாமல் தடுக்க வைக்கிறது என்பதை யோசிக்கும் போது எனக்கு புதிராக இருக்கிறது. 

எனக்கு மிக பிடித்த இன்னொரு கதை "தானிவத்தாரி ".  ஒரு தவறு, அதனால் தன் வாழ்வு சூன்யமானதை சொல்லும் பெண், இன்னொரு இயற்கையின் உலகில் அந்த தவறை இனிமையான அனுபவமாக காண்கிறாள். இந்த சரிதவறை தாண்டியை சமன்தான் இந்த சிறுகதையை சிறந்த ஒன்றாக மாற்றுவதாக எண்ணுகிறேன். ஒவ்வொரு நாளும் புதிதாக இணையை தேடி கொள்ளும், அதற்காக கலைஞனாக மாறும் அந்த உகியிசு குருவி இந்த சிறுகதைக்கு இந்த சிறுகதையில் வரும் நாடோடியான சிமுராவிற்கு அழகான உவமானம் ! ஒரு நல்ல கதை ஒருவரின் பல மனநிலைகளை,  மனநிலை வேறுபாடுகளை முன்வைக்கும்,  இந்த கதையில் நாயகி துயரத்தை வெளிப்படுத்துகிறாள்,  இன்னொரு இடத்தில் அதை மறந்து ஒரு பெண்ணாக (பெண்மன விருப்பங்கள் ) சிமுராவை ரசிக்கவும் செய்கிறாள்.  ஒன்றிற்காக இன்னொன்றை இழக்க விரும்பாத மனம் ! ஒரு இடத்தை தன் அலைபாயும் மனதை வெறுக்கிறாள், இன்னொரு இடத்தில் ரசிக்கிறாள்.  கதையில் அலைபாயும் மனம் வார்த்தை வரும் இடம் கதையின் திருப்புமுனை இடம், இது கதையில் அழகாக காந்திருக்கிறது,  உள்ளே அழகாக ஜப்பானிய மொழி இதில் கலந்தும் கொள்கிறது. 

இந்த சிறுகதைகளில் நான் மேலே சொன்னவை தாண்டி இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன, கிட்டத்தட்ட எல்லாமே நல்ல வாசிப்பனுபவத்தை அளிக்கும் கதைகள், நடு ஆணிகளாய் எஞ்சியவர்கள் கதை மிக முக்கியமானது,  இலக்கியமாகவும்,  பேசப்படாதவர்களின் வரலாறாகவும் இந்த கதை முக்கியமானது.  பாதிக்கபட்டவனின் வலியை சுமந்த மகனின் கதை இது,  உண்மையில் இங்கிருக்கும் ஒடுக்கபட்டவர், இவர் எல்லாம் ஒன்றுதான்,  இவர்கள் வளர்ந்த பிறகு தங்களை ஒடுக்கியர்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை காண.. இந்த கதை நாயகரிடம் தன் தந்தையின் வலிமிகுந்த வாழ்வின் துயரம் அப்படியே உள்ளது,  ஆனால் அதை உருவாக்கியவனின் மீது வெறுப்பில்லை,  அவன் சந்ததியிடம் கூட தன் தந்தையின் ஞாபகம் வந்ததால்தான் தன்னை மீறிய தார்மீக கோபத்தை தன் அலுவலக செயல்பாடு வழியாக கெளிப்படுத்தினான், பிறகு அதையும் விட்டான். 

