கனவு
அறைக்குள் அமைதி நிறைந்திருந்தது, ஒற்றை அறை, கதவை ஒட்டி சமையற்கட்டு திட்டு, சில பழையதான சமையற் பாத்திரங்கள், கதவுக்கு நேரெதிர் சுவரின் வலது மூலையில் 5 அடி இரும்பு பீரோ, அதையொட்டி சிறுமேசை அதில் எந்தியவியல் புத்தகங்கள், அதையொட்டி ஒரு சாலானி, அதன் மீதும் அதன் கீழும் குடங்கள், நீர் பாத்திரங்கள்,
அறையில் நடு உச்சியில் ஒரு எந்திர காற்றாடி, இவ்வளவுதான் அறை, காற்றாடியின் கீழ் பிளாஸ்டிக் பாயின் மீதிருந்த துணி விரிப்பில் சரஸ்வதி தூங்கி கொண்டிருந்தாள், அவள் அருகில் சங்கர், அவள் மகன், இன்ஜினியரிங் 2 ஆண்டு படித்திருக்கிறான், அவனும் உறக்கத்தில் இருந்தான், குளத்தில் கல் விழுவதை போல மணி 5.30 நெருங்கியதும் சரஸ்வதி தூக்கம் கலைத்து எழுந்தாள்.
கலைந்திருந்த போர்வையை எடுத்து சங்கர் மீது சரியாக போர்த்திவிட்டாள், தான் நிதானித்து திரும்புவதற்குள் வளர்ந்து பெரியவனாகி விட்டான் மகன் என்று அடிக்கடி இப்போது எண்ணிக்கொள்கிறாள் , இப்பொழுதெல்லாம் அவன் முகம் பார்க்க தலையை உயர்த்தி கொள்ள வேண்டியிருக்கிறது சரஸ்வதிக்கு, தனது கனவு நிறையும் கணம் நெருங்கி வருவதை எண்ணி எப்போதும் அதிள் கனல் மூட்டி அதிலேயே வாழ்ந்து கொண்டிருப்பாள்.
எழுந்து முகம் கழுவினாள், சுவர்கடிகாரத்தில் நேரத்தை பார்த்தாள் , ஸ்டவ்வில் தீக்குச்சியை வைத்து நெருப்பு பற்றவைப்பதை போல அவளுள் அவசர மனநிலை பற்றி கொண்டது, துரித கதியில் கழுவ வேண்டிய பாத்திரங்களை எடுத்து வாசல் வந்தாள், கதவுக்கு வெளியே வலதுபக்கத்தில் இருந்த கழுவுமிடத்தில் பாத்திரங்களை போட்டு கழுவினாள், பின் எழுந்து வாசலை சுத்தம் செய்தாள், மணி 6.00 ஆக ஆரம்பித்திருந்தது, உள்ளே வந்து மூன்று ப்ளஸிட்டிக் குடங்களை எடுத்து உப்புத்தண்ணி வரும் பொது குழாய்க்கு சென்றாள், அங்கு ஏற்கனவே மூன்று பேர் நின்றிருந்தனர், அவர்களுக்கு அடுத்து குடங்களை வைத்து நின்றாள், பின் அவளுக்கு பின்வந்த ஒரு பெண்மணியிடம் "பாத்துக்குங்கம்மா" என்று சொல்லி அவசரமாக வீடு நோக்கி சென்றாள், உள்ளே சென்று ஸ்டவ் பற்றவைத்து அலுமினிய சோற்றுப்பானையை வைத்து அதில் இரு கிளாஸ் அரிசியை நீரில் கழுவிய பின் போட்டாள், பின் " சங்கரு, டே சங்கரு " என்று கத்திவிட்டு பொதுக்குழாய் நோக்கி வேகம் கொண்டு நடந்தாள், அவளது இரு குடங்களில் அந்த பெண்மணி நீர்பிடித்து வைத்திருந்தாள், மூன்றாவது குடம் நிறைந்து கொண்டிருந்தது, அவள் அந்த பெண்மணியிடம் "வந்தரங்கமா " என்று சொல்லி ஒரு குடத்தை இடது இடுப்பிலும் இன்னொரு குடத்தை வலது கையிலுமாக எடுத்து வீடு நோக்கி வேகமாக நடந்தாள் , அறையில் சங்கர் அடுப்பில் இருந்த சோற்றுப்பானையை கிளறி கொண்டிருந்தான், அவள் குடங்களை இறக்கி, அதை நீர்ப்பாத்திரத்தில் ஊற்றிவிட்டு பின் காலி குடத்தை சங்கரிடம் கொடுத்தாள், அவன் ஏதும் சொல்லாமல் குடங்களை எடுத்து பொது குழாய் நோக்கி சென்றான், சரஸ்வதி காய்கறிகளை எடுத்து குழம்பு செய்வதற்கு ஆயத்தமானாள்.
