Tuesday, May 5, 2020

ஞானகங்கை நூல் முன்வைத்து -1







மதுவிலக்கு கள்ள மதுவியாபாரத்தினை உருவாக்கும்,  எனவே மதுவிலக்கினை நீக்க வேண்டும், இப்படி தடைசெய்து   மது அருந்துதலை நீக்க முயற்சிப்பதை விட  பிரச்சாரம் /விழிப்புணர்வு வழியாக வழியாக மது அருந்துதலின் தீமையை மக்களிடம் எடுத்துரைத்து மது அருந்துதலை நீக்க முயற்சிப்பதே சரியானவழி.  மேலும் இந்த கள்ள மதுவியாபாரிகள் தங்கள் வியாபார ஆதாயத்திற்காக மதுவிலக்கை ஆதரிப்பார்கள்...  இப்படியான வாதங்களை இன்றய காலத்தில் முன்வைப்பவர்களை  முற்போக்குவாதிகள் என்று அழைக்கிறோம்,  அதிலும் இப்படி பேசுபவர்கள்  மதசார்பின்மைவாதிகளாக இருப்பதையும் பார்க்கிறோம்,  ஆனால் மேலே இருக்கும் வரிகளை சொன்னவர் ஸ்ரீ மாதவ சதாசிவ கோல்வால்கர்,  இவர் ஹெட்கேவார் க்கு பிறகு சுமார் 33 ஆண்டு காலம் ( 1940-1973) ராஷ்டிரிய சேவா சங்கத்தின் தலைமை பொறுப்பை வகித்தவர் !

ஞானகங்கை எனும் நூல் பன்ச் ஒப் தாட்ஸ் எனும் நூலின் தமிழாக்கம், கோல்வால்கர் கருத்துக்களின் தேர்தெடுக்க பட்ட தொகுப்பு இது,  ராஷ்டிரிய சேவா சங்கத்தின் ஆரம்ப வரலாறு, வளர்ந்த விதம்,  இந்த சங்கத்தின் நோக்கம், செயல்பாடு போன்றவையை புரிந்து கொள்ள இந்த நூல் மிகவும் உதவும்.

நான் முதலில் இந்த நூலை தேடி படிக்க காரணம் இந்துத்துவம் பற்றி அறிந்து கொள்வதற்க்காகவே, ஆனால் இந்நூலில் கோல்வால்கர் இந்துத்துவம் எனும் வார்த்தையை அல்லது அதை ஒரு கோட்பாடு வடிவத்தில் (இந்துத்துவம் ) பேசவில்லை மாறாக கோட்பாடு (இஸம் ) போன்றவைகளை தவறானவை தேவையற்றவை என கம்யூனிசத்தை மறுப்பதன் வழியாக சொல்லி செல்கிறார். கோல்வால்கர் ராஷ்டிரிய சேவா சங்கத்தின் நோக்கம் என முன்வைப்பது இந்துக்கள் இராஷ்டிரிய பண்பாட்டின் வழி செல்ல வேண்டும் என்பதுதான்,  அப்படி இந்துக்கள் அனைவரும் இராஷ்டிரிய பண்பாட்டின் வழி சென்ற பிறகு ராஷ்டிரிய சேவா சங்கத்தின் பணி தேவையற்றதாகிவிடும் என்றும் கூட சொல்கிறார்.

