Friday, June 15, 2018

முதற்கனல் வாசிப்பனுபவம் 6 கடைசி பகுதி

நாவலின் பிராதன அம்சம் என இதை நினைக்கிறேன் :
பாரத நிலப்பரப்பில்  இருக்கும் கொற்றவை (  கொலை தெய்வம் )  பற்றிய படிமத்தை  அம்பை, கத்ரு  சத்யவதி ,மற்றும் சில பெண் பாத்திரங்கள்  வழியாக விரிவாக பேச முற்படும் நாவல் என முதற்கனல் நாவலை வகை படுத்தலாம் .

இந்த நாவல் தேவியை (  சக்தி )யை ஆதாரமாக கொண்டது , தேவி நிகழ்த்தும் நாடகம்தான் பிரபஞ்ச தோற்றம் அழிவு என .

சக்தி தன்னிலிருந்து  உருவான சிவனை அழிப்பதன் வழியாக பிரபஞ்ச அழிவை உருவாக்கி ,மீண்டும் பிரபஞ்ச தோற்றத்தை  நிகழ்த்தும்   சுழற்சியை இந்நாவல் பல கதைகள் வழியாக சொல்கிறது என சொல்லலாம் . முக்கியமாக கடைசியில் வரும் கத்ரு கதை , கார்த்தியேயினி  கதை , அம்பை பீஷ்மரை கொல்ல நினைக்கும் கதை , சத்யவதி ஆண்களை தன் பகடைகளாக  ஆக்கி தனது நோக்கங்களை நிறைவேற்றி  செல்லும் கதை என. முக்கியமாக கொற்றவை என நாவல் திரும்ப திரும்ப சொல்லும் படிமம் .

அழிவிற்கான காரணம் என கத்ரு கதை தன்னகங்காரம் என சொல்கிறது ( தன்னகங்காரம் என்பது பிரபஞ்சத்தின்  ஒரு உறுப்பு  என தன்னை என்னாது , தன்னை ஒரு சுயமாக எண்ணுதல்  எனும் அர்த்தத்தில் சொல்கிறேன் ) , இதை அம்பை பீஷ்மர் கதை வழியாக இந்நூல்  ஆராய்கிறது  என சொல்லலாம் , பீஷ்மரின் மனம் என்பது  தனக்கிருக்கும் கடமைகளினால் ஆனது என சுருக்கமாக சொல்லலாம் , இதை தவறு என சொல்லிட முடியாது , ஆனால் இன்னொரு கோணத்தில் அப்படி எண்ணுவது படைப்பின்  நிகழ்விற்கு எதிராக நிற்கும் ஒரு எண்ணம் , 'படைப்பின் நிகழ்வு திசைகளை  நான் தீர்மானிப்பேன் ' என்பதை சொல்வதை போல , இந்த எண்ணம் எப்படி அழிவை நோக்கி கொண்டு செல்கிறது என்பதை விவரிக்கும்  கதை என இதை சொல்ல முடியும் .

இதில் ஒரு சுவாரஸ்யமான முரண்  இருக்கிறது , பீஷ்மர் பிரம்மச்சரியர்  , ஆனால் இந்த பிரம்மச்சர்யம்  தன்னியல்பான  ஒன்று அல்ல , சூழல் அளித்த ஒன்று அது , இந்த இடத்தில் வியாசரின்  மகனான  சுகனை  வைக்கலாம் , அவர் அவரது காமமற்ற  இயல்பு என்பது தான் என்ற ஒன்றை உணராததால்  நிகழ்வது , அவர் பிரபஞ்சத்தில் இருந்து தன்னை பிரித்து கொள்ள வில்லை .

தான் என எண்ணம் கொண்டவர் அந்த எண்ணம் அழிவது  பெண்ணுடன்  கலப்பதன்  வழியாக , பீஷ்மர் தான் எனும் எண்ணம் கொண்ட பிரம்மச்சாரி  , இது ஒரு முரண் , இந்த முரண் தான் அழிவை நோக்கி நடத்தும் புள்ளி .

........

இதை தாண்டி இந்நாவல்  துணை பேசுபொருட்களாக  நிறைய விஷயங்களை பேசுகின்றன  , முக்கியமாக பாரத நிலத்தின் சித்திரம்  , இன்னொன்று இந்நாவலில் பிரபஞ்ச நிகழ்வின்  (  இயக்கத்தின் , நகர்வின் )  ஊக்கு  விசையாக காமம் எப்படி இருக்கிறது என்பதை கதைகள் வழியாக அழகாக காண முடிகிறது .

