90 ஆண்டு கால கட்டடம் அது, செங்கல்க்கு பதில் கற்கள் அடுக்கி கட்டப்பட்டிருக்கும், மேலே ஓட்டு கூரை, சுவர் உயரம் எப்படியும் 15 அடி வரும், கற்கள் என்பதால் சுவர் மேடு பள்ளங்களாக இருக்கும், ஆனால் மண்ணால் கட்டிய சுவர் போல தோன்ற வில்லை, வேறு ஏதோ மண்ணுடன் சேர்க்க பட்டிருக்க வேண்டும், தற்கால சிமின்ட் போல உறுதியாக இருக்கும். ஒவ்வொரு அறையும் இது போல தான், பெரிய பெரிய ஹால் போல, ஜன்னல் ஆறு அடி உயரம் கொண்டவை, ஜன்னல் கம்பிகள் வலுவானவை. 6-10 வகுப்பு வரை உள்ள எங்கள் உயர்நிலை பள்ளி இந்த தோற்றத்தில் இருந்தாலும், விளையாட்டு மைதானம் எதிர்புறம் உள்ள ஆரம்ப நிலைப்பள்ளி புதிய கட்டிடம். செங்கல்களால் கட்டப்பட்ட உயரம் குறைவான் சின்ன சின்ன அறைகள் வரிசையாக இருக்கும், மூன்று அடி சுவர்தான், மீதி உயரத்தை மர சட்டகங்களால் தடுத்து இருப்பார்கள். ஐசக் ஜான் நிக்கோலாஸ் வாத்தியார் இருக்கும் அறை இந்த இரு கட்டிடங்களையும் சேராமல் மைதானத்திற்கு நேர்எதிர் ஓரத்தில் இருக்கும், ஐசக் வாத்தியார் மற்ற வாத்தியார்களுடன் பேச மாட்டார், ஆசிரியர் அறையில் எல்லா ஆசிரியர்களும் இருப்பார்கள், இவர் அங்கு போய் நாங்கள் பார்த்ததே இல்லை, வகுப்பு முடிந்தவுடன் இங்கு வந்து விடுவார், இந்த அறை உண்மையில் தொழிற்கல்வி அறை, இங்கு டேனியல் வாத்தியார்தான் தொழிற்கல்வி எடுப்பார், அதாவது ஆசாரி வேலை சொல்லி கொடுப்பார், இந்த அறையின் ஒரு மூலையில்தான் டேபிள் போட்டு ஐசக் வாத்தியார் அமர்ந்து இருப்பார்.
அந்த டேபிளில் ஐசக் வாத்தியார் அமர்ந்திருக்கும் போது இரண்டு விசயத்தை பார்க்கலாம் ஒன்று சிகரெட், இன்னொன்று டேபிளில் இருக்கும் பழைய குட்டி ரேடியோ. எந்நேரமும் சிகரெட் புகைப்பார், பஞ்சு இல்லாத கோல்டபிளேக், புகை நாற்றம் அவரிடம் எப்போதும் இருக்கும், கரிய நிறம், குட்டையான சுருள்சுருள் முடி, நெற்றியில் வழியும் அளவு எண்ணெய் தேய்த்து இருப்பார், வற்றிய உடலை உடை மறைத்திருக்கும், கைகளில் நரம்புகள் வரிவரியாக தெரியும், அவர் பாடம் எடுப்பதை பார்க்காதவர்கள் அவருக்கு பேச வராது என்றே நினைப்பார்கள், வேறு எங்குமே அவர் பேசி யாருமே பார்த்தது இல்லை. அவருக்கு ஒரு விஷயத்தில் படுபயங்கர பிரியம் இருந்தது, அது கிரிக்கெட், அந்த ரேடியோ அதற்க்குதான், கிரிக்கெட் நடக்கும்போது எந்நேரமும் கமெண்ட்ரி கேட்டு கொண்டிருப்பார், அவர் மனம் ரேடியோவிற்குள் புகுந்து விட்டது போல இருக்கும், அல்லது அவர் காதுக்குள் ரேடியோ புகுந்து விட்டது போல!