 இவர் இந்த பண்பாட்டின் குணம் என சொல்வதை என் வாசிப்பு புரிதலின் படி இப்படி சொல்கிறேன், இந்த நிலத்திற்கு என்று ஒரு வாழ்க்கை முறை உண்டு,  இங்கு மனிதனின் புருஷார்த்தம் என்பது அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு.  அறம் வழியில் பொருள், இன்பம் அடைய வேண்டும், வீடு ( முக்தி ) என்பதை தெய்வத்தை அடைவது என்று சொல்லலாம், அதை தெய்வ பக்தி வழியாக அணுகுவதை பற்றி சொல்லி வாழும் தெய்வம் என்பது மனிதர்கள்தான்,  என பிற மனிதர்கள், உயிர்களுக்கு சேவை செய்வதன் வழியாக இறைவனை அணுகுவதே நம் பண்பாட்டின் வழிமுறை என்கிறார்.  இதை ராஷ்டிரிய சேவை எனும் வழியில் விளக்குகிறார்,  அதாவது இந்நிலம் நம் அன்னை,  இந்த அன்னையை  வழிபடுவது என்பது இந்த நிலத்தின் மக்களை தன் சகோதரர்களாக எண்ணி அவர்களுக்கு சேவை செய்வதுதான் என்கிறார்,  இதை விராடபுருஷன் எனும் படிமத்தை பயன்படுத்துகிறார், இந்நிலத்தின் மக்கள் அனைவரும் ஓருயிர்,  ஒற்றை விராடபுருஷன் என. இந்துக்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இந்த எண்ணத்தை உருவாக்குவதே ராஷ்டிரிய சேவா சங்கத்தின் நோக்கம் என்கிறார்.

மேலும் அவர் சொல்வதை இப்படி சுருக்கி சொல்லலாம்.
ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு பிரத்யேக குணம் உண்டு,  அதை அந்த நிலத்தின் பண்பாடு என்று சொல்லலாம்,  இந்தியா ( பிரிவினைக்கு முந்திய ) விற்கு அப்படியான தனித்த பண்பாடு உண்டு, அதுவே நம் ராஷ்டிரிய தேசியத்தின் குணம், இந்தியாவில் ஆட்சிகள், மொழிகள், பழக்கங்கள் போன்றவையில் பன்மை இருந்தாலும் பண்பாட்டு இயல்பு என்பது ஒன்றுதான், அந்த பண்பாடு இந்து பண்பாடு.  இந்த பண்பாடு உலகியல் சுகத்தை தன் நோக்கமாக கொண்டிருக்க வில்லை, மாறாக முக்தியத்தைத்தான் நோக்கமாக கொண்டிருக்கிறது, அதுவே முதல்நோக்கம்,  அதை அடைவதற்கு தகுந்த வாழ்கை முறையையும் இந்த பண்பாடு உருவாகியிருக்கிறது ( அறம் பொருள் இன்பம் வீடு ),  இந்த பண்பாட்டின் படியாகத்தான் இந்துக்கள் வாழ்ந்து வந்தார்கள்,  ஆனால் அந்நிய படையெடுப்புகள்,  ஆட்சிகள் காரணமாக இந்துக்கள் பலரும் தங்கள் பண்பாட்டு சாரத்தினை விட்டு உலகியல் மயக்கத்திற்குள் விழுந்து விட்டார்கள்,  இவர்களிடம் மீதும் இந்து பண்பாட்டின் சிறப்பை உணர்த்தி திரும்ப இந்து பண்பாட்டு வாழ்வியலுக்குள் கொண்டு வருவதே ராஷ்டிரிய சேவா சங்கத்தின் பணி.

கோல்வால்கர் கருத்துக்களை வாசிக்கும் முன்பு இவர் ஒரு துறவி என்பதால்  அந்த வகையான இயல்பை எதிர்பார்த்தேன்,  மாறாக இவர் விலங்கியலில் முதுகலை பட்டம் பெற்றவர் பிறகு சட்டம் படித்திருக்கிறார்,  அதன் பிறகுதான் இராமகிருஷ்ணர் வழிவந்த ஸ்வாமி அகண்டானந்தரிடம் தீக்ஷை பெற்றிருக்கிறார்,  டால்ஸ்டாய், சாலமன் எனும் பெயர்கள் சாதாரணமாக வந்து விழுகின்றன , மேலை நூல்கள் நிறைய பயின்றிருக்கிறார்,  வேதங்களிலும் மிகுந்த ஞானம் கொண்டிருக்கிறார்,  எந்த ஒன்றையும்  நடைமுறை தளத்தில் வைத்து மிக இயல்பாக அணுகுகிறார், ஆனால் பரிவோடு அணுகுகிறார் என்று சொல்லமுடியாது, ராவாக அணுகிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம், முக்கியமாக இஸ்லாம் சார்ந்த விஷயத்தில் இதை நன்றாக உணர முடியும். இதை பற்றி இந்த கட்டுரையின் கடைசியில் சொல்லிவிடுகிறேன்.