சங்கர் கையில் காலேஜ்பேக் எடுத்துக்கொண்டும், சரஸ்வதி சாப்பாடு கூடையை எடுத்து கொண்டும் பஸ்ஸ்டாண்ட் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர், சரஸ்வதி கூடையில் இருந்த மணிபர்ஸை பிரித்து அதில் இருந்து 50 ரூபாய் எடுத்து மகனிடம் கொடுத்து " சாயங்காலம் எங்கையும் சுத்தாம வீடு வந்து சேரு " என்று சொல்லி மேடும் ஏதோ ஞாபகம் வந்தவளாக மீண்டும் மணிபர்ஸை எடுத்து இன்னொரு 50 ரூபாய் கொடுத்து " கோதுமையை அரச்சு கொண்டுவந்துருடா " என்றாள், அவன் ஏதும் சொல்லாமல் வாங்கி வைத்து கொண்டான். அவன் பஸ் ஏறுவது வரை அவன் கூட நின்றாள், அவன் படிக்கட்டில் ஏறி திரும்பி " வரம்மா " என்று சொல்லி உள்ளே போனான், பஸ் நகர்ந்து சென்றபிறகு இன்னும் அரைகிலோ மீட்டர் தூரத்தில் இருந்த தனது பனியன் துணி அச்சகம் நோக்கி நடந்தாள்.
அவள் கூட்டத்திற்குள் உள்ளே போக 9.10 ஆகி விட்டது, வாசலின் சற்று உள்ளே இருந்த டேபிளில் இருந்த ஞானம் " தினமும் இப்படி லேட்டாவே வா " என்று கடிந்தான், அவள் ஏதும் சொல்லாமல் உள்ளே போனாள், அவள் போகும்போது, " இதுவே நாங்க அஞ்சு நிமிஷம் லேட்டா அனுப்பினா எழவுவீட்டு கிழவி மாதிரி மூஞ்ச வச்சுக்கறது " என்றான் ஞானம், அதற்குள் அவள் உள்ளே சென்று விட்டிருந்தாள், ஞானம் தான் சொன்ன வார்த்தையை திரும்ப தனக்குள் யோசித்துப்பார்த்து சிரித்து கொண்டான்.
இது நீண்ட டேபிளில் வரிசையாக துணிகளை விரித்து போட்டு, ஒன்றுபோலவே அச்சு வைத்து அச்செடுக்கும் வகையான துணி அச்சகம், டேபிள் 6 அடி அகலமும் 80 அடி நீளமும் இருக்கும், இடத்திற்கு ஏற்ப பல நீளத்தின் அளவு மாறும், அகலம் ஒரே அளவுதான், ஒரு கூடத்தில் இப்படி நான்கைந்து டேபிள்கள் இருக்கும். இருபக்கமும் வரிசையாக துணிகள் எடுக்கப்படும், பின் அதன் மேல் அச்சு பிளேட் வைத்து அச்சு உருவாக்குவார்கள், எத்தனை நிறங்கள் வேண்டுமே அத்தனை முறை அதன் மீது அச்சேற்றுவார்கள், அச்சு திரும்ப திரும்ப வைக்கப்பட்டாலும் துளிகூட பிழையில்லாமல், மாறாமல் ஒரேபோல அச்சு விழுந்திருக்கும், தவறின் சாத்தியம் என்பது 1% தான். முதலில் வரிசையாக துணியினை அடுக்குவார்கள், பெரும்பாலும் அது பனியனின் முன்பாகமாக இருக்கும், பின் அச்சு பிளேட்டின் நடுமையமும், துணியின் நடுமையமும் இருக்கும் படியாக பிளேட் ஸ்டாப்பரை சரி செய்வார்கள், அந்த ஸ்டாப்பரை ஒட்டி வைக்கும் பொழுது தானாக துணியின் மையமும் அச்சு பிளேட்டின் மையமும் சரியாக வந்தமையும், ஸ்டாப்பர் என்பது டேபிள் இரு விளிம்பிலும் இருக்கும் சிறு அலுமினிய நீள் காடிபட்டை அதில் ஸ்டாப்பராக பயன்படுத்தப்படும் போல்டை இடதும் வலதுமாக நகர்த்தமுடியும்.