ஐசக் வாத்தியார் எங்களுக்கு கணக்கு பாடம் எடுப்பவர், ஒன்பதாவதிலும் அவர்தான் எனக்கு கணக்கு பாடத்திற்கு வந்தார், அவர் வகுப்பு ஆரம்பமாகிறது என்றாலே அறை நிசப்தத்திற்குள் புகுந்து விடும், அவர் நடந்து வரும் காலடி சத்தம் கேட்கும் போதே சன்னமாக வயிறு எங்கள் எல்லோருக்கும் கலக்க ஆரம்பித்து விடும். அவரை பார்த்து பயப்பட ஒரு முக்கிய காரணம் அவர் பாடம் எடுக்கும் விதம்தான், அவர் கணக்கு பாடத்தை அவரே போட்டு எல்லாம் விளக்க மாட்டார், கேள்வியை போர்டில் எழுதி ஏதாவது ஒரு மாணவனை அழைத்து போட வைப்பார், அன்று எவனுக்கு சனியின் அனுக்ரகம் இருக்கிறதோ அவன் மாட்டுவான், ஒவ்வொரு தவறுக்கும் பின்பக்கம் பிரம்பு வந்து மோதி செல்லும். அவருக்கும் கருணைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, அழுதால் அடி சேர்ந்து விழும், வகுப்பில் அடி குறைவாக வாங்குபவர்கள் மிக சிலர்தான், அதில் நானும் ஒருவன்!
எனக்கு ஆங்கிலம் வராது, ஆனால் மற்றப்பாடங்கள் நன்றாக வரும், கணக்கில் நல்ல ஆர்வம் உண்டு, சிலசமயம் ஐசக் வாத்தியார் யாராவது வந்து போடுங்கள் என்பார், அப்போது நான் எழுந்து சென்று போடுவேன். சிலசமயம் கணக்கு கடினமானது என்றால் அவரே என்னை அழைப்பார். ஆர்வதோடு சென்று போடுவேன், கூட ஒன்றிரண்டு அடியும் வாங்குவேன்! ஐசக் வாத்தியார் என்னை கண்டு கொண்டது முதல் மாதிரி தேர்வு சமயத்தில்தான். அதுவரை எழுந்து சென்று எல்லாம் கணக்கு போட சென்றதில்லை, எல்லோருக்கும் இருந்த பயம் எனக்கும் இருந்தது. தேர்வு முடிந்து விடைதாள்களை திருத்தி ஒவ்வொருவருக்காக கொடுத்து கொண்டிருந்தார், அது 50 மதிப்பெண் அளவுக்கான தேர்வு, 20 க்கும் கீழே இருப்பவர்கள் தாள்களை கையில் தராமல் கீழே வீசி கொண்டிருந்தார், என் பெயர் அழைத்ததும் நான் போய் அருகில் நின்றேன், தாளில் இருந்து பார்வையைவிட்டு நிமிர்ந்து என்னை பார்த்தார், " ஏன் எல்லா கேள்வியும் எழுதல " என்றார், உண்மையில் அதில் இருந்த இரண்டு முக்கியமான கேள்விகள் நடத்தும் போது நான் வர வில்லை, அம்மை காரணமாக 15 நாள் வரை வராமல் இருந்தேன், அவர் கேட்டதும் நடுங்கி இந்த காரணத்தையே சொன்னேன். அவர் தாளை என் கைகளில் அளித்தார். நான் தாளை பார்த்தபோது 15 என்று இருந்தது, அவர் திட்டாததும், தாளை தரையில் எரியாததும் எனக்கு ஆச்சிரியத்தை கொடுத்தது, பக்கத்தில் அமர்ந்திருந்த நண்பன் அகமது 23 வாங்கி இருந்தான், ஆனால் அவன் தாளை அவர் தரையில்தான் வீசியிருந்தார், அகமது கோபமாகி விட்டான், மெல்ல என் காதிற்கு மட்டும் கேட்கும் படியாக " இந்தஆள் லூசாடா " என்றான். நான் தாளை அவசரமாக திருப்பி பார்த்தேன், அவர் எனக்கு கைகளில் தாள் அளித்ததன் காரணம் புரிந்தது, நான் மொத்தம் 15 மதிப்பெண்களுக்குதான் விடை எழுதி இருந்தேன், எல்லாமே சரியான பதில்கள், முழு மதிப்பெண்கள், 15 மதிப்பெண்களுக்கு எழுதி அதை முழுமையாக பெற்றிருக்கிறேன், மகிழ்ச்சியாக இருந்தது.