......

கடைசியாக

இதில் இருக்கும் முக்கியமான மறை பேசுபொருள் என்பது அன்னை மீதான காமம் என்பதை சொல்லலாம் , அதை மேற்கு  ஈடிபஸ் காம்ப்லக்ஸ் என குற்ற உணர்வு நோக்குடன்  அணுகுகிறது என எண்ணுகிறேன் , ஆனால் இந்திய மரபில் இந்த உணர்வு மேல்நிலையாக்கம்  செய்யப்பட்டு நேர்மறையான ஒன்றாக அணுகுகிறது  . சக்தி வழிபாடு , யோனியை பிரபஞ்ச படைப்பின் குறியீடாக எண்ணுவது எல்லாம் இந்த உணர்வினை  மேல்நிலையாக்கம் ஆக்கப்பட்ட  விஷயங்கள்தான் .

சத்யவதி -  சித்ராங்கதன் ,விசித்திரவீரியன் கதை இந்த விஷயத்தை மேல்தளத்தில் பேசுகிறது என்றால் அம்பை -  பீஷ்மர் கதை  கதை அடித்தளத்தில்  வைத்து பேசுகிறது . அம்பை படகில்  பீஷ்மரிடம் கங்கையில்  விழுந்து சாவேன்  என்று சொல்வது அம்பையை பீஷ்மரின்  அன்னையுடன்  இணைக்கும் ஒரு இடமாக  கூட இருக்கலாம் .

Thursday, June 14, 2018

முதற்கனல் வாசிப்பனுவம் 5

சிகண்டி .

வெண்முரசு  ஒருவிதத்தில் மறுபிறவி  மாதிரியான யதார்த்தத்திற்குள் வராத நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் இருந்து விலகி நிற்கிறது என சொல்லலாம் , முக்கியமாக சிகண்டியின் கதை வழியாக .

சிகண்டி அம்பையின் மறு பிறவி என்று பிற மகாபாரத  கதைகள் சொல்கிறது .  வெண்முரசு வேறொரு கவித்துவ கதை வழியாக அம்பையின் மகனாக சிகண்டியை  கொண்டு வருகிறது   .

சிகண்டியின் கதையை பிற இடங்களில் தேடினேன் , ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கின்றன !  பொதுவான ஒற்றுமை என்பது பாஞ்சால மன்னன் துருபதனின் மகள் , பின்   ஸ்தூணகர்ணன் வழியாக ஆணாக மாறுகிறாள்  . ஒரு கதையில்  பெற்றோரின்  வருத்தத்தினால்  தற்கொலைக்காக காடேகிய  போது ஸ்தூணகர்ணனின் மாளிகைக்கு  சென்று ஆணாக ஆவது என  , இன்னொன்றில்  மனைவி யின் இகழ்ச்சி  காரணமாக வெளியேறி  மாறியது என  , இன்னொன்றில்  ஒரு கந்தர்வன்  பாலினம் மாறி கொள்ளலாமா  என கேட்டு , கந்தர்வன் பெண்ணாகவும்  சிகண்டி ஆணாகவும்  மாறி கொள்வது என .

இந்த கதைகளை விட வெண்முரசில் வரும் சிகண்டியின் வரலாறு  சிறப்பான ஒன்று , இதில் வரும் கவித்துவம் மற்ற கதைகளை விட இதை சிறப்பானதாக்கி  விடுகிறது . இக்கதையில்  சிகண்டி ஒரு பெயரற்ற  அநாதை பித்தியின் மகள் , சிகண்டி பிறந்த சில நாட்கள்உள்ளாகவே   அவள் இறந்தவுடன்  அங்கிருந்த  இன்னொரு பித்தியான  அம்பையிடன்  இணைந்து கொள்கிறாள் சிகண்டி , அம்பையை அன்னையாக எண்ணுகிறாள் , அம்பை அவளை தன் மகனாக உணர்கிறாள்   , அம்பை அப்படி உணர்ந்ததனாலேயே தன்னை ஆணாக மாற்றி கொள்கிறாள் சிகண்டி  , அவளின் வேண்டுதலை  நிறைவேற்றவே  பீஷ்மரை கொள்ளும் சபதமேற்கிறாள்  சிகண்டி .