கோல்வால்கர் காங்கரசை நிராகரிக்கும் முறை அலாதியானது,  அதை இப்போதைய காந்தியர்கள் அறிந்தால் ஆச்சிரியம் அடைவார்கள், ஏனெனில் காந்தியம் என்பது எதிர்பரசியலுக்கு எதிரானது என்று எண்ணுகிறோம்,  கோல்வால்கர் காங்கரசே வெள்ளையர் எதிர்பரசியலில் வளர்ந்த ஒன்று என்கிறார்,  இந்த நோக்கம் தவிர்த்து பார்த்தால் காங்கரஸ் நோக்கம் என ஒன்றுமில்லாத ஒன்று என்கிறார்,  மாறாக இப்போது ராஷ்டிரிய சேவா சங்கம் முஸ்லீம் வெறுப்பரசியல் கொண்ட ஒன்று என்று நாம் தற்போது எண்ணி வருகிறோம்,  ஆனால் கோல்வால்கர் முஸ்லீம் எதிர்ப்பு வழியான ஒன்றை எதிர் இந்துத்துவம் என்கிறார்,  அது தவறு என்கிறார்,  அதை விளக்க ஒரு சம்பவம் சொல்கிறார்,  அவரை சந்தித்த ஒருவர் பசு கொல்வது என்பது எல்லா மிருகங்களையும் கொல்வதை போன்ற ஒன்றுதான்,  ஆனால் இஸ்லாமியர்கள் பசுவை கொல்கிறனர்,  அதனாலேயே பசுவதையை எதிர்க்கிறேன் என்றிருக்கிறார்,  கோல்வால்கர் இதை தவறான அணுகுமுறை என்கிறார், நம் நோக்கம் என்பது பசுவை காப்பது, அதற்காக மட்டுமே நாம் பசுவதையை எதிர்க்க வேண்டுமே ஒழிய இன்னொருவர் பசுவை கொல்கிறார் என்பதற்காக பசுவதையை எதிர்க்கிறேன் என்று சொல்வது தவறு, அது எதிர்மறை அணுகுமுறை, இப்படியான அணுகுமுறைகள் கூடாது என்கிறார்.

