Wednesday, June 6, 2018

முதற்கனல் வாசிப்பனுபவம் 4

பீஷ்மர்

இந்த நாவலில் இருக்கும் ஒரு சிறப்பான அம்சம் என்பது கதை மாந்தர்களின் வாழ்வு எப்படி அமைய போகிறது என்பதும் , நிகழ்வுகள் எவ்வாறு அமைய போகின்றன  என்பதை துவக்கதிலேயே  குறிப்புணர்த்தி செல்வதுதான்  , அந்த குறிப்புகள் எவ்வாறு வடிவமாகின்றன  என்பதை காண ஆர்வம் கொள்ளும் வகையில்  இந்த நாவலின் இயல்பு  அமைந்திருக்கிறது  .இந்த இயல்பிற்கு நூலாசிரியர்  துணை புராண கதைகளையும் ,நாக கதைகளையும்,  உருவக கதைகளையும் பயன்படுத்தி கொள்கிறார் . இவைகள் இந்த இயல்பினை தாண்டி இந்த   கதையை மேலும் புரிந்துகொள்ள உதவும் வகையிலும் வடிவமைக்கபட்டிருக்கின்றன   .

முக்கியமாக பீஷ்மரை ஆதாரமாக  கொண்ட சித்ரகர்ணி எனும் சிங்கம் வரும் உருவக கதை , மேலும்  அதே உருவக கதையில் வியாசரை  ஆதாரமாக கொண்ட  குஹ்யசிரேயஸ்  எனும் கழுதை புலி குட்டி வரும் இடங்கள் .பீஷ்மர் தன்னுள் இருக்கும் மென் குணத்தை அழித்து கொள்வது சிங்கம் பசுவை கொல்லும் வழியாகவும் , குஹ்யசிரேயஸ் 'நான்  விஸ்வாநரன்' என சொல்வது வியாசன் வழியாக வரப்போகும்  குரு வம்ச  தொடர்ச்சி சார்ந்தும் உருவக தன்மையில்  சொல்லப்படுகிறது  என எண்ணினேன் .

குஹ்யசிரேயஸ் மற்றும் அவன் அம்மா குஹ்யஜாதை  என்பது  சார்ந்து  சத்தியவதி தன் உதிரத்திற்காக  பீஷ்மரை பலியிடுகிறார்  என இந்த உருவக கதை சொல்ல வருகிறது என நினைத்தேன் , இந்த புரிதல் தவறாகவும்  இருக்க வாய்ப்புண்டு  .

நாக கதைகளும் இவ்வகையான  உருவக கதைகளே  , உதாரணமாக  புவியில்  இருக்கும்  நாகங்கள் கத்ரு அன்னையின் சொல்லை கேட்காமல் போனதால், அவளின் சாபத்தால்   அழிவின் அருகில் வரை செல்லும் கதையை,  பீஷ்மர் அம்பையின் சொல் கேளாமல்  அழிவின் பாதையை தேர்ந்தெடுத்தையும் இணை வைக்க முடியும் .
முக்கியமாக நாவலில் வரும் இவ்வரிகள்
///நன்றும் தீதுமென இங்குள அனைத்துமே அன்னையின் மாயங்களே என்றறியாத மூடர்கள் நீங்கள். நன்றைத் தேர்வுசெய்ததன் வழியாக நீங்கள் உங்கள் ஆணவத்தையே முன்வைத்தீர்கள். ///
பொறுப்புகள் எனும் பெயரில் தன்னால் தான் அஸ்தினபுரிக்கு பாதுகாப்பு  என எண்ணுகிறார் ,இதை  தன்னகங்காரமாக(  ஆணவமாக ) சொல்லலாம் . இது அவருக்கு அழிவை நோக்கி செல்லும் காரணமாக அமைகிறது .
.....

பீஷ்மர் தன்னை ஒரு ஆயுதமாக  எண்ணுவதும்  சொல்வதும் கவனிக்க தக்கது , சத்யவதிக்கு  பீஷ்மர் எதுவும் நிகழ்த்த பயன்படக்கூடிய ஓர் ஆயுதம் .

நாவலின் ஓவியங்களில் ( சண்முகவேல்  )  பீஷ்மரின் ஓவியங்கள் தான் அழகானவைகள் .

நிறைய இடங்கள் பீஷ்மரின் மனதை அழகாக சொல்லி செல்கின்றன  , சிறு அம்புகள்  ஒன்றை பிளந்து ஒன்று என செல்வது  எல்லாம் மனம் செல்லும் இயல்பை அழகாக சொல்பவை .

பீஷ்மர்க்கும்  , பால்ஹிகர்க்கும்  இருக்கும் இணைவு அழகானது , உண்மையில் இந்த இணைவில்  சித்ராங்கதனும்  வருகிறார் . பீஷ்மரின் மனம் என்பது வாழாத  ஏழு அண்ணன்களின்  மீதான ஏக்கம்  , பால்ஹிகர்  அண்ணனின் குறை மறைக்க உருவான அகம் கொண்டவர் , சித்ராங்கதன் தன் தமயனின் உடற்குறைகளை  தன் உடல் வழியாக நீக்க முனைந்தவர்  .

நாவலில் பீஷ்மர் சார்ந்து எனக்கு மிக பிடித்த இன்னொரு பகுதி குடிகார சூதன் சொல்லும் பீஷ்மரை நாயகனாக  கொண்ட அங்கத கதை , துயத்தை அங்கதம்  வழியாக கடக்கும்  இந்த இடம் அபாரமானது  .

No comments:

Post a Comment