இந்த நாவலில் வரும் ஸ்தூணகர்ணன் சிகண்டி சந்திப்பு  உருக்கம்  நிறைந்த ஒன்று , ஸ்தூணகர்ணன் முதுதந்தையாக  , முதுதாயாக வெல்லாம் மாறி மாறி வந்து இப்படி மாறி கொள்வதன் வரும் விலகலை ,இழப்பை  ,வலியை சொல்லிகெஞ்சுகிறான் , சிகண்டியின் நினைவில்  அன்னையின் சொல் தவிர  வேறில்லை , அதற்காக தன்னை முழுவதுமாக தருகிறான் , அது ஒன்றிற்காக மட்டுமே வாழ்கிறான்  . சுய விருப்பம் என்ற ஒன்றில்லாத , முற்றிலும் தன்னை இன்னொருவருக்காக தியாகம் செய்த ஒரு லட்சிய பாத்திரம் இந்த நாவலில் வரும் சிகண்டி .

தியானத்தில்  அலைபாயும்  மனம் பின்பு அடங்கி பின் 'தான்' மறைவதை  போல இந்நாவலில் சிகண்டி தன் நோக்கமான  பீஷ்மரை கொல்லுதல் என்ற எண்ணத்தில்  ஒன்றிணைகிறார்  .  நாவலில் பீஷ்மரை அறிய முயலும் பகுதிகள் அபாரமாக  வந்துள்ளன  . பீஷ்மரை தந்தையாக உணர்கிறார் , தன்னை போலவே அவரும் இன்னொன்றிக்காக    வாழ்பவர் என்பதை உணர்ந்தும் , அன்னையின் அன்பும் அவரில் இருக்கிறது  என்பதை உணர்ந்தும் நேசம் கொள்கிறார் .

இந்நாவலில் சிகண்டி வராகியின்  அம்சம் கொண்டவளாக  வருகிறாள்  .

இன்னொரு சுவாரஸ்யமான அம்சம் அம்பை சிகண்டி கதையில் வருகிறது , அம்பை கதையில் வரும் முருக கடவுள் படிமம் , நாவலில் அம்பை முருகக்கடவுள்  கடவுள் கழுத்தில்  இருந்த செங்காந்தள்  மாலையை  பாஞ்சால  கோட்டை   வாயிலில் மாட்டுகிறாள்  , பிறகு அங்கு ஒரு கொற்றவை (அம்பை ) கோவில் வந்து  அந்த தெய்வத்திற்கு  செங்காந்தள் மாலை அணிகலனாக  சூட்டப்படுகிறது  (  தினமும் ) , பிறகு அங்கு வரும் சிகண்டி அம்மாலையை  எடுத்து தான் அணிந்து கொள்கிறாள் , இன்னொரு பிற நூலில் இந்த மாலையை அணிந்ததால்  சால்வ மன்னன்  தன் மகளான சிகண்டியை பீஷ்மர்க்கு பயந்து வெளியேற்றுகிறார்  என்று வருகிறது  .

Wednesday, June 6, 2018

முதற்கனல் வாசிப்பனுபவம் 4

பீஷ்மர்

இந்த நாவலில் இருக்கும் ஒரு சிறப்பான அம்சம் என்பது கதை மாந்தர்களின் வாழ்வு எப்படி அமைய போகிறது என்பதும் , நிகழ்வுகள் எவ்வாறு அமைய போகின்றன  என்பதை துவக்கதிலேயே  குறிப்புணர்த்தி செல்வதுதான்  , அந்த குறிப்புகள் எவ்வாறு வடிவமாகின்றன  என்பதை காண ஆர்வம் கொள்ளும் வகையில்  இந்த நாவலின் இயல்பு  அமைந்திருக்கிறது  .இந்த இயல்பிற்கு நூலாசிரியர்  துணை புராண கதைகளையும் ,நாக கதைகளையும்,  உருவக கதைகளையும் பயன்படுத்தி கொள்கிறார் . இவைகள் இந்த இயல்பினை தாண்டி இந்த   கதையை மேலும் புரிந்துகொள்ள உதவும் வகையிலும் வடிவமைக்கபட்டிருக்கின்றன   .