மேலும் இவர்  அமைதியை முன்வைப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வது இன்னும் சுவாரஸ்யமானது,  ஒரு வலுவானவன் அகிம்சையை அமைதியை முன்வைப்பதற்கும் பலவீனமானவன் முன்வைப்பதற்கும் வித்யாசம் உண்டு, பலமானவன் முன்வைக்கும் அமைதியே மதிக்கப்படும் என்கிறார்,  இதை காந்தியை வைத்து சொல்ல வில்லை, நேருவை முன்வைத்து ( மறைமுகமாக மற்றும் நேரடியாக ) சொல்கிறார், முக்கியமாக சீன போருக்கு முந்திய காலங்கள், பஞ்சசீல கொள்கைகள் என.   போருக்கு பின் தான் சொல்வதே நடந்தது, சீனா நம்மை மதிக்க வில்லை என்று நிறைய சொல்லிசெல்கிறார்,  முக்கியமாக கோல்வால்கருக்கு  இந்தியா மேலும் சிதைந்து விட கூடாது என்ற பதட்டம் இருந்தது,  இந்திய அரசு பலமாக இருக்க வேண்டும், அமைதி, அகிம்சை என்று சொல்லிக்கொண்டிருக்காமல் தைரியமாக செயல்பட  வேண்டும் என்று சொல்வது, இராஷ்டிரிய சேவா சங்கத்தில் ஒற்றுமையை வலியுறுத்தி பேசுவது என இதில் எல்லாம் இந்தியா மேலும் சிதைந்து விட கூடாது எனும் பதட்டதை நன்றாக காண முடிகிறது,  50, 60 காலங்களில் எல்லா தலைவர்களுக்கும் இந்தியா மேலும் உடையும் எனும் எண்ணம் இருக்குமென்று நினைக்கிறன்,  கோல்வால்கரிடமிருந்த ஜாக்கிரதை உணர்வின் வழியாக அந்த் காலத்தின் பொது உணர்வு இதுவாக இருக்கும் என யூகிக்கிறேன்,  நாகலாந்து பிரிவினை முயற்சிகள், கார்மீர் பிரிவினை முயற்சிகள்,  சீன ஆக்கிரமிப்பு,  திபெத் பிரச்னை போன்றவைகளில் இருக்கும் பின்னணிகள்,  சிக்கல்கள்,  அரசின் தவறுகள் போன்றவை பற்றி நிறைய பேசுகிறார்,  அதுவும் முக்கியமாக திபெத்க்கு நாம் துரோகம் இழைத்து விட்டோம் என்கிறார், அதன் சாபம் நமக்கு உண்டு என்கிறார்,  திபெத்தை சீனா ஆக்கிரமிக்க விட்டிருக்க கூடாது என்கிறார். 

அசாம் பிரச்னை பற்றி இவர் சொன்னது முக்கியமானது, அசாமில் பங்களாதேஷ் (அப்போதைய பாகிஸ்தான் ) மக்கள் குடியேறி அசாமை இந்தியாவிலிருந்து பிரிக்க முயன்றனர் என சொல்வது,  அசாமில் வங்காள இந்துக்களும் குடியேறி இருக்கின்றனர்,  ஆனால் அசாமில் குடியேறிய பங்களாதேசிகள் வங்காள இந்துக்களை விரட்டியடித்தனர்,  இதன் வழியாக அசாமில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவானது என்கிறார்,  இது போல பாகிஸ்தானியர்க்கு இந்தியாவை படிப்படியாக இஸ்லாமிய பிடிக்குள் கொண்டுவரும் நோக்கம் உள்ளது என்கிறார்.  நாகலாந்து பிரச்சனையையும் சொல்கிறார், அங்கிருந்த பிரிவினை தலைக்கும் கிருஸ்துவ மிசினரிக்கும் உள்ள தொடர்பு என,  இதில் கிறிஸ்துவம் சார்ந்த கோல்வால்கரின் எண்ணம் சார்ந்த சுவாரஸ்யமான ஒன்று உண்டு, கோல்வால்கர் ஏசுவை மெய்ஞானி என்கிறார்,  கோல்வால்கர் தாக்குவது கிருஸ்துவ அமைப்புகளை மட்டும்தான்,  முதலும் கடைசியுமான நல்ல கிரிஸ்துவர் ஏசு மட்டும்தான் என கோல்வால்கர் சொல்வது இந்த நூலில் இருமுறை வருகிறது ! ( இன்னொருவர் சொன்ன உண்மை வரியாக இதை சொன்னார் ).