சரஸ்வதி போல மேலும் அங்கு 4 பெண்கள் உண்டு, அது தவிர 7 ஆண்கள் இவர்கள் 11 பேர்தான் பணியாளர்கள், இது தவிர ஞானம் மேனேஜர், முதலாளி உள்ளே ஆபிஸில் இருப்பார்.
வண்டி கிளம்பியது போல அச்சு வேலை சரஸ்வதி உள்ளே செல்லும்போதே துவங்க ஆரம்பித்திருந்தது, அவள் அதனுடன் இணைந்து கொண்டாள், பணியாளான அருள் சரஸ்வதியிடம் உரிமையாக பேசுபவன், அவளும் அவனிடம் பாசம் காட்டுவாள், அவனுக்காக டீ எடுத்து வைத்திருப்பாள், அவனும் அவளுக்கு வேலை நேரத்தில் உதவிகள் செய்து கொடுப்பாள். இவர்கள் இருவரையும் இணைத்து மற்றவர்கள் கிசுகிசுத்து கொள்வார்கள்.
சரஸ்வதி துணியில் அச்சாகி இருந்த வடிவத்தை பார்த்தாள் , ஒரு பார்பி கேர்ள் ஓவியம் அது , கையில் ஷாப்பிங் துணிப்பைகளும், சிகப்பு முடியும் பொம்மைக்குரிய முகமும் கொண்டிருந்தாள், நீல நிற டிரௌசர் அணிந்திருந்தாள், ஷு மஞ்சள் நிறத்தில் இருந்தது, கண்கொட்டாமல் சிலநிமிடங்கள் அவளையே பார்த்தபடி தன்னை மறந்து நின்றிருந்தாள், தூரத்திலிருந்து ஞானத்தின் குரல் " அங்க என்ன வேலையை பார்க்க நின்னுட்டு இருக்க " என்று கத்துவது கேட்கவும் சுதாகரித்து வேலையில் கவனம் செலுத்தினாள், ஆனால் அந்த பார்பி கேள் மீதுதான் அவள் கவனம் இருந்தது, வரிசையாக எல்லா துணிகளிலும் பார்பி கேர்ள்கள், எல்லாமே அவளையே பார்த்து கொண்டிருப்பதாக உணர்ந்தாள், பின் அந்த உணர்தலை தனக்குள் உணர்ந்து சிரித்தாள்.