முக்கியமாக பீஷ்மரை ஆதாரமாக  கொண்ட சித்ரகர்ணி எனும் சிங்கம் வரும் உருவக கதை , மேலும்  அதே உருவக கதையில் வியாசரை  ஆதாரமாக கொண்ட  குஹ்யசிரேயஸ்  எனும் கழுதை புலி குட்டி வரும் இடங்கள் .பீஷ்மர் தன்னுள் இருக்கும் மென் குணத்தை அழித்து கொள்வது சிங்கம் பசுவை கொல்லும் வழியாகவும் , குஹ்யசிரேயஸ் 'நான்  விஸ்வாநரன்' என சொல்வது வியாசன் வழியாக வரப்போகும்  குரு வம்ச  தொடர்ச்சி சார்ந்தும் உருவக தன்மையில்  சொல்லப்படுகிறது  என எண்ணினேன் .

குஹ்யசிரேயஸ் மற்றும் அவன் அம்மா குஹ்யஜாதை  என்பது  சார்ந்து  சத்தியவதி தன் உதிரத்திற்காக  பீஷ்மரை பலியிடுகிறார்  என இந்த உருவக கதை சொல்ல வருகிறது என நினைத்தேன் , இந்த புரிதல் தவறாகவும்  இருக்க வாய்ப்புண்டு  .

நாக கதைகளும் இவ்வகையான  உருவக கதைகளே  , உதாரணமாக  புவியில்  இருக்கும்  நாகங்கள் கத்ரு அன்னையின் சொல்லை கேட்காமல் போனதால், அவளின் சாபத்தால்   அழிவின் அருகில் வரை செல்லும் கதையை,  பீஷ்மர் அம்பையின் சொல் கேளாமல்  அழிவின் பாதையை தேர்ந்தெடுத்தையும் இணை வைக்க முடியும் .
முக்கியமாக நாவலில் வரும் இவ்வரிகள்
///நன்றும் தீதுமென இங்குள அனைத்துமே அன்னையின் மாயங்களே என்றறியாத மூடர்கள் நீங்கள். நன்றைத் தேர்வுசெய்ததன் வழியாக நீங்கள் உங்கள் ஆணவத்தையே முன்வைத்தீர்கள். ///
பொறுப்புகள் எனும் பெயரில் தன்னால் தான் அஸ்தினபுரிக்கு பாதுகாப்பு  என எண்ணுகிறார் ,இதை  தன்னகங்காரமாக(  ஆணவமாக ) சொல்லலாம் . இது அவருக்கு அழிவை நோக்கி செல்லும் காரணமாக அமைகிறது .
.....

பீஷ்மர் தன்னை ஒரு ஆயுதமாக  எண்ணுவதும்  சொல்வதும் கவனிக்க தக்கது , சத்யவதிக்கு  பீஷ்மர் எதுவும் நிகழ்த்த பயன்படக்கூடிய ஓர் ஆயுதம் .

நாவலின் ஓவியங்களில் ( சண்முகவேல்  )  பீஷ்மரின் ஓவியங்கள் தான் அழகானவைகள் .

நிறைய இடங்கள் பீஷ்மரின் மனதை அழகாக சொல்லி செல்கின்றன  , சிறு அம்புகள்  ஒன்றை பிளந்து ஒன்று என செல்வது  எல்லாம் மனம் செல்லும் இயல்பை அழகாக சொல்பவை .

பீஷ்மர்க்கும்  , பால்ஹிகர்க்கும்  இருக்கும் இணைவு அழகானது , உண்மையில் இந்த இணைவில்  சித்ராங்கதனும்  வருகிறார் . பீஷ்மரின் மனம் என்பது வாழாத  ஏழு அண்ணன்களின்  மீதான ஏக்கம்  , பால்ஹிகர்  அண்ணனின் குறை மறைக்க உருவான அகம் கொண்டவர் , சித்ராங்கதன் தன் தமயனின் உடற்குறைகளை  தன் உடல் வழியாக நீக்க முனைந்தவர்  .

நாவலில் பீஷ்மர் சார்ந்து எனக்கு மிக பிடித்த இன்னொரு பகுதி குடிகார சூதன் சொல்லும் பீஷ்மரை நாயகனாக  கொண்ட அங்கத கதை , துயத்தை அங்கதம்  வழியாக கடக்கும்  இந்த இடம் அபாரமானது  .