தன் நேரடி அனுபவம், மற்றும் உரையாடல் மற்றும் கவனித்தல் வழியாக கிருஸ்துவ பொது பணிக்கு பின்னிருக்கும் நோக்கம் என்பது மதமாற்றம்தான்,  அவர்களது இத்தனை கோடி செலவு பொது பணிக்கு பின்னிருக்கும் ஒரே நோக்கம் இந்த மதமாற்றம் மட்டும்தான் என்கிறார்,  கோல்வால்கர் இதை வெறும் வெறுப்பு நோக்கில் சொல்வதாக எண்ணவில்லை, இது அவரது அனுபவம் வழியாக கண்டுணர்ந்த உண்மை என்பதாகவே நான் கருதுகிறேன்.  மேலும் கோல்வால்கர் மதமாற்றம் என்பது ஒருவரை இந்த நிலத்தின் பண்பாட்டிலிருந்து பிரிப்பது என்கிறார்,  அப்படி பிரிவதன் வழியாக அவர் இந்த நிலத்திற்கும் அந்நியமாகிறார் என்கிறார்,  இது முக்கியமான விஷயமாக நான்  பார்க்கிறேன்,  ஏனெனில் கோல்வால்கர் இஸ்லாமியர்களையும் கிறிஸ்துவர்களையும் இந்து எனும் தளத்தில் வைத்து பார்க்க வில்லை, அவர்களை இந்து பண்பாட்டிற்குள் சொந்த நிலத்தின் பண்பாட்டிற்குள் வர வேண்டும் என்கிறார்,  தனிப்பட்ட ஆன்மீகத்தை தன் சுதந்திரமாக வைத்து, பண்பாடு என்று வரும்பொழுது இந்த நிலத்தின் பண்பாட்டிற்குள் வர வேண்டும் என்கிறார், அப்படி வராத போது தேசம் சார்ந்த அன்பு இல்லாமல் ஆகும் என்கிறார்.

இன்னொரு அவர் சொன்னது முக்கியமாதானதாக பட்டது,  அதாவது பிரிவினைக்கு பின்பு இந்தியாவை நேசிக்கும் இஸ்லாமியர்கள் இங்கேயே இருந்து கொள்ளலாம் என்று தேச தலைவர்கள் சொன்னபிறகு இங்கிருந்த பல இஸ்லாமியர்கள் இங்கேயே இருந்து விட்டனர், ஆனால் அதற்க்கு முன்பு இஸ்லாமிய பிரிவினைக்கு தனி தேசத்திற்கு வாக்கெடுப்பு நடந்த போது பெரும்பாலான எல்லா இஸ்லாமியர்களும் பிரிவினைக்கு தனி தேசத்திற்கு ஆதரவாகவே வாக்களித்தனர்,  பிறகு மிக குறைவான கலாத்திற்குள் திடீரென இந்திய நேசம் எப்படி வந்தது என்கிறார்,  இது எனக்கு படு முக்கியமான கேள்வியாக பட்டது ! கோல்வால்கருக்கு தேசப்பிரிவினையில் சற்றும் சம்மதம் இல்லை,  மிக கடுமையாக எதிர்த்து எழுதியிருக்கிறார் இந்த நூலில்,  12 நூற்றாண்டுகளாக முயன்ற இஸ்லாமிற்கு இலவசமாக பிரிவினை வழியாக இந்த தேசத்தை பிய்த்து கொடுத்தார்கள் என்கிறார்,  இந்த நிலத்தின் ( அகண்ட பாரதம் ) பண்பாடு என்பது இந்து பண்பாடு மட்டுமே என்கிறார்,  அதே சமயத்தில் இஸ்லாமை இந்து மதத்திற்குள் அதன் சாரம் கலந்து இணைந்திருந்தால் ஏற்று கொண்டிருக்கலாம், ஆனால் அது நடக்க வில்லை என்கிறார்.  கோல்வால்கர் ஒரு இடத்தில் உலகில் உள்ள நல்ல விஷயங்களையும் ( தரிசனங்கள், ) இங்கு கொண்டுவந்து சேர்ப்போம் என்கிறார்,  உண்மையில் மேற்பரப்பாக கோல்வால்கரின் கருத்தை பார்க்கும் பொழுது அவர் இஸ்லாமிய எதிர்ப்பாளராக தெரிகிறார், ஆனால் உண்மையில் அவரிடம் மிக தெளிவான தீர்க்க தரிசன பார்வை இருக்கிறது, அவர் முன்வைக்கும் இந்து பயன்பாடு என்பது இந்தியாவின் தொன்மையான பண்பாடு, இந்த பண்பாடு புதிதாக வரும் சாரத்தையும் உள்ளிழுத்து கொள்ளும்,  அனைத்தையும் அரவணைக்கும்,  ஆனால் இந்த பண்பாட்டிற்கு மாற்றாக இன்னொரு பண்பாட்டினை மதம் வழியாக கொண்டு வந்து மாற்றாக முன்வைப்பதை அனுமதிக்கும் பட்சத்தில் முன்னிருக்கும் பண்பாட்டின் ஒருமை குலையும்,  கோல்வால்கர் இஸ்லாமை எதிர்ப்பது இதனால்தான், கோல்வால்கர் பண்பாட்டை அன்னையாக முன்வைப்பதன் காரணமே அந்த பண்பாட்டில் இருந்து பிறழாமல் இருக்க வேண்டிதான் என்று நினைக்கிறேன். ஒண்றிணையாமல் தனித்து நிற்க முயலும் பண்பாடுகள் இந்தியாவை சிதைக்கும் என்ற புரிதல் அவர்க்கு இருந்தது, அதனாலேயே இஸ்லாமை அந்த நோக்கில்தான் எதிர்த்தார் என்று எண்ணுகிறேன்.

