Thursday, October 7, 2021

தீ

 கோவில் வெளிவாசல் முன் கூச்சலும் குழப்பமுமாக பலர் சுற்றி நின்று வாக்குவாதம் செய்து கொண்டிருந்ததை தூரத்திலேயே சந்திரர் பார்த்தார், அவர்தான் இந்த கோவிலின், கோவிலை சுற்றி இருக்கும் அந்தண மக்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர்,  இந்த பொறுப்பு அவரது குடும்பம் தலைமுறை தலைமுறையாக பெற்று வருவது.  கோவில் முன் இப்படி களேபரம் இருப்பதை பார்த்து வருத்தமடைந்து வேகமாக அங்கு வந்தார். அவரை பார்த்ததும் சற்று கூச்சல் குறைந்தது.  சந்திரர் மற்றவர்களை பார்த்து" இங்கு என்ன பிரச்னை, ஏன் கூச்சலிடுகிறீர்கள் " என்றார்.  அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் இன்னொருவரை சுட்டி கட்டி இவர் கோவிலினுள் நுழைய பார்க்கிறார், இவர் புலையர்,  உங்களுக்கு அனுமதியில்லை என்று சொன்னால் கேட்க மறுக்கிறார், அடம் பிடிக்கிறார், அழுகிறார் " என்றார்.  சந்திரர் அவரை திரும்பி பார்த்தார்,  தொட்டால் உதிர்ந்து விடும் போன்ற மென்மையான சிற்றுடலுடன், கண்களில் கண்ணீருடன், இறைவனை காணும் ஏக்கத்துடன் ஒருவர் நின்றிருந்தார், "சந்திரர் உங்கள் பெயர் என்ன" என்றார், அவர் " என் பெயர் நந்தன்,  நந்தனார் என்று எங்கள் ஊரில் அழைப்பார்கள் என்றார். 


சந்திரர்க்கு நினைவு தெரிந்த,  சுயமாக யோசிக்க துவங்கிய நாள் முதல் இந்த மன குழப்பமும், சஞ்சலமும் இருந்தது. சிறுவயதில் தன் தந்தை சுரேந்திரரிடம் சந்திரர் தொடர்ந்து கேட்ட கேள்வி இதுதான் " ஏன் பிறர் ஆலயத்திற்குள் நுழைய கூடாது " என்பதுதான்.  சுரேந்திரர் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு பதில் தருவார்,  அவர்கள் வேறு சமூகம்,  கோவிலுக்கு என்று நியமங்கள்  உண்டு, அதை அவர்கள் பின்பற்றாதவர்கள், இந்த கோவிலுக்கு செல்லும் உரிமை என்பது இந்த நியமங்கள் பின்பற்றும் சமூகத்திற்கு உரியது, நாம் அந்த நியமத்தை பின்பற்றும் சமூகம்,  மேலும் இது பாரம்பரிய உரிமை,  அந்த உரிமை நம்மிடம் மட்டுமே உள்ளது என தனக்கு தோன்றியபடி ஒவ்வொருமுறையும் ஒவ்வொன்றாக சொல்வார்,  ஆனால் சந்திரர்க்கு இதில் எதிலும் திருப்தி கிட்டியதில்லை.  பிறகு வளர்ந்து வாழ்க்கை சிக்கல்களுக்குள் புகுந்து இதை எல்லாம் யோசிப்பதை விட்டுவிட்டார், தந்தை மறையவே சமூக தலைவர் பொறுப்பும் அவருக்கு வந்து சேர முற்றிலும் இதையெல்லாம் யோசிப்பதை மறக்கலானார்.  நந்தனை பார்த்தபோது சந்திரர்க்கு  இதேல்லாம் மனதில் திரும்ப வந்து நின்றது. சந்திரர்க்கு நந்தனை பார்த்தவுடனே பிடித்து போனது,  பக்தி தவிர வேறேதும் அறியாத முகம். 


"நந்தனாரே, கோவிலுக்குள் செல்வதெற்கென்று சில நியமங்கள் உண்டு,  நீங்களோ, உங்கள் சமூகத்தோரே உள்ளே நுழைய அனுமதி இல்லை,  இதுதான் இங்கு நடைமுறை, இந்த நடைமுறையை மாற்றும் அதிகாரம் எனக்கில்லை,  மாற்றம் நிகழாமல் பார்த்து கொள்ளும் இடத்திலேயே நான் இருக்கிறேன்,  எம்மை புரிந்து கொள்ளுங்கள்.  " என்றார். 

நந்தனார் பதில் ஏதும் சொல்லாமல் தலை கவிழ்ந்து அழுது கொண்டிருந்தார்,  சுற்றி இருந்த எல்லோரும் என்ன செய்வது என்றறியாமல் வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்,  எல்லோரின் முகத்திலும் நந்தனார் அழுவதை கண்ட துக்கம் இருந்தது.  கூட்டத்தில் இருந்த ஒருவர் "நியமத்தை மாற்ற முடியாது என்பதால்தான் உங்களை உள்ளே விட மறுக்கிறோம்,  மற்றபடி உங்களை அவமதிப்பதிப்பதற்காக இல்லை,  எங்களுக்கே கூட எல்லோருக்கும் எல்லாம் அனுமதியில்லை, விலக்க பட்டவர்கள் கூட உண்டு " என்றார். 