டீ பிரேக் நேரம் ஆகியிருந்தது, அவள் சிறுநீர் கழிக்க கழிவறை நோக்கி சென்றாள், அது கூடத்தின் நேர்பின்னால் இருந்தது, கூடத்தின் பின்கதவு வழியாக சென்றாள், கழிவறையின் முன் திருப்பத்தில் சட்டெனெ அருள் நிற்பது தெரிந்து சரஸ்வதி துணுக்குற்றாள், சில நொடிகள்தான் , அவன் சிரித்தவாறே சுற்றும்முற்றும் பார்த்து சட்டெனெ சரஸ்வதியின் மார்பை வேகமாக கசக்க ஆரம்பித்தான், அவள் அவன் கைகளை பலவந்தமாக தடுத்து தள்ளி கழிவறைக்கு உள்ளே புகுந்து தாழை போட்டு கொண்டாள், அவன் சோர்வுற்றவனாக நடந்து கூடத்திற்கு முன்பு நின்றிருந்த டீ டேபிள் நோக்கி நடந்தான், அவள் அவன் போனதை உணர்ந்து வெளியே வந்தாள், பின் அவளும் டீ டேபிள் நோக்கி நடந்தாள். டீ சாப்பிடும் தருணத்தில் இருவருமே ஒருவரையொருவர் நோக்கி கொள்ள வில்லை, அவள் முகத்தில் அப்படியான நிகழ்வு நடந்ததை போன்ற எந்த சலனமும் இல்லாது இருந்தாள், பின் டீ நேரம் முடிந்து வேலை ஆரம்பித்ததும் பழையபடி வேலையில் மூழ்கினாள், பார்பி கேள்கள் அவளை பார்க்க விரும்பி கொண்டிருந்தன, ஆனால் அவள் தனக்குள் மூழ்கி வேலையில் ஆழ்ந்தாள்.
மதிய நேரத்தில் எல்லோரும் உணவு கூடையை எடுத்து உணவு அருந்த அமர்ந்து கொண்டிருந்தனர், சரஸ்வதி அருளுக்கு அருகில் போய் அமர்ந்து கொண்டாள், இருவரும் உண்டு கொண்டிருந்தனர், அவள் தனது குழம்பு பாத்திரத்தில் இருந்த குழம்பில் கொஞ்சம் அவனுக்கு கொடுத்தான், மெதுவான அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் " இது மாதிரி இனிமேல் பண்ணாத " என்றாள்.
சரஸ்வதி மீது அருள் கொண்ட ஆர்வம் அவனுக்கு ஞானம் சொல்லி வந்த ஒன்று, சரஸ்வதி இதுவரை ஏலெட்டு பேருடன் குடும்பம் நடத்தியவள் என்று ஞானம் முதலில் சொன்னபோது அருள் அதிர்ந்தான், அவளில் அது மாதிரி எந்த இயல்பையும் அவன் அதுவரை கண்டதில்லை, அவள் தன் வேலை தவிர வேறு எதிலும் ஆர்வமில்லாதவள் அவள் என்று எண்ணிக்கொண்டிருந்தான், வீண் பேச்சு, சிரிப்பு எதுவும் அவளிடம் இருக்காது, ப்ரோக்ராம் செய்து அளிக்க பட்ட எந்திரம் போல வேலை பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டிருப்பவள் என்று அவனுக்கு தோன்றும். ஞானம் அப்படி சொன்னபோது அவனுக்கு அது பெரிய ஆச்சிரியம் அளித்தது.
ஞானத்திடம் அருள்" இப்ப யார்கூட இருக்கா " என்று கேட்டான், அவன் அவனை ஏறஇறங்க பார்த்து " இப்ப யாரும் இல்ல, அவன் பையன் இங்க காலேஜ் படிக்க இந்த ஊர் வந்தது முதல் மாறிட்டா " என்றான், " அதுக்கு முன்னாடி புருஷன் மாதிரி எவனாவது கூட இருப்பான், ஒருவருசம் இரண்டு வருஷம் னு, அப்பறம் ஆள் மாறும், நான் கூட கொஞ்சநாள் வைத்திருந்தேன் " என்று கண்களை சிமிட்டி சிரித்தான்.