கோல்வால்கருக்கு காந்திஜி மீது மதிப்பிருந்தது,  இந்தியாவின் மக்களை நல்வழி படுத்தி கொண்டு சென்றார் என்று கூட சொல்கிறார்,  அவரது புத்திசாலித்தனமான சாதாரணமக்கள் புரிந்து கொள்ளும் செயல்பாடுகள் என கூட சொல்கிறார்,  ஆனால் நேருவின் செயல்பாடுகள் முக்கியமாக அவர் பிரதமராக இருக்கும் சமயத்தில் அவரது செயல்பாடுகள் தவறானவையாக இருந்ததாக அவர் எண்ணுகிறார் என்பதை இந்நூல் வழியாக புரிந்து கொள்கிறேன்,  இதில் நூலில் இருந்த ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது, சீன போருக்கு பின் இரண்டு மாதம் கழித்துதான் போர் சமயத்தில் நாம் கேட்டிருந்த போர் விமானங்களை (2 ) ரஸ்யா அனுப்பி வைக்கிறது, ஆனால் அதுவரை நேசமே இல்லாமல் இருந்த அமெரிக்க மற்றும் இரண்டு ஐரோப்பிய நாடுகள் போர் சமயத்தில் இந்தியாவிற்கு உடனே கொடுத்து உதவி செய்கிறது,  ரஸ்யா மீது கோல்வால்கருக்கு நம்பிக்கை இல்லை,  சீனா மீது சுத்தமாக நம்பிக்கை இல்லை,  அவர்களை நம்பாதீர்கள் என்று அடிக்கடி சொல்கிறார்,  அவையிரண்டும் கம்யூனிச அரசாங்கம் என்பது கோல்வால்கரின் நம்பிக்கையின்மைக்கு முக்கிய காரணம். 