Monday, June 4, 2018

முதற்கனல் வாசிப்பனுபவம் 3

அம்பை

நாவலில் பீஷ்மர் சப்தசிந்து நாட்டின்   ஒரு கிராமத்தில்  தங்கிசெல்லும் பகுதி  வருகிறது , மிக இனிமையான சூழல் கொண்ட கிராமம்  அது , ஒரு வேளை தமிழ் புனைவுலகில்  வரும் கிராமங்களில் மிகசிறந்த ஒன்றாக இது இருக்கலாம் . இந்த கிராமத்தில் பீஷ்மர்க்கு  பணிவிடை  செய்த ஒரு  இளம்பெண் அவரோடு தானும்  உடன்வருகிறேன் என சொல்கிறாள்  ,  தனக்கு வரும் ஒரு கனவின்  வழியாக பீஷ்மர்க்கு  வரும் ஆபத்தினை  உணர்ந்து இம்முடிவை  அவள் எடுக்கிறாள்  .
இந்த பெண் பீஷ்மரை நேசிக்கும் , பீஷ்மர்  நீண்டநாள் வாழவேண்டும்  என நினைக்கும் அம்பையின் இன்னொரு மனவிருப்பம்  .
 பீஷ்மரின் நெஞ்சை  பிளந்து , அன்பற்ற  இதயத்தை  எடுக்க நினைக்கும் கனல் கொண்டிருக்கும் அவள் மனதின் இன்னொரு இடத்தில் பீஷ்மர்  வாழ வேண்டும் என்ற அன்பும் இருக்கிறது . ஒரு மரத்தின் ஒரு கிளைகள்  போல .

நாவலில் வரும் அம்பையை நினைக்கும்பொது கண்ணகியை  நினைக்காமல்  இருக்க முடிய வில்லை , முக்கியமான ஒற்றுமை  இருவரும் இளம் வயதிலேயே  கொற்றவை ஆகிறார்கள்  . இளம்பெண் கொற்றவை கோலம்  கொள்வது என்பது தமிழின் மிக முக்கியமான தொன்மம்  , அம்பையின் பாத்திரத்தில்  இந்த தொன்மத்தின்  தாக்கம் மிக அதிகம் . ஒரு வித்தியாசம் கண்ணகி தன் அநீதிக்கு  பிறகு ரஜோ குணத்திற்கு  மாறுபவள்  , அம்பை  பிறப்பிலேயே செந்நிறத்தை  , ரஜோ குணத்தை கொண்டவள்.

நாவலில் அம்பை கொற்றவையானது  அவளை பீஷ்மர் நிராகரித்தார்  என்பதற்காக அல்ல , ஒரு வேளை அப்படி வந்திருந்தால் அது அம்பை கொற்றவையானதற்கான  அடிப்படை நியாயத்தை ஈடு செய்வதாக  இருந்திருக்காது .மேலும்   அவள் ரௌத்திரம்  கொண்டது பெண்மை இழிவு  படுத்தப்பட்டது  என்பதற்காக கூட   நான் எண்ண வில்லை .

தூக்கி கொள்ள வாஞ்சையோடு  பார்க்கும் குழந்தையை தவிர்ப்பது போன்ற செயல் பீஷ்மர் செய்தது , இறைந்து நிற்கும் ஒவ்வொரு உயிருக்குள்ளும்  இருக்கும் நம்பிக்கை என்பது தான்  இந்த உலகால்  அரவணைக்க படுகிறோம் என்பதுதான் , தம்மை பிறர் காப்பார்கள்  என்பதுதான் , இயற்கை , கடவுள் எல்லாமே இந்த நம்பிக்கையை அளிக்கும் விஷயங்கள்தான் , இது சார்ந்து என் வாழ்வில்  நிகழ்ந்த ஒரு நிகழ்வை சொல்ல முடியும் , ஒரு முறை தென்னை  மர அடியில் நின்று ஒரு பெரியவருடன்  பேசிக்கொண்டிருந்தேன், "காய் ஏதாவது கீழ விழுந்திட  போகுது ,தள்ளி நிற்போம் " என்றேன் , அவர் "தம்பி விழாது அது சத்தியத்துக்கு  கட்டுப்பட்டு  நிற்குது" என்றார், நகரத்தில் வளர்ந்த எனக்கு இவரது இயற்கை மீதான நம்பிக்கை ஆச்சிரியம் தந்தது  . உண்மையில் மிக  சாதாரணமாக உணர முடியும் ,
சிறு நாய்க்குட்டி  நம்மை நோக்கி வாலாட்டுவது  நாம் அதை அரவணைப்போம்  எனும் நம்பிக்கையில்தான்  .