ஆனால் அகமது ஐசக் வாத்தியாரை லூசு என்று சொல்ல இது மட்டும் காரணம் அல்ல, அப்படி ஒரு சந்தேகம் எங்கள் வகுப்பில் இருந்த எல்லோருக்கும் உண்டு, ஒரு நிகழ்வுதான் இதற்கு காரணம், அது நடந்து சில நாள் ஆகி இருக்கும், சட்டென வகுப்பில் இருந்த ஸ்பீக்கர் பேட்டியில் எச்எம் பேச ஆரம்பித்தார் " யாரும் பதறாமல், அவசரபடாமல் வகுப்பு விட்டு வெளியேறி மைதானம் பக்கம் வாருங்கள், ஆசிரியர்கள் மாணவர்களை சீக்கிரம் வெளியேற்றி மைதானம் பக்கம் கொண்டு வாருங்கள், அவசரம், பள்ளியில் குண்டு வைக்க பட்டுள்ளதாக சந்தேக எச்சரிக்கை வந்துள்ளது " என்றார். நாங்கள் அரக்கபரக்க எழுந்து ஓடினோம், ஆனால் பயம் என்று சொல்ல முடியாது, ஏற்கனவே சில மாதம் முன்புதான் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்து முடிந்து இருந்தது, கோவை குண்டுவெடிப்பு என்று அதற்கு பெயர் வைத்திருந்தார்கள், அதன் பிறகு இப்படி சட்டென ஏதாவது இப்படி புரளி வரும், மக்கள் அலறுவார்கள், பிறகு சற்று நேரத்திலேயே அது புரளி என்று தெரிந்து விடும். வகுப்பில் எழுந்து எல்லோரும் ஓடும் போது ஐசக் வாத்தியார் மட்டும் அப்படியே இருக்கையில் சாதாரணமாக அமர்ந்து இருந்தார். அவரிடம் அதிகமாக அடிவாங்கி பெயர் வாங்கி இருந்த மனோஜ் அவ்வளவு அவசரத்திலும் அவரிடம் சென்று " வாங்க சார் போவோம் " என்றார். அவர் சிரித்து " நீ போ, நான் வரேன் " என்றார்.
மாதிரி தேர்வுக்கு பிறகு நான் கணக்கில் தீவிர ஆர்வம் செலுத்தினேன், அவருக்கும் என்னிடம் வெளியே காட்டி கொள்ளாத விசேஷ அன்பு இருந்தது, அவர் காட்டி கொள்ள வில்லையே தவிர மாணவர்கள் எல்லோருக்கும் அது தெரிந்திருந்தது, அது என் மீது சிலர்க்கு பொறாமையும் அளித்தது, ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர் ஒவ்வொருவரையும் கவனித்தார், அவர்களுக்கு ஏற்ப அவர்களை வளர வைத்தார், ஆனால் ஒன்று அவரிடம் இருந்து பயின்றாக வேண்டும் அல்லது வகுப்பு விட்டு ஓடிவிட வேண்டும் என்ற நிலை இருந்தது, நாகராஜ் இவருக்கு பயந்து படிப்பை விட்டு வீட்டை விட்டு ஓடி போய் பிறகு கண்டுபிடிக்க பட்டு கடைசியில் படிப்பே வேண்டாம் என்று வேலைக்கு போய் விட்டான், அவனுக்கு வில்லன் இவர்!
அரை பரீட்சை வரை சந்தோசமாக போய் கொண்டிருந்த என் வாழ்விலும் சனிஸ்வரன் வந்து விளையாட ஆரம்பித்தார், எனக்கு அவரிடம் இருந்த பயம் போய் அசட்டு தைரியம் வந்தது, ஒருமுறை விடுமுறை எடுத்து ஊர்சுற்ற போய் விட்டேன், அன்று முக்கிமான தேற்றம் எடுத்திருந்தார் போல, எனக்கு தெரியவில்லை, மறுநாள் எப்போதும் போல சென்றேன். அவர் வகுப்பு தொடங்கி அவர் உள்ளே வந்ததும் என்னை பார்த்தார், " நேத்து ஏன் வரல " என்றார். "உடம்பு சரியில்ல சார் " என்றேன், நான் சொன்னது பொய் என்பதை போல பார்த்தார், அப்போது சனி என் நாவில் புகுந்து " சார், நான் நேத்து நடந்த பாடத்தை பார்த்து படிச்சுடறேன் " என்றேன். அவர் ஒரு நிமிடம் மவுனமாக நின்று " வெளிய போ " என்றார். நான் தயங்கி நின்றேன், அவர் உருமி " வெளிய போடா " என்றார், நான் பயந்து வேகமாக சென்று வெளியே போய் நின்றேன். பிறகு அவர் வழக்கம் போல பாடம் நடத்தினார், உள்ளே அழைக்கவே இல்லை.