அருள் அதன் பிறகு அவளிடம் எவ்வளவோ நெருங்கி பார்த்தான், உண்மையில் படுதீவிரமாக காதலித்தான், அவளது மூக்குத்தி முகம் அவனுக்கு கொள்ளை பிரியமாக இருந்தது, பற்கள் சற்று முந்தியிருந்தாலும் அதை உதடுகள் வைத்து அழகாக மறைத்து கொள்வாள், அப்படி செய்யும்பொழுது அவளும் முகம் உம் என்று இருக்கும், அதை மிக ரசிப்பான், மாசு மருவமில்லாத வெளிர் கருப்பு நிறம், வெயிலில் மின்னக்கூட செய்யும் என்று நினைத்து கொள்வான், அவளுக்கு முடி குறைவு என்பதுதான் அவனுக்கு சற்று வருத்தத்தை கொடுத்தது, அவளது இளம்தொப்பை சேலையால் இல்லாதது போல மறைமாயம் செய்திருக்கும், அளவான மார்புகள், அவள் அவனை பாக்காத போது அவனது கவனம் அவளது மார்பில்தான் இருக்கும், இருமுறை எதேச்சையாக இடிப்பதை போல அவளது பிருஷ்டத்தை அவன் உடல் தொட்டிருக்கிறது, அவளிடம் எந்த சமிஞ்சையும் வெளிப்படாது, அவள் என்ன உணர்கிறாள் என்று அறியாது குழம்பிப்போய்த்தான் மார்பில் கைவைக்கும் யோசனைக்கு வந்தான்.
வேலை நேரம் முடியும் சமயம் நெருங்கிகொண்டிருந்தது, அவள் முதலாளி இருக்கும் ஆபிஸ் நோக்கி சென்றாள், அவள் செல்வதை அருள் சற்று திகிலுடன் நோக்கி கொண்டிருந்தான், ஞானமும் அவள் ஆபிஸ் போவதை பார்த்து கொண்டிருந்தான், உள்ளே டேபிள் ஒரு இளைஞன் இருந்தான் அவனது தந்தை உருவாக்கிய நிறுவனம் அது, இப்போது இவன் நிறுவனத்தை பார்த்து கொண்டிருந்தான், என்ன என்பதை போல அவளை பார்த்தான், அவள் " பையனுக்கு காலேஜ் பீஸ் கட்ட பணம் இல்லைனு பத்தாயிரம் ரூபா கேட்டிருந்தேன், கொடுத்தீங்கனா ரொம்ப உதவியா இருக்கும் " அவன் சற்று நிமிடங்கள் எடுத்துக்கொண்டு " இப்படி அட்வான்ஸ் வாங்கிட்டே இருந்தா எப்ப இதெல்லாம் கட்டி முடிப்பீங்க " என்று சொல்லியபடி " இந்தாங்க " என்று பணம் எடுத்து கொடுத்தான். அவள் மகிழ்வுடன் வாங்கி வெளியேறினாள்.
முதலாளியின் மகன் தனக்குள் ஒரு நிறைவை உணர்ந்தான், அவனுக்கு அப்பா சில விதிகளை வைத்திருந்தார், அதிலொன்று இவளுக்கு பணஉதவி செய்து கொடுப்பதை எந்த காரணம் கொண்டும் நிறுத்த கூடாது என்பது, கூடவே இவள் பற்றி அப்பா தன்னிடம் சொன்னதும் அவனுக்கு ஞாபகம் வந்தது," தங்கமான பொண்ணுடா அவ "
சரஸ்வதி வீட்டிற்கு வரும்போது இரவு9 மணி ஆகி இருந்தது, சங்கர் பாயில் அமர்ந்து ஏதோ எழுதிகொண்டிருந்தான், அவள் வரும்போது புரோட்டா வாங்கி வந்திருந்தாள், வந்தவள் சுவரில் சாய்ந்து அப்படியே அமர்ந்து கொண்டாள், சங்கர் எழுந்து இரு தட்டுக்களை எடுத்து வந்து அதில் புரோட்டாகள் வைத்து சால்னா ஊற்றினான், இருவரும் சாப்பிட்டனர், சங்கர் வகுப்பில் நடந்தவைகளை, தனக்கு ஆங்கிலம் சரியாக வராத குறைகளை எல்லாம் சொலலி கொண்டிருந்தான்,சரஸ்வதி ஏதும் பேசமால் அவனை வாஞ்சையோடு பார்த்து கொண்டிருந்தாள்.
இரவில் தூங்கிகொண்டிருந்த சங்கரின் கன்னங்களை வருடி, அவன் நல்ல உடை அணிந்து பெரியவேலையில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதை போல எண்ணி கனவு கண்டு கொண்டிருந்தாள்!