பீஷ்மார் நிராகரிப்பது  இந்த நம்பிக்கையைத்தான்  , இந்த நம்பிக்கை வீழ்வதால்தான்  அம்பை கொற்றவை ஆகிறாள் .

Saturday, June 2, 2018

முதற்கனல் நாவல் வாசிப்பனுபவம்- 2

நான்கு வருணங்கள் என்பது எப்போதுமே நம் சூழலில் ஒரு விவாத பொருள் , இது பிறப்பால்  உருவாவது எனவும் இந்த வேறுபாட்டை  உருவாக்கியவர்கள்  பிராமணர்கள் எனவும் நிறுவப்பட்ட  உண்மையாக ஆக்கப்பட்டு  விட்டது . முதற்கனல் இதை தகர்க்கும்  விரிவான சித்திரங்களை  வைக்கிறது .

நாவலின் ஒரு சுவாரஸ்யமான இடத்தில் இருந்து இதை சொல்ல முடியும் , பீஷ்மர் கங்கர்கள் எனும்   குலத்தை சேர்ந்தவர் , பீஷ்மர் வழியாக  அஸ்தினபுரியின் ஆளுகைக்குள்  கங்கர் குலம் உள் வருகிறது  ,  பேரரசின் தொடர்பிற்கு பிறகு கங்கர் குலம் நான்கு வருணங்களாக  பிரிகிறது என்பது , அதாவது ஒரே குல மக்கள் தங்களை நான்கு வருணங்களாக பகுத்து  கொள்கின்றனர் . ஒரு தனிகுடியாக  தங்களை தாண்டி வெளியுலகம்  இல்லாதவர்களாக வாழும்பொழுது அவர்கள்  தேவைகள்  மிகவும் குறைவு , பகுத்து நிற்கவேண்டிய அவசியம்  இல்லை , வெளியுலகுடன்  இணையும் பொழுது தேவைகள் ,வாய்ப்புகள் பெருகுகின்றது  , பகுப்புகள் தேவை படுகின்றன, வர்ணங்கள்  உருவாகிறது .

இன்னொன்று வளம்தான்  அரசுகளை  உருவாக்குகின்றன , அப்படி உருவாகும் அரசுகள் அரச இயல்பான சத்ரிய வருணத்திற்குள்  வருகின்றன , அப்படி அரசுகள் உருவாகி வரும் சித்திரம் நாவலில் விரிவாக வருகின்றன .

மேலும் பெரும்பாலும் வருண தூய்மை  என்பது தொன்மையால்  தான் தீர்மானிக்க படுகின்றன  , முதலில் உருவான அரச குடிகள் தங்களை தூய்மையானவர்களாக  முன்னிறுத்துகின்றன  . இதை சாதாரணமாக எல்லா விஷயத்திலும் காணமுடியும்  , பழையவர்கள்  புதியவர்களை  தங்களுக்கு இணையாக எப்போதும் வைக்க மாட்டார்கள் , மாறாக ஒரு படி கீழேதான் வைப்பார்கள்  , சாதிய அடுக்குமுறைக்கான முக்கியமான காரணம் என்பது இந்த இயல்புதான் .

அஸ்தினபுரி  உட்பட முதலில் எழுந்த  பேரரசுகள் தங்களை தூய சத்ரிய   குலங்களாக முன்வைத்தன  , அதன் அதீதம்தான்  தங்களை வானோர்களின்  வழிவந்த குருதிகளாக  சொல்லும் இயல்பு . இந்நாவலில்  ஒவ்வொரு அரசிற்கும் விரிவாக  வம்சவரலாறு  சொல்லப்படுகிறது . இதை ஞாபகம் வைத்துக்கொள்வதுதான்  இந்நாவலை வாசிப்பதில் இருப்பதிலேயே  கடுமையான விஷயம் :)

  குல தூய்மை என்பதை பகடியாக  மாறும் இடமும் இதில் வருகிறது , குருவம்சத்து  திருதராஷ்டினனும்  பாண்டுவும்  மீனவ உதிரங்கள் . இது நாவல் நிகழும் இடங்கள் சுவாரஸ்யமானவை  . சாதாரண மீனவ பெண்ணான சத்யவதி  சந்தனுவின்  மனைவியாக  அஸ்தினபுரி தொடர்ச்சியில் இணைகிறாள்  , சந்தர்ப்பம் வாய்க்கும்போது தன் அஸ்தினபுரி  உதிரம் சாராத  உதிரமான வியாசன்  வழியாக அஸ்தினபுரியின்  உதிர தொடர்ச்சியை  மாற்றி தன் மீனவ உதிர தொடர்ச்சியாக  அமைக்கிறாள்  . எந்த மனமுறை மூலமாக சத்திரியர்கள் தங்கள் அரசுகளை விரிவாக்குகிறார்களோ  ,அதே மனமுறையில்  உள்ளே வந்து சத்ரிய உதிரத்தையே மாற்றி தன்னுடைய குல தொடர்ச்சியாக ஆக்குகிறாள்  சத்யவதி .