அன்றிரவு எனக்கு தூக்கம் பிடிக்க வில்லை, அவமான படுத்தி விட்டார் என்று நினைத்தேன், பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன், யோசித்து யோசித்து நாளை வகுப்பில் செல்லாமல் வெளியேவே நின்று விட வேண்டும், அவர் அழைத்தால்தான் உள்ளே போக வேண்டும் என்று முடிவு செய்து தூங்கினேன், காலை முழுதும் அதுதான் நினைப்பாக இருந்தது, காலை இன்ட்ரெவல் முடித்து முதல் வகுப்பு கணிதம், நான் உள்ளே செல்லாமல் வெளியேவே நின்றேன், அகமது "வாடா உள்ள " என்றான், நான் முகத்தை வீராப்பாக வைத்து " நான் வரல " என்றேன், அவன் " நீ ஐசக் ட்ட உதை வாங்க போறது நிச்சயம்டா " என்று திட்டி உள்ளே சென்றான், வகுப்பில் எல்லோரும் என்னை பார்த்தனர், ஆனால் யாரும் ஏதும் கேட்க வில்லை. ஐசக் வாத்தியார் வருவது தூரத்தில் தெரிந்தது, எனக்கு ஒன்னுக்கு வருவது போல இருந்தது, ஐந்து நிமிடம் முன்புதான் ஒன்னுக்கு போயிருந்தேன்! அவர் அருகில் வரவர கால் நடுங்க ஆரம்பித்தது, என்ன ஆனாலும் அவர் அழைக்காமல் உள்ளே செல்ல கூடாது என்று நினைத்தேன். அருகில் வந்தவர் என்னை ஒரு கணம் நின்று பார்த்தார், பிறகு ஏதும் சொல்லாமல் உள்ளே சென்று விட்டார். பாடம் எடுக்க தொடங்கி விட்டார், நேரம் செல்ல செல்ல என் உறுதி குறைந்து கொண்டே வந்தது, அவர் என்னை பொருட்படுத்தவே இல்லை, கடைசில் அழைக்க மாட்டாரா என்று ஏங்கினேன், அப்போதும் அவர் அழைக்காமல் உள்ளே போக கூடாது என்ற எண்ணம் இருந்தது. வகுப்பு முடிந்தது. அவர் வெளியே வந்தார், என்னை திரும்பி கூட பார்க்க வில்லை, நொந்து போய் விட்டேன்.
தூக்கம் இன்றும் போனது, தைரியம் எல்லாம் காணாமல் போய் விட்டது. அடுத்தநாள் வந்தது, வகுப்பு வந்தது, சத்தம் இல்லாமல் அவர் வரும் முன்பே போய் என் இருக்கையில் அமர்ந்து கொண்டேன், வந்தவர் நேராக என்னை பார்த்தார், தொடர்ந்து அவர் பார்க்க வேறு வழியில்லாமல் எழுந்து நின்றேன், அவர் நிதானமாக " வெளிய போ " என்றார். நான் பலவீனமான குரலில் " சாரி சார் " என்றேன் அவர் நான் சொல்லி முடிக்கும் முன்பே " வெளிய போடா " என்றார். சட்டென எங்கிருந்தோ வந்த ரோசத்துடன் எழுந்து கோபமாக வெளியே சென்றேன். அவர் பிறகு இது எதுவும் நடக்காதது போல பாடம் எடுக்க துவங்கி விட்டார். கோபமும் அழுகை மனநிலையும் வந்தது, இனி அவர் கூப்பிடாம உள்ள போகவே கூடாது என்று முடிவு செய்தேன், என்ன ஆனாலும் சரி என்று எண்ணிக்கொண்டேன், தொடர்ந்து அந்த வாரம் முழுதும் உள்ளே செல்லாமல் வெளியேவே தரையில் அமர்ந்து கொண்டேன், அவர் கூப்பிடவே இல்லை, அடுத்தடுத்த வாரங்களும் அது நீண்டது, நான் மன்னிப்பு கேட்டால் உள்ளே விடுவார் என்று அகமது சொன்னார், நான் அவனிடம் " இந்த வகுப்பே எனக்கு வேணாம்டா " என்றேன். அவர் வகுப்பில் உள்ளே செல்லும் போதும் வெளியே செல்லும் போதும் எழுந்து நிற்பேன், ஆனால் நான் இருந்ததையே அவர் மறைந்து விட்டவர் போல நடந்து கொண்டார்.
