Thursday, February 6, 2025

பாவம் ( குறுங்கதை)

 லக்ஷ்மி அம்மா பத்திரங்களை ஒவ்வொன்றாக காட்டி புலம்பி கொண்டிருந்தார் , சுகன் அவற்றை எல்லாம் கவனமாக கேட்டு கொண்டிருந்தான் , நான் வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன் . லக்ஷ்மி அம்மா முகத்தில் வயதானதின் சுருக்கம் தெரிந்தாலும் அதையும் மீறி அழகாக இருந்தார் , இளமையில் பேரழகியாக இருந்திருப்பார் . அவர் புலம்புவதை எல்லாம் கேட்டு முடித்த சுகன் " நாம முயற்சித்து பார்க்கலாம் , ஆனா அவனுக கிட்ட இருந்து பணம் மீட்கிறது கஷ்டம் " என்றான் . " சரி முயற்சி பண்ணி பார்ப்போம் " என்று சொல்லிய படி கிளம்பி என்னையும் கண்களால் கிளம்பலாம் என்றான் . நான் திரும்பி " காபி நல்லா இருந்தது , வரேன்ங்க " என்றேன் . லக்ஷ்மி அம்மா புன்னகைத்தாள் , இளம் வயதில் பேரழகியாக இருந்திருப்பார் என்பது திரும்பவும் மனதில் தோன்றியது .


காரில் செல்லும் போது சுகன் " இடம் சைட் போட்டு வித்து தரேன்னு வித்து அவனுக வாங்கிட்டானுக , இந்த அம்மா ஒன்னும் தெரியாம எல்லாத்துலயும் கையெழுத்து போட்டு வச்சிருக்கு , பத்து பைசா கூட அவனுக கிட்ட இருந்து வாங்க முடியாது , ஒரே நல்ல விசயம் பாதி சைட் மட்டும்தான் வித்திருக்கு , மீதியை தக்க வச்சுக்கலாம் .. " என்றான்.


"பாவம் டா அந்த அம்மா" என்றேன் , "சின்ன வயசுல பேரழகா இருந்திருப்பாங்க " என்றேன் , கார் ஒட்டியபடியே சட்டென்று என்னை திரும்பி பார்த்தவன் , பிறகு சாலையை நோக்கி திரும்பி ஓட்டுவதில் கவனம் செலுத்தி மெதுவாக புன்னகைத்தான் . "ஆமா" என்றான் .


பிறகு இந்த பிரச்னை சார்ந்து நாலைந்து முறை லக்ஷ்மி அம்மாவை பார்க்க சென்றோம் , இரண்டாவது முறை போன போதே அவருடன் நன்றாக பேச ஆரம்பித்து விட்டேன் , கணவர் இறந்த பிறகு சொத்துகளை காக்க இயலாமல் நிறைய இழந்து விட்டிருக்கிறார் , அவ்வளவு இழந்த பிறகும் சுற்றி இருக்கும் 4 ஏக்கர் நிலமும் அவரிடம் இருந்தது . ஒரு பெண் காலேஜ் படித்து கொண்டிருக்கிறார் , நான்கைந்து முறையும் அவரை பார்க்க முடிய வில்லை , இளம் வயது லக்ஷ்மி அம்மாவை எப்படியாவது பார்த்து விடலாம் என்று எண்ணி இருந்தேன் !


இந்த முறை சென்ற போது முழு நாளும் அங்கு இருக்க வேண்டியதாகி விட்டது . வெளியே மாடுகள் இரண்டு இருந்தது , இரண்டு அதன் கன்றுகளும் , மாடு உண்ணும் புல்களை வளர்த்தி இருந்தார்கள் , தள்ளி ஒரு சீட் போட்ட கூரை கீழ் காய்ந்த புல்களை அடுக்கி இருந்தார்கள் . நிறைய குட்டை தென்னை மரங்கள் இருந்தன . நான் உள்ளே லக்ஷ்மி அம்மா சுகனிடம் புலம்புவதை கேட்க முடியாமல் வெளியே இருந்த ஒரு கல் திண்ணையில் அமர்ந்து கொண்டேன் . 


பசுக்கள் நிலத்திற்கு உள்ளே மேய்ந்து கொண்டிருந்தன , கட்டி இருக்கிறார்கள் என்பதால் அவை ஓரளவுக்கு மேல் நகர முடியாமல் இருந்தன , மாட்டுச் சாலையில் இரண்டு கன்றுகள் இருந்தன ,அதில் ஒன்றை பார்க்க அது சோகத்துடன் இருப்பது போல தோன்றியது , அருகில் சென்று கீழே இருந்த புல்லை எடுத்து அதன் வாய் அருகே நீட்டினேன் , அது என்னை சட்டையே செய்ய வில்லை , நான் திரும்பி மேய்ந்து கொண்டிருந்த அந்த இரு பசுக்களை பார்த்தேன் ,அதில் ஒரு என்னையே பார்த்து கொண்டிருந்தது . சாம்பல் நிறத்தில் இருந்தது அந்த பசு, அதன் அருகில் மூன்று வெள்ளை பறவைகள் சுற்றி கொண்டிருந்தன .