இந்த நாவலின் இன்னொரு சிறப்பம்சம்  என்பது குலசூழல் என்பது  அனுபவமாக நல்ல அம்சமுமாக சொல்லபடுவது . வியாசனுக்கு  மீனவ குல பின்னனி என்பது ஒரு தனியான  வாழ்பனுபவம் , அந்த வாழ்பனுபவம்தான்  வைஸ்வாநரன்  கவிதையின்  உட்பொருளை அவரினுள் உணர்த்த  வைக்கிறது .

முதற்கனல் நாவல் வாசிப்பனுபவம்- 1


முதற்கனல் சார்ந்த என் எண்ணங்களை பகுதிகளாக இதில் பகிர்கிறேன் , இது முதல் பகுதி . 

மகாபாரத கதை  என்பது பண்டைய இந்திய வரலாற்றினை அடித்தளமாக கொண்டு உருவான காவியம் , இந்த காவியத்தை ஆதாரமாக கொண்டு உண்மைக்கு நெருக்கமான இந்திய வரலாற்றை அறியும் முயற்சி என வெண்முரசு நாவல் வரிசையை சொல்லலாம் , இதன் சொல்முறை   வரலாற்று நாவல் வகை என்பதால் காவியத்தில் இருக்கும் இடைவெளிகளை பிற தொன்மங்கள் வழியாகவும்,  புனைவின் சாத்தியம் வழியாகவும்   நிரப்பி ஒரு முழுமையான வரலாற்றை சொல்ல  முயல்கிறது .
காவல் கோட்டம் மாதிரியான பிற வரலாற்று நாவல்களுக்கும் வெண்முரசு நாவல் வரிசைக்கும் உள்ள வித்தியாசம் என்பது இந்நாவல் வெறும் யதார்த்த வகை நாவல் அல்ல என்பதுதான் , காவியத்தின் இயல்பையும் அதேசமயம் யதார்த்தத்தில் நிகழும் சாத்தியங்களுக்குள் அடங்கியுள்ள தன்மையையும்  ஒருசேர கொண்டிருப்பது என்பதுதான் இந்நாவலின் வடிவத்திலிருக்கும் பிராதன அம்சம் , மேலும் இந்நாவல் மூலத்தில் இருக்கும் யதார்த்தம் மீறிய விஷயங்களை கைவிட வில்லை ,அவைகளை  கதைக்குள் வரும் கதைகளாக  மாற்றி முன்வைக்கிறது .
காவியத்தின் பிராதன இயல்பு என்பது அதில் வரும் மாந்தர்கள் தெய்வ புருஷர்களாக இருப்பார்கள் , இந்த இயல்பு ஒரு வகையில் வீர வழிபாட்டின் உச்சம் என கொள்ளலாம் , பொதுவாக இக்கதைகள் ,தெய்வங்கள் மனிதர்களாக  அவதரித்து வாழ்ந்த வரலாறுகளாக இருக்கும் , பிறப்பு என்பது வானோர்களின் தொடர்ச்சியாக  இருக்கும் .  காவியங்களை  யதார்த்த தளத்தில் நிறுவிட சாத்தியம் இல்லாத அம்சம் என்பது இந்த இயல்புதான் ,வெண்முரசு நாவல் கதை மாந்தர்களை அவர்களின் காவிய அம்சத்தை இழக்காமால், அதேசமயம் மண்ணில் நிகழும் யதார்த்த தளத்தில் நிற்க வைக்கிறது .
இந்நாவலை போன்ற இயல்புள்ள இன்னொரு நாவல் என கொற்றவையை  சொல்லமுடியும் , மண்ணில் நிகழ்ந்த வரலாறு , பிறகு அது காவிய இயல்பால் தெய்வதன்மை கொண்டதாகிறது  , காவியத்தில் கண்ணகியின்  கோபம் மதுரையை  எரிக்கிறது  , கொற்றவையிலும் மதுரை எரிகிறது  ,ஆனால் அவள்  கோபம் என்பது பற்றி எரிவக்த்ற்கான ஒரு  துவக்க புள்ளி மட்டுமே .  கண்ணகிக்கு    இழைக்கபடும் அநீதி  ஏற்கனவே அநீதிகளால்  எரிவதற்கு  தயாராக  இருந்த மதுரையை எரிக்கும்  தீப்பொறியாக  அமைகிறது .  அதேசமயம் இது முற்றிலும் யதார்த்த  தளத்தில் நிற்கும் நாவலும் அல்ல , கண்ணகி  பிறக்கும்  கணத்திலிருந்தே  அவளில் தெய்வஅம்சம்  சொல்லப்படுகிறது  ,
வெண்முரசு நாவல் வரிசையின் முதற்நாவலான முதற்கனல் இந்த  இயல்பு கொண்ட ஒரு பெண் கொற்றவையாகி  மாறி பெரும் அழிவிற்கான முதற் கனலை   வெளிப்படுத்தும் கதைதான்￰.