பி.டி வாத்தியார்தான் என்னை ஐசக் வாத்தியார் வெளியே அனுப்பியதை முதலில் கண்டுபிடித்தார். நடந்து சென்றவர் நான் வெளியே இருப்பதை பார்த்து என்னை அழைத்தார் " ஏ வெளிய உட்கார்ந்து இருக்க " என்றார். "இல்லை சார் சும்மா தான் "என்றேன், அவர் முறைக்க பிறகு நடந்ததை சொன்னேன் " படிப்பை கெடுத்துக்காத, நல்லா படிக்கறவன் நீ " என்றார். நான் ஒன்றும் சொல்லாமல் நின்றேன், " சரி போ " என்று சொல்லி விட்டு கிளம்பினார்.
அந்த ஆண்டு முழுதும் நான் பிறகு அவர் வகுப்பிற்குள் போகவே இல்லை, அவரும் அழைக்க வில்லை, நானும் உள்ளே வருகிறேன் என்று கெஞ்ச வில்லை, வகுப்புகள் முடித்து பொது தேர்வுக்கு முன்பான ஒரு தயார் படுத்தலுக்கான மாதிரி தேர்வு நடந்தது. கணக்கு தேர்வில் தேர்வு ஹாலில் சட்டென உள்ளே வந்தவர்,எழுதி கொண்டிருந்த என்னை பார்த்து " என் பாடத்தை எழுதாத, வெளிய போ " என்றார். சட்டென அழுது விட்டேன், மொத்த தைரியமும் ஓடி போனது, அழுது நின்று கொண்டு " சாரி சார் " என்றேன், அவர் ஏதும் சொல்லாமல் வெளியே சென்று விட்டார். வகுப்பில் இருந்த ஆசிரியர் என்னிடம் எழுது என்பது போல சைகை காட்டினார்.
தேர்வுகள் முடிந்து வெறும் வகுப்பு சில நாள் இருந்தது, பொது தேர்விற்கான நாட்கள் ஒரு வாரம்தான் இருந்தது, ஹால் டிக்கெட் கொடுப்பது பற்றி தேர்வு ஹாலில் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி எல்லாம் எச் எம் வகுப்பிற்கு நேராக வந்து பேசி சென்றார். எனக்கு வீட்டில் பத்தாவது மேல் படிக்கும் சூழல் இல்லை, வேலைக்கு போவது என்று இருந்தமையாமல் மற்றவர்களிடம் இருந்த மார்க் சார்ந்த ஆர்வம் எனக்கு இல்லாமல் இருந்தது, எப்படியாவது பாஸ் ஆனால் போதும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. அதனால் மற்றவர்களை விட நான் பதட்டம் இல்லாமல் இருந்தேன். மதியம் உணவு முடிந்து வகுப்புஅறையில் அமர்ந்து நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தேன், முந்திய நாள் நடந்த கிரிக்கெட் பற்றித்தான் பேச்சு ஓடிகொண்டிருந்தது, அசாருதினை நான் திட்ட அகமது வெங்கடபதி ராஜுவை திட்டி கொண்டிருந்தான். அப்போது ஒரு வேறுவகுப்பு பையன் உள்ளே வந்து " சிவசங்கரன் யாரு, ஐசக் மாஸ்டர் வந்து பார்க்க சொன்னாரு " என்றான், சிவசங்கரன் நான்தான், மொத்த 10 ம் வகுப்பு மூன்று வகுப்பிலும் ஒரு சிவசங்கரன் நான் மட்டுமே இருக்கிறேன். பயந்து வீட்டேன். கண்கள் கலங்கி விட்டன, அகமது " நேரா போய் கால்ல விழுந்துடுடா " என்றான்.