சற்று நேரம் போயிருக்கும் , சாலையை பார்த்து அந்த பசு பார்த்து "மா" என்றது, நான் சாலையை பார்த்தேன் , பசு தொடர்ந்து சாலையை பார்த்து அழைத்து கொண்டிருந்தது , சாலையில் ஒரு 65 வயது இருக்கும் ஒரு வயதான பெண்மணி , கிட்டதட்ட பாட்டி வந்து கொண்டிருந்தார் . அவர் வர வர அவரின் நடையில் வேகம் அதிகரித்த படி வந்தது , பசுவின் அருகில் வந்து "இருடி" என்று சொல்லி விட்டு மாட்டு சாலைக்குள் வந்து கன்றினை அவிழ்த்து பசுவிடம் கூட்டி சென்றாள் . கன்றினை கொஞ்சம் பால் குடிக்க விட்டு பிறகு சற்று தள்ளி கன்றினை கட்டி விட்டு 

பெரிய பால் சொம்பு எடுத்து பசுவில் பால் கறந்தாள், பசு நிதானமாவது போல இருந்தது , கிழவி திரும்பி என்னை பார்த்து புன்னகைத்து "நேரம் ஆகிடுச்சு , இதும் பாவம் எவ்வளவு நேரம் தாங்கிட்டு இருக்கும் "என்றாள் . நான் யார் என்று தெரியாமலேயே நெடு நாள் பழக்கம் போல பேசும் அந்த இயல்பு அவர் மீது பிரியம் கொள்ள வைத்தது . நான் பதில் ஏதும் சொல்லாமல் புன்னகைத்தேன். " மக, பேத்தி எல்லாம் வீட்டுக்கு வந்திருக்காங்க , அதான் நேரமாச்சு , பேத்திக்கு பத்து ஆளு வாயி , பதில் சொல்லி முடிய மாட்டேங்குது " என்று சொல்லி புன்னகைத்தாள் . நான் " இங்க வேலை செய்யறீங்களா " என்று கேட்டேன் , " ஆமா தம்பி , இந்த அம்மணி ஒரு நாள் வீட்டுல இருக்க விடாது , இவங்களுக்கும் திட்டறதுக்கு ஆளு வேணுமுல்ல " என்று சொல்லி சிரித்தாள் . " எவ்வளவு பிள்ளைக " என்றேன் , "இரண்டு பையன் ,இரண்டு பொண்ணு ,எல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு " என்றாள். " இங்க எவ்வளவு நாளா இருக்கீங்க " என்றேன் ," இருபது வருஷம் ஆயிடுச்சு , நான் இங்க வந்த பிறகுதான் இந்த அம்மாவே இங்க கல்யாணம் பண்ணி வந்துச்சு " என்று சொல்லி சிரித்தாள். " எவ்வளவு சம்பளம் " என்றேன் , " நூறு ரூபா தம்பி" என்றாள் , நான் திடுக்கிட்டு " இப்ப எவ்வளவு வாங்கறீங்க " என்றேன் , " இப்பதான் தம்பி ,தினம் நூறு ரூபா சம்பளம் " என்றாள். அதிர்ச்சியில் இருந்து மீளாமல் " ரொம்ப குறைவுங்க " என்றேன் , இப்ப வீட்டுல பிள்ளைக வந்து இருக்காங்கனு மதியம் போயிட்டு வரேன் ,இல்லைனா காலைல வந்தா சாயங்காலம் வரை இங்கதான் , சும்மா இருக்க விடாது ,ஏதாவது வேலை சொல்லிட்டே இருக்கும் , ஆனா நல்ல அம்மணி " என்றாள், மேலும் " அட்வான்ஸ் கொடுக்கும் , மெல்ல கழிச்சிக்குவேன் " என்றாள். நான் " அநியாயம் " என்று மனசுக்குள் சொல்லி கொண்டேன் . 


வீட்டில் இருந்து லக்ஷ்மி அம்மா வெளியே வருவது தெரிந்தது , சுகனும் கூட வெளியே வந்தான் . நான் எழுந்து அவர்கள் அருகில் சென்றேன் . 


சுகன் " நாளைக்கு வரேன்ங்க" என்று கார் அருகில் சென்றான் ,நானும் லக்ஷ்மி அம்மாவிடம் " வரேங்க" என்று சொல்லி காருக்கு சென்றேன் , திரும்பி கிழவியை நோக்கினேன் , அவர் என்னையே பார்த்து கொண்டிருப்பாள் போல , நான் பார்த்ததும் என்னை நோக்கி புன்னகைத்தாள் . காரில் ஏறும் போது லக்ஷ்மி அம்மா கிழவியிடம் " போன உடனே வரணும்னு தோனாதா" கத்துவதை கேட்க முடிந்தது . 


காரில் போய் கொண்டிருக்கும் போது சுகன் சத்தமாக பாட்டு வைத்தான் , நான் சட்டென்று அதை நிறுத்தினேன் , திரும்பி என்னை பார்த்து முறைத்தான் . நான் " மாட்டுமா !" என்றேன் , " போற போக்கை பார்த்தா மொத்த சொத்தை நமக்கு எழுதி கொடுத்துடும்" என்று சொல்லி சிரித்தான் . நான் மகிழ்ச்சியானேன் , என் மகிழ்ச்சியைப் பார்த்து சுகன் சற்று ஆச்சிரியமாகி " அந்த அம்மா பாவம்னு சொன்ன " என்றான் . நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தேன் . 



No comments:

Post a Comment

விமர்சனம் - சில எண்ணங்கள்

 ( இரு ஆண்டுகள் முன்பு எழுதியது ) தூரன் விழாவில் பிகே ராஜ சேகரன் அவர்கள் உரையாடல் நிகழ்வில் அவரிடம் கேட்க பட்ட ஒரு கேள்வி மற்றும் அதற்கு அவர...