இதையெல்லாம் மீறி இம்மாதிரியான சிறுகதைகள் இதையொற்றிய  நம் அனுபங்களை திரும்ப நம்மிடம் கொண்டுவருவதும் வாசிப்பில் கிடைக்க கூடிய இன்னொரு விஷயம் என்று நினைக்கிறேன்.  உதாரணமாக மலரினும் மெல்லியது எனும் சிறுகதை,  இந்த கதை ல பெண் வெறுமையை கடக்க வேறு ஏதுமில்லை,  காமம் மட்டுமே இருக்கிறது என்பது கிட்டத்தட்ட ஒரு கண்டத்தால்தான்,  கோபிகிருஷ்ணனின் லாகிரி என ஒரு சிறுகதை உண்டு,  சற்றுநேரம் ஒரு ரேசன் கடையில் ஒரு திருமணமான பெண்ணும், திருமணமான கதை நாயகனும் மாறிமாறி பார்த்து ரசித்து கொள்வார்கள்,  கதை அந்த நேரத்து வெறுமையை கடக்கும் போதை அது என்று சொல்லும், இந்த கதை படிக்கும்போது முற்றிலும் வெறுமை கொண்ட இளமை வயதிலிருக்கும் பெண் காமம் எனும் போதையில் விழுவதை தவிர வேறு வாய்ப்புகளே இல்லை என்று எண்ண வைத்தது. சைமன் அதை தவறு என்று எண்ணாமல் தாண்டி தன்னை விடுவித்து கொண்டு நகரும் மனநிலை மேன்மையான மனிதர்களுக்குரியது !  ஆனால் அவன் மன்னித்தாலும், மறக்க வில்லை என்பது தெரியாவார்கள் துரோகம் இழைக்க மாட்டார்கள் என்ற வார்த்தைகளில் வெளிபடுகிறது, இவருக்கு நெருக்கமானவர்கள் மனைவியும், மனைவியுடன் தகாத உறவு வைத்துக்கொண்ட அவனது அண்ணனும்தான்.  நான் இதுபோல வெளிநாடு போய் குடும்பம் சிதைந்த சிலரை சந்தித்து இருக்கிறேன்,  அதில் ஒருவர் மறக்க முடியாதவர்,  ஒரு மகன் உண்டு, இவர் இல்லாததால் உள்ளே நுழைந்த ஒருவனும், இவர் மனைவியும் சேர்ந்து மகனை மிக கொடுமை படுத்தி உள்ளனர்.  பிறகு இவர் வந்து, அவனை வெளியேற்றி எல்லா பஞ்சாயத்தும் முடிந்து அந்த பெண் தவறை உணர்ந்து இவரும் மன்னித்து சேரும்போது மகனால் அதை ஏற்க இயலவில்லை,  மகனுக்காக அவர் மனைவியை விட்டுவிட்டு ஆனால் அவர் நினைவாக ஏங்கி கொண்டிருந்தார் என்னிடம் பேசும் போது !


சரி குறை சொல்லாமல் முடித்தால் விமர்சனம் என்பது ஒரு சார்பாக அமைந்து விடும் என்பதால்,  இந்த கதையில் சைமன் சாமிக்கு கிடா வெட்டுவதாக வருகிறது,  ஒரு கிரிஸ்துவர் கிடா வெட்ட மாட்டார் என்று நினைக்கிறேன், எனவே கதை ஆசிரியர், அடுத்த பதிப்பில் சைமனை, அவர் மனைவியை, மகளை தாய்மதம் திருப்பும் படி "ஆடிட்டர்" பார்வையில் நின்று கேட்டு கொள்கிறேன்:)






Thursday, February 25, 2021

கடலொரு பக்கம் வீடொருபக்கம் -நூல் பற்றி

 உரைநடையை விட கவிதை ஏன் இன்னும் சிறந்தது என்பதை இந்த கவிதை நூல் வாசிக்கும் பொழுது உணர முடிந்தது. பெரிய நாவல் வழியாக சொல்ல முயல்தை  ஒன்றிரண்டு பக்கங்கள் அல்லது அதற்குள்ளாக கவிதை மூலம் சாதாரணமாக செறிவான மொழி கொண்டு, படிமங்கள் கொண்டு சொல்லி விட முடியும் என்பதை இந்த கவிதை நூலின் பல கவிதைகள் வழியாக கண்டுகொண்டேன்.  இதை போலவே உரைநடையை விட கவிதை வழியாக அதை எழுதுபவன் ஆளுமை முன்வந்து நிற்பதை உணர முடிந்தது,  இந்த நூலின் பெரும்பாலான கவிதைகளில் கவிஞர் லட்சுமி மணிவண்ணனை கண்டேன்,  உண்மையில் அவர் கண் வழியாக இக்கவிதைகளை வாசித்தேன் என்று சொல்லலாம். 


இந்த நூல்தான் நான் வாசிக்கும் முதல் லட்சுமி மணிவண்ணன் அவர்களின் கவிதை நூல்,  இந்நூல் மட்டும் கொண்டு இந்நூலில் இருக்கும் கவிதைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவரது கவிதை செயல்படும் தளங்களை பற்றி எழுதி பார்க்கலாம் என்றிருக்கிறேன் !