வெண்முரசை  இரண்டு வகையாக பிரிக்க வேண்டும் என்றால் ஒன்று அது முன்வைக்கும் காவிய தன்மை  , இரண்டு நாவல் வழியாக முன்வைக்கப்படும் வரலாறு .
வரலாறு சார்ந்து முதற்கனல் நாவல் சத்ரிய அரசுகளுக்கிடையிலான  மோதல் ,மற்றும் சிறுகுடிகளை சத்ரியர்கள் தங்கள் ஆளுகைக்குள்  கொண்டுவருதல் மற்றும் குலங்களுக்கிடையிலான  மோதல் போன்றவை  நேரடியாக சொல்கிறது  , அதேசமயம்  நாகர் -  சத்திரியர் மோதலை முற்றிலும் மாய இயல்பில் சொல்கிறது
  நாகர் -  சத்ரியர் மோதல் இருவிதங்களில்  வெளிப்படுகிறது , ஒன்று. நாகம் தூய மனித இயல்புகளான காமம் ,க்ரோதம்  ,மோகம்  போன்றவற்றின்  வெளிப்பாடாக. இன்னும் கதை வழியாக சொல்ல வேண்டுமெனில் பீஷ்மர் சத்திரிய இயல்பான கடமைகளை தோளில் சுமந்து நிற்கும் வடிவம் எனில் , அம்பை இயற்கை பெண்ணிற்கு கடமையாக வைத்த வலிமையான மகவை உருவாக்க வலிமையான ஆணை  அடைய முற்படும் ,அதை தாண்டி  தவிர வேறு புற உலக கடமைகள்   எதையும் பொருட்படாத  தூய நாக  இயல்பின் வடிவம் .
இரண்டு. பாரதத்தில்  வேத காலம் முன்பு நாகர் காலம் இருந்ததற்கான சாத்தியங்கள் பேசப்படுவது , இது நாவலில் எங்கும் நேரடியாக பேசப்படுவதில்லை  , நாகர் சத்திரியர் மோதலுக்கான  காரணம் கூட சொல்லப்படவில்லை  ,  ஆனால் நாவல் முழுதும்  நாகங்கள்  சத்ரியர்களை அழிக்க விரும்புகிறது , ஷத்ரியர்கள் நாகர்களை நாகங்களை கண்டு அஞ்சுகிறார்கள்  ,
இந்நாவல் நாகர்கள் சார்ந்து விரிவாக பேசுகிறது  ,ஒவ்வொரு தரிசனமும் தனக்கென  வைத்திருக்கும் தனியான பிரபஞ்சம் உருவான விதம் சார்ந்த அவதானம் போல நாகர்களுக்கும்  பிரபஞ்சம் உருவான விதம் சார்ந்த அவதானம்  சொல்லப்படுகிறது ,மேலும் பிரபஞ்சம் சார்ந்த நாக உருவக கதைகள் விரிவாக பேசப்படுகிறது  ,   நாகர் தரிசனங்கள்  வேத தரிசனங்களின் முன்தொடர்ச்சியாக  இருக்கலாம் என்பதற்கான  சாத்தியத்தை இந்நாவல் சொல்கிறது எனவும் கொள்ள முடியும் .