அவர் இருந்த தொழிற்கல்வி கூட அறைக்கு சென்றேன், உடல் என் கட்டுப்பாட்டில் இல்லாதது போல இருந்தது. அறைக்குள் அவர் சிகரெட் பிடித்து அமர்ந்திருந்தார். நான் வாசலில் அவரை பார்த்தப்படி உள்ளே செல்லாமல் நின்று கொண்டேன், என்னை பார்த்ததும் உள்ளே வா என்பது போன்று தலை அசைத்தார். டேபிள் அருகில் போய் நின்று கொண்டேன். என்ன சொல்வது என்று தெரியாமல் அவரை பார்த்து கொண்டிருந்தேன், கண்களில் எந்த நேரமும் அழ நீர் காத்திருந்தது. அவர் சிகரெட் அனைத்து, மீதியை அருகில் இருந்த பிளாசிட்டிக் குப்பை தொட்டியில் போட்டார். சில கணம் ஏதும் பேசாமல் இருந்தார். பிறகு என்னை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்து " நீ செண்டம் வாங்க கூடியன்னு நினைச்சேன் , லைப்ப வீணாடிச்சுடாத, போ, ஒழுங்கா படி " என்றார். பிறகு மேற்கொண்டு ஏதும் சொல்லாமல் "போ" என்றார்.
பொது தேர்வுகள் நடந்தன, ஆங்கிலத்தில் சரியாக எழுத வில்லை, மீது பாடங்கள் சுலபமாகதான் இருந்தன, கணக்கில் கிராப் தப்பு செய்து விட்டேன் என்று வெளியே வந்து நண்பர்களுடன் பேசும் போதே தேடிந்தது, - ஐ + என்று நினைத்து கணக்கு போட்டு கிராப் போயிருந்தேன், அது முற்றிலும் தவறாக போயிருந்தது, அந்த வருத்தம் ஒரு நாள் முழுதும் இருந்தது, மற்ற பாடங்கள் பரவாஇல்லை ரகத்தில் எழுதி இருந்தேன். பிறகு தேர்வுகள் முடிந்தது, நான் தேர்வு முடிந்த கையொடு ஒரு பால் கம்பெனியில் வேலைக்கும் சேர்ந்து விட்டேன்.
இரு மாதங்கள் முடிந்து தேர்வு முடிவுகள் வந்து இருந்தன, நான் ஆங்கிலத்தில் பெயில் ஆவேன் எண்ணி இருந்தேன், ஆச்சிரியமாக 62 வாங்கி இருந்தேன், ஐந்து பாடங்கள் என 500 க்கு 408 வாங்கி இருந்தேன், எப்படி வாங்கினேன் என்பது எனக்கே ஆச்சிரியமாக இருந்தது, அம்மா மேல படி என்று சொல்லி மேலும் ஆச்சிரியம் கொடுத்தாள். ஆனால் எனக்கு தேர்வு முடிவில் இருந்த பெரிய திருப்தி கணக்கில் 91 மதிப்பெண் எடுத்து இருந்தேன், கிராப் சரியாக இருந்தால் 100 எடுத்திருப்பேன் போல. நான் பள்ளி நோக்கி கிட்டத்தட்ட ஓடினேன், முதல் மதிப்பென் எடுத்த மாரியப்பன் நின்று கொண்டிருந்தான், 480 அவன் பொறாமையாக இருந்தது. ஆனால் அவன் அறிவியலில் மார்க் குறைந்து விட்டது என்று புலம்பி கொண்டிருந்தான். நான் நேராக தொழிற்கல்வி கூட அறை நோக்கி ஓடினேன். தூரத்திலேயே ஐசக் வாத்தியார் இருப்பது தெரிந்தது. போய் வாசலில் நின்று கொண்டேன்.
ஏதேச்சையாக வாசல் பார்த்தவர் என்னை பார்த்து சற்று ஆச்சிரியம் அடைந்தார், வா என்பது போல முகஅசைவு காட்டினார். நான் அருகில் சென்று நின்றேன். என்ன என்பது போல பார்த்தார். நான் திணறல் மொழியில் " சார் கணக்குல 90 வாங்கிட்டேன் சார் " என்றேன். அவர் கண்களில் ஈரம் படர்வது போல தெரிந்தது, எழுந்து நின்றார், பிறகு டேபிளில் இருந்து நகர்ந்து என் பக்கம் வந்தார், கைகள் நீட்டினார், நான் அவர் ஹான்சேக் தர கை நீட்டுகிறார் என்று எண்ணி என் வலது கை நீட்டினேன், அவர் தன் இரு பெரிய கைகளை கொண்டு என் கைகளை அனைத்து கொண்டார், " நல்லா படி, போ " என்றார்!