 இவர் கவிதைகளில் இருக்கும் முக்கியமான படிமம் என்று பார்த்தால் கடல்  சொல்லலாம்,  நூலின் தலைப்பே கடலை படிமமாக கொண்டதுதான், இன்னொரு படிமம் மழை,  படிமம் என்று சொல்வதை விட நேரடியாக காட்சி அனுபவமாக கவிதைகளில் மழை வருகிறது, காலைபொன்னிறத்தின்  சாரலாக ,  மின்மினி ஒழுகுவதை போல , புஸ்பம் போல என  மழையை காட்சி வழியான அனுபவத்தில் எப்படி அடைவது என்பதை கவிதைகள் வழியாக கற்றுத்தருகிறார் என்று கூட சொல்லலாம்,  மழை பற்றி நம்முள் இருக்கும் மன சித்திரங்களையெல்லாம்  அழித்து விட்டு வெறும் மழையை அதில் நனைந்து மூழ்காமல் வெறும் காட்சி அனுபவமாக வெளியில் நின்று காட்சியனுபவமாக ரசிக்க சொல்கிறார், மழை என்ற பெயரில் இருக்கும் அர்த்தத்தை கூட எண்ணாமல், மழை பற்றிய கவிதைகளை எண்ணாமல், மழை மீது சேர்க்கப்பட்டிருந்த ஞாபகங்களை அர்த்தங்களை என எதையும் கூட சேர்க்காமல் பார்க்க சொல்கிறார்!

கவிதையில் இயற்கை வழியாக கவிஞன் காண சொல்வது அதில் தன்னியல்பான எந்த தவறுமற்ற சரியான முடிவை நோக்கி செல்லும் படிப்படியான நகர்வை கண்டு ரசிப்பதற்குத்தான் என்று தோன்றுகிறது,  கூடவே சிறுகதையில் நிகழும் கடைசி திருப்பம் போல இயற்கையில் நடக்கும் நகர்வுகளில் முடிவில் வரும் அடைதலை காணும்பொழுது இதற்காகவா இந்த நடனங்கள் என்று நம்மை உற்சாகம் செய்யவைக்கவோ என்றும் தோன்றுகிறது, மேலதிகமாக இந்த நூலில் இருக்கும் கவிஞன் மரபை மறுப்பவனல்ல, ஆகையால் இம்மரபு அளித்த இயற்கையில் கரைந்தழிலையும் சொல்லி செல்கிறார்,  கடலும் இவரும் வேறல்ல,  தன் விடுதலையின், சேர்தலின் இடமாக,  தன் மனவிருப்பமாக,  தன் மனரூபமாக கடலை முன்வைக்கிறார்,  இவரது முதற்படிமம் கடல்தான்,  தன் உள்ளமாக கடலை முன்வைக்கிறார்,  அதில் தன்னை மறந்து மன ஊற்றுகளில் செல்ல முடிவதை சொல்கிறார்,  குழந்தையின் உற்சாகத்திற்கு காரணம் சொல்லமுடியுமா, கடலின் அலைகளுக்கு காரணம் சொல்ல முடியுமா என்கிறார் ஒரு கவிதையில், அதை வாசித்த போது அவரின் இலக்கு இந்த என்றும் தணியாத கடலின் குழந்தையின் உற்சாகம்தான் என்று தோன்றியது. 

இது தவிர பெண்களை, அவர்களின் ஆழங்களை, அவர்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் (!) என்பதை கவிதைவில் உவமைகள் வழியாக படிமங்கள் வழியாக அழகாக சொல்லி செல்கிறார்,  அந்த கவிதையின் பெயர் "பெண்களை தொடுவது பற்றி" என தொடங்கும் கவிதை,  அந்த கவிதை படித்த போது பெண்களை அணுகாமல் வெளியே நின்று பார்ப்பவன் பாக்கியவான் என்று தோன்றியது. 

இதும் தவிர இன்னும் நிறைய திசைகளில் கவிதைகள் இதில் இருக்கின்றன,  அம்மனின் புன்னகை என்றொரு கவிதை,  தெய்வசிலைகளை வெறும் கற்களாக காண்பவர்கள் அபாக்கியவான்கள் என்று உணர வைக்கும் கவிதை,  நம் திராவிட சித்தாந்த பகுத்தறிவாளர்கள் ஒவ்வொருவரையும் படிக்க வைத்து தாங்கள் எதை இழக்கிறோம் என்பதை இந்த கவிதை மூலம் உணர வைக்க செய்யவேண்டும் என்று விளையாட்டாக எண்ணினேன்,  தேவி தன்னை காணும் கண்களில் மாயம் செய்கிறார் என்று இந்த கவிதை சொல்லும், இது அபாரமான இடம், ஏனெனில் தேவியின் முகங்களில் இருக்கும் மாற்றம் என்பது நாம் கண்டுணரும் எண்ணங்களே தவிர தேவியின் சிற்பத்தில்/முகத்தில்  உருவத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் அல்ல !

