அப்பாவுக்கு எப்போதும் பதபதைப்பு உண்டு , நானோ ,அக்காவோ வீடு வர கொஞ்சம் தாமதம் ஆனாலும் பதறி விடுவார் . கொஞ்சம் தாமதம் ஆனாலும் நாங்கள் வீடு வரும் வழியில் அவர் எங்களை தேடி வேகமாக வருவதை பார்க்க முடியும் . சிறுவயதில் ஏன் அப்பா இப்படி இருக்கிறார் என்று பல முறை எண்ணியதுண்டு , அப்பாவை பேடி என்று நினைத்திருந்தேன் . அம்மா இந்த பதைப்பை வெளியே வெளியே காட்டிக்கொள்ளா விட்டாலும் அவளது மெளனமான துயரம் வெளிப்படும் இறுகிய முகம் அதை வெளிக்காட்டி விடும் , முன்பு எல்லாம் அப்பா அம்மா இப்படி இல்லை , எங்கள் ஊரில் ஒரு கலவரம் நடந்தது , அதன் பிறகு அம்மாவும் அப்பாவும் இப்படி ஆகி விட்டார்கள் !
எங்கு திரும்பினாலும் பசுமை வயல்கள் தென்படும் ஊர் எங்களுடையது , ஒரே ஒரு வளைந்தோடும் கருநதி போல ஒரு தார்சாலை மட்டும் இதில் இருந்து விலகி தனியாக தென்படும் , ஆனால் அதுதான் எங்கள் கிராமத்தை பிறருடன் இணைக்கும் பாதை , அந்த கலவர நாளில் அதில்தான் ஆயிரக்கணக்கானோர் தடிகளும் , கத்தியும், வாளுமாக வெறியோடு வந்தனர் .
நாங்கள் விளையாடி கொண்டிருந்தோம் , கூட்டம் வருவதை ஆவலோடு பார்த்தோம் , ஆனால் அருகில் வர வர அவர்களிடம் இருந்த ஆயுதங்களும் , கட்டைகளும் ,அவர்கள் கொண்டிருந்த வெறியும் எங்களை தாக்க தான் வருகிறார்கள் என்று பயந்து வீடுகளுக்கு ஓடினோம் . வீடு முன்பு இருந்த ஆலையில் கதிர் அருவாள்களுக்கு பிடி போட்டு கொண்டிருந்த அப்பா நான் ஓடி வருவதை பார்த்து திரும்பி பார்த்தார் , கூட்டத்தை பார்த்து வெலவெலத்தார் , அம்மாவும் அக்காவும் வாசலில் வந்து பார்த்து பயந்து நின்றார்கள் , அப்பா உடனே எங்களை வீட்டின் உள்ளே தள்ளி விட்டு வெளியே கதவை தாளிட்டு நின்று கொண்டார் .அம்மா அக்காவையும் என்னையும் பிடித்து அனைத்து அழுது கொண்டிருந்தாள் . எங்களுக்கு ஏதும் புரிய வில்லை என்றாலும் அம்மாவை பார்த்து அக்காவும் நானும் அழுது கொண்டிருந்தோம் .
கூட்டம் எங்கள் கிராமங்களில் சிதறி ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்றது , எங்கள் வீடு முன்பும் வந்தனர் . நிறைய பேர் ஆவேகமாக எங்கள் வீடு முன்பு வரும் சத்தங்களை உணர முடிந்தது , அம்மா அதை கேட்டு மேலும் எங்களை இறுக்கி நின்றாள் , அவள் கண்களில் நீர் வந்து கொண்டிருந்தாலும் அவள் சத்தம் எதுவும் இட வில்லை , நான் அம்மாவிடம் பேச முயன்ற போது என் வாயில் கைப்பொத்தினாள். வெளியே கூட்டம் திரண்டு நின்று கத்தும் சத்தங்கள் கேட்டேன் , அவ்வளவு சத்தங்கள் இடையிலும் அப்பாவின் குரலை என்னால் நன்கு உணர முடிந்தது .
" எங்களை விட்டுடுங்க , எங்களை விட்டுடுங்க " என்று அப்பா ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப அழுது கொண்டு சொல்வதை கேட்க முடிந்தது . அடிக்கும் சத்தம் கேட்டது , அப்பா அலறுவது கேட்டது , யாரோ 'வேண்டாம் விடு" என்று சொல்வது கேட்டது, மீண்டும் அந்த குரல் அதிக சத்தத்துடன் அடிப்பதை நிறுத்த சொல்லவும் அப்பாவை அடிக்கும் ,அப்பா அலரும் சத்தம் நின்றது . நிறுத்த சொன்ன குரல் " இது எங்க இடம் , எங்க மண்ணு " என்று சொல்வது கேட்டது . பிறகு கூட்டம் கலையும், திரும்பி செல்லும் சத்தங்கள் கேட்டன .