கோல்வால்கர் இந்து பயன்பாட்டின் அடித்தளமாக முன்வைப்பது பிறரை நேசிப்பது,  பிற உயிர்களை தெய்வத்தின் சாயலாக எண்ணி பூஜித்து சேவை செய்வது ( இப்போதும் இயற்கை இடர்கள் சமயத்தில் சங்கத்தின் சேவைகள் மிகுதியாக  இருப்பதை பார்க்க முடியும் ).  மேலும் இந்து பண்பாட்டில் தன் தேவைக்கு மீது ஆடம்பராக இருப்பது பிழை,  தேவை மீது நம்மிடம் இருப்பது பிறருக்கு சேவை செய்வதற்காகவே.  இந்த பண்புநலனைதான் கோல்வால்கர் இந்த நிலத்தின் பண்பாடாக முன்வைக்கிறார். 
பொதுவுடைமை வாதம்,  ஜனநாயகம் இரண்டையும் குறைகள் கொண்டதாகவே சொல்கிறார்,  காந்திஜி முன்வைக்கும் தர்மகர்த்தா வழிமுறையில் கூட தவறுக்கான சாத்தியத்தை சொல்கிறார்.
கம்யுனிஸத்தில் அவர் முன்வைக்கும் குறைகள் எல்லாமே இப்போது கண்முன் காண முடிவதை பார்க்க கோல்வால்கரை ஒரு தீர்க்கதரிசி என்றே சொல்ல தோன்றுகிறது, இப்போது நாம் பார்க்கும் கம்யூனிசத்தின் பிழைகள் யாவையும் ஒன்றுவிடாமல் இந்த நூலில் சொல்கிறார்.  ஒரு உதாரணத்தை சொல்லலாம், கோல்வால்கர் வருமான வரி விதிப்பை எதிர்மறையான ஒன்று என்ற விதத்தில் பார்க்கிறார், இப்படியான வரிகள் சம்பாதிப்பதற்கான ஊக்கத்தை குலைக்கும் என்கிறார்,  அதற்கு மாறாக கட்டுப்பாடுகள் இல்லாமல் செல்லவிட்டு பிறகு நெறிப்படுத்தலாம் என்கிறார், உலகப்போருக்கு பின்பு வீழ்ந்த ஜெர்மன் தன் கட்டுப்பாடுகளை தளர்த்தி கொண்டதால் பொருளாதாரத்தில் பெரிதாக வளர்ந்தது என்கிறார்.
கோல்வால்கரிடம் இருந்த ஒரு பழமை வாதம் என நான் எண்ணுவது வலிமை மீதான அவரது ஆராதனைதான்,  அதுவே ஆண்மை என்கிறார்,  இந்நூலில் பல பக்கங்கள் அதற்காகவே எழுதி இருக்கிறார், வலிமை மட்டுமே துணை, அதுவே நம்மை காக்கும் என்பதை வலியுறுத்தும் எழுத்துக்கள்,  காந்தி வலிமை எனும் ஒன்றினை சத்தியத்தின் வழியாக பார்க்கிறார், அடைந்தார் என்று சொல்லலாம்,  ஆனால் கோல்வால்கர் என் நோக்கில் நடைமுறைதனத்தின் வழியாக மனிதனின் மனம் செயல்படும் இயல்பு அறிந்த பார்வை கொண்டவராக இருக்கிறார், அதனாலேயே வலிமையை முன்வைக்கிறார்,  காந்தி தோற்ற இடம் என நான் கருதுவது பிரிவினைதான், இஸ்லாமியர்கள் பிரிந்து போக மாட்டார்கள் என நினைத்தார்,  அந்த சூழ்நிலையில் தன் நம்பிக்கை பொய்ப்பதை எதிர்கொள்ள முடியாமல் தோற்றார், கோல்வால்கர் இந்துக்கள் வலுவோடு இருந்திருந்தால்,  பண்பாட்டு உருவாகியிருக்கும் ஆண்மையோடு இருந்திருந்தால் இந்துக்கள் பிரிவினையை ஏற்றிருக்க மாற்றார்கள்,  அன்னையை பிளப்பதை அனுமதிக்க மாட்டார்கள் என்கிறார்,  அதனாலேயே இனியாவது இந்துக்கள் இந்து பண்பாட்டின் ஆண்மையோடு இருக்க வேண்டும் என்று நூல்முழுதும் சொல்கிறார்.







No comments:

Post a Comment

சிதை

  அப்பாவுக்கு எப்போதும் பதபதைப்பு உண்டு , நானோ ,அக்காவோ வீடு வர கொஞ்சம் தாமதம் ஆனாலும் பதறி விடுவார் . கொஞ்சம் தாமதம் ஆனாலும் நாங்கள் வீடு வ...