இயற்கையை கிட்டத்தட்ட 'ஏசுவை' போன்ற அன்பை மனிதனிடம் அள்ளிக்கொட்டும் இயல்பினை கொண்டதாக காட்டுகிறார்,  தன்னை ஆட்டி சிலிர்க்க வைத்த பெண்ணை பின்தொடர விரும்பும் மரமென, தான் வாழ்ந்த நிலத்தில் இருந்து நகர்ந்து வேறு இடம் சென்றபோதும் மறக்காத இயற்கையின் நினைவுகளென,  எந்த உதவியும் அளிக்கவில்லையெனிலும் அதை பொருட்படுத்தாது அளிக்க விரும்பும் இயற்கையின் இயல்பு என இயற்கையை முன்வைக்கிறார், முக்கியமாக தான் தனியன் என்ற எண்ணத்தினை காலிசெய்யும் படியான கவிதைகள் இவை,  தாங்கள் உன்னை உணர்ந்து உன்னுடன் கூடவே இருக்கிறோம் என்று சொல்கிறது இவர் கவிதைகள். 

இந்த பண்பாடு சூழல் உருவாக்கி அளிக்கும் படிமங்களை பயன்படுத்தும் கவி இவர் என்று சொல்லலாம்,  தெய்வத்தின் வேடங்களை எடுத்து இடும்,  இட்டுப்பார்க்கும் மனிதர்களை பற்றிய இரு கவிதைகள் உண்டு இந்த கவிதை நூலில், ஒன்று சிசேரியன், அதை ஒரு மாயஎதார்த்த சிறுகதையின் கவிதை வடிவம் என்று சொல்லலாம்,  அதில் பத்ரகாளி வேடம்  அணியும் ராசாமணி நாடார் பாத்திரம் வரும்,  இவர் பத்திரகாளி வேடத்தை கொள்ள, பத்ரகாளி இவன் வேடத்தை எடுத்து கொள்ளும்,  அந்த கவிதையை முழுதாக உள்வாங்கினேனா என்று சொல்லமுடியவில்லை, கிட்டத்தட்ட ஒரு சிறுகதை போலவே இந்த கவிதை வளர்ந்து முடிவதை போல தோன்றியது. 

உண்மையில் இப்படி எல்லா கவிதைகளையும் யோசிக்க தோன்றியபடியே வருகிறது,  நிறுத்தி கொள்ளலாம் என்பதால் விடுகிறேன் !

ஒரு முழுமையான கவிஞன் என்ற இடம் என சில தகுதிகள் உண்டு என்று எண்ணுகிறேன்,  இயற்கையை ஒரு பிரசங்க கவிதையாக வெளிப்படுத்தாமல், அதனுள் இருக்கும் லீலையை நடனத்தை காட்சி களாக ஆக்கி முன்வைப்பதன் வழியாக இயற்கையை மனதளவில் நெருங்க வைப்பது, அதன்அடுத்து அதற்கும் நமக்கும் இருக்கும் விலகல் மற்றும் இயற்கையும் நாமும் வேறுவேறல்ல என்பதை உணர வைத்தல், இதை போன்றவைகளை இயற்கையை அதன் ஆத்மாவை காணவைத்து வாசகனை உணர வைப்பது என்று சொல்லலாம்,  பெரும்பாலும் வேத வரிகள் ( உதாரணம் ஈஸா வாஷய உபநிட பாடல்கள் ) இப்படியானதாக இருப்பதை பார்த்திருக்கேன், இப்படி எழுதிய ரிஷிகளை கவிஞராகவே நித்யசைன்தய யதி முன்வைக்கிறார் ( ஈஸா வாஷய உரை நூல் ),  இதையே ஒரு முழுமையான கவிஞனின் தகுதிகளில் முதன்மையான ஒன்றாக நினைக்கிறேன். 