சில நிமிடங்கள் கழித்து சத்தங்கள் முழுமையாக மறைந்த பிறகு அம்மா கதவின் அருகில் சென்று மெதுவாக அப்பாவை அஜு என்று அழைத்தாள், தாழ் திறக்கும் சத்தம் கேட்டது , கதவு திறந்தது , அப்பா முகங்களில் வீக்கங்களுடன் ,முடி கலைந்து , சட்டைகள் கிழிந்து நின்றிருந்தார் , கண்கள் நீர் நிரம்பி இருந்தது , நான் வெளியே பார்த்தேன் , அப்பாவின் ஓலையினால் செய்யப்பட்ட ஆலை நொறுக்க பட்டிருந்தது , பொருட்கள் சிதறி கிடந்திருந்தன , நான் ஓடி போய் நாங்கள் வளர்க்கும் பசுவை பார்த்தேன் , கன்றும் பசுவும் மிரண்டு நின்றிருந்தது , பசுவின் மேல் கட்டையால் தாக்கிய தடம் நீண்ட வடு போல வீங்கி இருப்பதை பார்த்தேன் .
அப்பா வாசலில் இருந்த திண்ணையில் அமர்ந்து இருந்தார் , அன்று வீட்டில் அம்மா சமைக்க வில்லை , நானும் எதுவும் கேட்டு அம்மாவை நச்சரிக்க வில்லை , இரவுதான் அப்பா அந்த மனநிலையில் இருந்து சற்று வெளியே வந்தார் ," ஏதாவது புள்ளைகளுக்கு சமைடி" என்றார் , அம்மா எழுந்து அடுப்படிக்கு செல்வதை பார்த்தேன் .
இரவில் எங்கள் கிராம்த்தில் இருந்த எல்லோரும் கூடினோம் , யாரும் பேச வில்லை , பதட்டம் அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்திருந்தது . கலவரக்காரர்கள் கண் முன் தெரிந்த ஆட்களை அடித்து இருக்கிறார்கள் , ஆனால் யாரையும் கொல்ல வில்லை ,எந்த வீட்டிற்குள்ளும் புக வில்லை . ஆனால் நிறைய இடங்களை சேத படுத்தி இருந்தார்கள் . எங்கள் கிராமம் பண்டிகைகளை ,விழா கோலங்களை மட்டுமே அதுவரை பார்த்து இருந்தது , உடைந்த ,சிதைந்த கோலங்களை முதல்முறையாக பார்ததது .
எங்கள் ஊரில் எல்லோரும் கூடும் பகுதி கோவில் மைதானம் , எந்த விழா என்றாலும் அங்குதான் நடக்கும் , அங்குதான் அன்று இரவில் எல்லோரும் அமர்ந்து இருந்தோம் , அப்பாதான் ஊரில் எதற்கும் முன்னின்று பேசுவது ,அவரே ஒடிந்து அமர்ந்து இருந்தார் .எனக்கு அவர் பேசுவதை கேட்க எல்லோரும் காத்திருப்பதாக தோன்றியது . ஒரு கட்டத்தில் அப்பா எழுந்து நின்று பேச தொடங்கினார் . அப்பாவின் குரலில் முன்பு இல்லாத நடுக்கதை என்னால் உணர முடிந்தது , அதை உணரும் போதே எல்லோரும் அதை உணர்ந்து இருப்பார்கள் என்று தோன்றியது . அருகில் இருந்த அம்மாவை பார்த்தேன் ,அவள் அருகில் அக்கா இருந்தாள், அவள் கையை அம்மா இறுக பற்றி இருந்தாள்.
அப்பா " இது நம்ம மண்ணுதான் , நம்ம உயிருதான் , ஆனா வந்து போனவங்க இது நம்ம மண்ணுல்லனு சொல்லிட்டாங்க , அவங்க வந்து போன பிறகு எனக்கு தோனினது, இந்த மண்ணை நம்ம கிட்ட இருந்து பிடுங்கிட்டாங்க , இது நம்ம கிட்ட இருந்து போயிடுச்சு ,இனி நாம இங்க இருக்க முடியாது " என்றார் . அவர் பேசுவதை கேட்டு கூட்டம் உறைந்து போயிருந்தது , அப்பா " நம்ம மண்ணு,இப்ப நமக்கே அந்நியமாகிடுச்சு " என்றார் .
இந்த கலவரங்கள் பற்றிய நிகழ்வுகள் ஒவ்வொரு துளியும் காட்சிகளாக என் மனதில் இருந்தாலும் ,அப்பாவின் பயத்தை ,அப்பாவின் பேடித்தனத்தை, அப்பாவின் பதப்பதப்பை முழுமையாக புரிந்து கொள்ள நான் சற்று வளர வேண்டி இருந்தது . மெல்ல நாங்கள் இந்த நாட்டில். சிறுபான்மையினர் என்பதை உணர்ந்தேன் , எங்களை பிறர் எதுவும் செய்து விட முடியும் என்பதை உணர்ந்தேன் , நாங்கள் தப்பிக்க. முடியாத குழியில் மாட்டி இருக்கிறோம் என்பதை உணர்ந்தேன் , எங்கள் மண்ணே எங்களுக்கு மரண குழியாக ஆகி விட்டிருப்பதை உணர்ந்தேன் . ஏதேனும் நடந்து விடுமோ என்ற பயத்துடன் எப்படி அப்பா இருக்கிறாரோ இப்போது நானும் அந்த பயத்துடனே வாழ்கிறேன் , என்னால் இவைகளை மறந்து சிரிக்க கூட முடிவதில்லை .
என்னுடைய பிரியமான மண் என்னுடையதல்ல என்னால் ஏற்று கொள்ளவே முடியவில்லை .
No comments:
Post a Comment