நந்தனார் கண்ணீருடன் பேசலானார் "இறைவனை தரிசிக்க வழி இல்லை என்றால்,  தரிசிக்கும் தகுதி எனக்கில்லை என்றால் பிறகு இந்த உடலுடன் வாழ்ந்து என்ன பயன்,  என்னை மாய்த்து கொள்வதே சரி " என்றார். 

சந்திரர் துடித்து " இது என்ன பிதற்றல் பேச்சு,  உம் பக்தி ஈடு இணையில்லாதது,  இறைவன் எப்போதும் உன்னுடன் இருப்பார்,  தயவு செய்து வீட்டிற்க்கு செல்லுங்கள், இறைவனின் ஆசிர்வாதம் உன்னோடு உடன் இருக்கும் " என்றார்.  

நந்தனார் ஏதும் சொல்லாமல் கண்ணீருடன் நடந்து விலகி சென்றார். 


செல்லும் போது மனம் முழுதும் தனக்கு இனி வாழ விருப்பமில்லை,  இறைவனை காணாமல் வாழ்ந்து என்ன பயன் என்ற எண்ணமே நந்தனாருக்குள் அரற்றி கொண்டிருந்தது.  நீண்ட தூரம் நடந்தார், நடந்த களைப்பு, உண்ணாமல் இருந்தது எல்லாம் அவரை களைப்பிற்குள்ளாக்கியது,  இருட்டவும் தொடங்கியது,  தூரத்தில் இருந்த ஆலமரத்தின் அடியில் சென்று தரையில் படுத்து கண்மூடினார்,  சுவாசத்திற்கு இணையாக அவர் மனம் முழுதும் அவ்வளவு களைப்பிலும் இறைவனின் நாமம் குடிகொண்டிருந்தது. 


சந்திரர்க்கு இருப்பே கொள்ளவில்லை, முழு தவறு என்று தெரிந்திருந்தும் நியமங்களின், பாரம்பரிய தொடர் வழக்கங்களின் பாரம் தன்னை ஏதும் செய்யவிடாத இயலாமையை எண்ணி தூங்க முடியமால் மனம் தவித்து கொண்டிருந்தார். சந்திரர் உறங்க நெடுநேரமாகி விட்டது. 


மனித உடல் ரூபத்தில் இறைவன் சந்திரர் முன் தோன்றினார்,  சந்திரர் ஆனந்தத்தில் கை தொழுதார், சுற்றி மேகங்கள் சுழன்று கொண்டிருந்தது.  இறைவன் சந்திரரிடம் " அவனை அழைத்து உள்ளே கொண்டு வா, என்னை காண வை " என்றார்.  சந்திரர் " வழக்கத்தை நான் மாற்ற இயலாதே ஸ்வாமி " என்றார், மேலும் " அந்தணர் அல்ல அவர் " என்றார்.  " பிரிவுகள் உங்களுக்குள்தான், எனக்கு நீங்கள் எல்லோரும் ஒன்றுதாம் " என்றார். சந்திரர் " கோவில் நெறிமுறைகள்.. " என்று ஏதோ சொல்லவந்தார், இறைவன் மறுத்து " அதை நான் ஏதும் மறுக்க வில்லை,  அப்படியான நெறிமுறைகளை, வழக்கங்களை அவனுக்கு கற்று கொடு " என்றார்.  தன்னுடல் உலுக்க படுவதை உணர்ந்து எழுந்த சந்திரரை நோக்கி அவர் மனைவி " என்ன தூக்கத்தில் பிதற்றி கொண்டிருக்கிறீர்கள் " என்றார்,  சந்திரர்க்கு கடவுள் தோன்றியது கனவில் என்பது உரைத்தது, முகம் புன்னகையும் மனம் நிம்மதியும் உற்சாகமும் கொண்டது. 


நந்தனாரை ஆளனுப்பி கூட்டி வந்தார், தன் சமூகத்திற்கு தன் கனவில் இறைவனை உரைத்ததை சொன்னார்.  நந்தனார் பிரமை பிடித்தவர் போல் நின்று கொண்டிருந்தார், மெல்ல சந்திரர் உரைத்தது மனதில் புரியவே ஆனந்தத்தில் கண்ணீர் வடித்தார்.  கோவிலின் நெறிமுறைகளை நந்தனார்க்கு சந்திரர் விளக்கினார், பின் மந்திரங்கள் ஓதி முப்பரி நூல் அணிவித்தார்.  பின் மங்கள ஒலிகள் பின்தொடர நந்தனாரின் கையை பிடித்து கொண்டு கோவிலுக்குள் அழைத்து சென்று கருவறைக்குள் கூட்டி வந்தார்,   ஆனந்தத்தில் நந்தனாரின் கண்களின் நீர் வழிந்து கொண்டிருந்தது.  சந்திரரே ஆரத்தி தட்டை எடுத்து இறைவனிடம் காட்டி அர்ச்சித்து பின் தீப தட்டை நந்தனாரினிடம் காட்டி கொண்டார், தீபத்தின் தீயொளியை இரு கைகளால் பற்றி கண்களில் ஒற்றி கொண்டார்,  சந்திரர்க்கு அந்த தீயொளி நந்தனாருக்குள் புகுந்து கொண்டது போல தோன்றியது. 






சிதை

  அப்பாவுக்கு எப்போதும் பதபதைப்பு உண்டு , நானோ ,அக்காவோ வீடு வர கொஞ்சம் தாமதம் ஆனாலும் பதறி விடுவார் . கொஞ்சம் தாமதம் ஆனாலும் நாங்கள் வீடு வ...