இன்னொன்று கவிஞன் அறத்தை முன்வைப்பவனாக அதைவிட நல்வழி சொல்பவனாக இருப்பவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறன், நல்வழி என்று சொல்லும்பொழுதே அதை நக்கலாக பார்க்கும் குணம் நம் பொதுப்புத்தியில் உள்ளது, அதும் எழுத்தாளன் என்பதற்கு 420 இயல்பு மிக அவசியம் எனும் பிரச்சாரம் வென்று நிற்கும் சமகால சூழலில் இந்த எதிர்பார்ப்பு நகைப்பாக பார்க்க படும்,  நான் சொல்லவந்தது கவிஞனுக்கு தன் அனுபவத்தால் முன்னுணர்ந்து சொல்லும் திறம் உண்டு என்று நினைக்கிறேன், இந்த கவிதை நூலிலேயே அறிவதை அறி என தொடங்கும் கவிதை ஒன்றுண்டு,  அறிவதை முன்பே அறிந்து கை காலத்தை மிச்சப்படுத்தலாம், இன்னும் நிறைய அந்த கவிதை சொல்லும்,  நான் செய்த தவறுகளை காணும்போது முன்பே தவிர்த்திருந்தால் பல வருடங்களை வீணாக்காமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது, இதை போன்ற விஷயங்களை ஒரு கவிஞன் முன்னுணர்ந்து அல்லது தன் வாழ்வில் கற்று அதை பகிர்ந்து சொல்லிவிட முடியும் என்று தோன்றுகிறது, ஜெயமோகன் திருக்குறளை நீதி நூல் என்பதை விட அதை கவிதை நூலாக வாசித்து நுகர முடியும் என்கிறார், அதாவது வள்ளுவன் நீதியை முன்வைப்பன் என்பதை விட கவிஞன், நான் எண்ணுவது அவன் கவிஞன் என்பதாயேயே நீதியை வெளிப்படுத்துகிறான் என்பதே,  எந்த கவிஞனும் நீதியை முன்வைப்பதாலேயே அறத்தை,  வாழ்நெறியை, வழிகாட்டுதலை முன்வைப்பதாலேயே முழுமையான கவிஞனாக ஆகிறான் என்று எண்ணுகிறேன்.  இதற்குமேல் கட்டுரை நீள கூடாது என்பதால் முடிக்கிறேன் ! என்னளவில் இந்த கவிதை நூல்களை காணும்பொழுது இந்த மரபின் தொடர்ச்சி கொண்ட முழுமையான கவிஞனுக்குரிய தகுதிகள் கொண்டவர் கவிஞர்  லட்சுமி மணிவண்ணன் என்று எண்ணுகிறேன். 

இதையெல்லாம் தாண்டி அவரை பிரியமானவராக எண்ணுவதற்கு காரணம் வேறு,  அது unfriend என தான் கட்டித்து வெளி வீசியவனுக்கும் அவன் வாழ்வு நன்றாக அமைய வேண்டும் என்று எண்ணி வேண்டி கொள்ளும் மனம் :)

ஒரு கவிதையில் மழை பெய்து முதிய மஞ்சள் முருங்கை இலைகள் உதிரும், அந்த உதிர்வை மழை உருவாக்குகிறது, பிறகு தரையில் வீழ்ந்த அந்த இலைகளை மழை மூடி மறைக்கிறது, மறுநாள் காலையொளியில் உற்சாகத்துடன் (முருங்கை) பூக்கள் பூத்திருக்கின்றன,  அதை அந்த பூக்களின் உற்சாகத்தை பார்த்த கவிஞனின் மழையிடம் இதற்காகவா இவ்வளவு நடனம் என்கிறார்,  இந்த காட்சியை அதை அளிக்கும் கவிஞனை பெரிய கவிஞன் னு நினைக்கிறேன். 

மேலும் இந்த நூலில் இருக்கும் சில கவிதைகள் ஞாபகம் வருகின்றன,  ஆஸ்பத்திரியில் இருக்கும் சிறுவன் " இப்படி பண்ணினா அப்பா வரமாட்டாரமா, என்னால முடியலமா "என்று சொல்லும் வரி அந்த சிறுவனை அப்படியான நிலைக்கு ஆளாக்கியவன்  அவள் அம்மாவோ என்று திகைக்க வைக்கிறது. 





ஆசிரியர் ( சிறுகதை )

 90 ஆண்டு கால கட்டடம் அது, செங்கல்க்கு பதில் கற்கள் அடுக்கி கட்டப்பட்டிருக்கும், மேலே ஓட்டு கூரை, சுவர் உயரம் எப்படியும் 15 அடி வரும், கற்கள...