Monday, June 4, 2018

முதற்கனல் வாசிப்பனுபவம் 3

அம்பை

நாவலில் பீஷ்மர் சப்தசிந்து நாட்டின்   ஒரு கிராமத்தில்  தங்கிசெல்லும் பகுதி  வருகிறது , மிக இனிமையான சூழல் கொண்ட கிராமம்  அது , ஒரு வேளை தமிழ் புனைவுலகில்  வரும் கிராமங்களில் மிகசிறந்த ஒன்றாக இது இருக்கலாம் . இந்த கிராமத்தில் பீஷ்மர்க்கு  பணிவிடை  செய்த ஒரு  இளம்பெண் அவரோடு தானும்  உடன்வருகிறேன் என சொல்கிறாள்  ,  தனக்கு வரும் ஒரு கனவின்  வழியாக பீஷ்மர்க்கு  வரும் ஆபத்தினை  உணர்ந்து இம்முடிவை  அவள் எடுக்கிறாள்  .
இந்த பெண் பீஷ்மரை நேசிக்கும் , பீஷ்மர்  நீண்டநாள் வாழவேண்டும்  என நினைக்கும் அம்பையின் இன்னொரு மனவிருப்பம்  .
 பீஷ்மரின் நெஞ்சை  பிளந்து , அன்பற்ற  இதயத்தை  எடுக்க நினைக்கும் கனல் கொண்டிருக்கும் அவள் மனதின் இன்னொரு இடத்தில் பீஷ்மர்  வாழ வேண்டும் என்ற அன்பும் இருக்கிறது . ஒரு மரத்தின் ஒரு கிளைகள்  போல .

நாவலில் வரும் அம்பையை நினைக்கும்பொது கண்ணகியை  நினைக்காமல்  இருக்க முடிய வில்லை , முக்கியமான ஒற்றுமை  இருவரும் இளம் வயதிலேயே  கொற்றவை ஆகிறார்கள்  . இளம்பெண் கொற்றவை கோலம்  கொள்வது என்பது தமிழின் மிக முக்கியமான தொன்மம்  , அம்பையின் பாத்திரத்தில்  இந்த தொன்மத்தின்  தாக்கம் மிக அதிகம் . ஒரு வித்தியாசம் கண்ணகி தன் அநீதிக்கு  பிறகு ரஜோ குணத்திற்கு  மாறுபவள்  , அம்பை  பிறப்பிலேயே செந்நிறத்தை  , ரஜோ குணத்தை கொண்டவள்.

நாவலில் அம்பை கொற்றவையானது  அவளை பீஷ்மர் நிராகரித்தார்  என்பதற்காக அல்ல , ஒரு வேளை அப்படி வந்திருந்தால் அது அம்பை கொற்றவையானதற்கான  அடிப்படை நியாயத்தை ஈடு செய்வதாக  இருந்திருக்காது .மேலும்   அவள் ரௌத்திரம்  கொண்டது பெண்மை இழிவு  படுத்தப்பட்டது  என்பதற்காக கூட   நான் எண்ண வில்லை .

தூக்கி கொள்ள வாஞ்சையோடு  பார்க்கும் குழந்தையை தவிர்ப்பது போன்ற செயல் பீஷ்மர் செய்தது , இறைந்து நிற்கும் ஒவ்வொரு உயிருக்குள்ளும்  இருக்கும் நம்பிக்கை என்பது தான்  இந்த உலகால்  அரவணைக்க படுகிறோம் என்பதுதான் , தம்மை பிறர் காப்பார்கள்  என்பதுதான் , இயற்கை , கடவுள் எல்லாமே இந்த நம்பிக்கையை அளிக்கும் விஷயங்கள்தான் , இது சார்ந்து என் வாழ்வில்  நிகழ்ந்த ஒரு நிகழ்வை சொல்ல முடியும் , ஒரு முறை தென்னை  மர அடியில் நின்று ஒரு பெரியவருடன்  பேசிக்கொண்டிருந்தேன், "காய் ஏதாவது கீழ விழுந்திட  போகுது ,தள்ளி நிற்போம் " என்றேன் , அவர் "தம்பி விழாது அது சத்தியத்துக்கு  கட்டுப்பட்டு  நிற்குது" என்றார், நகரத்தில் வளர்ந்த எனக்கு இவரது இயற்கை மீதான நம்பிக்கை ஆச்சிரியம் தந்தது  . உண்மையில் மிக  சாதாரணமாக உணர முடியும் ,
சிறு நாய்க்குட்டி  நம்மை நோக்கி வாலாட்டுவது  நாம் அதை அரவணைப்போம்  எனும் நம்பிக்கையில்தான்  .

பீஷ்மார் நிராகரிப்பது  இந்த நம்பிக்கையைத்தான்  , இந்த நம்பிக்கை வீழ்வதால்தான்  அம்பை கொற்றவை ஆகிறாள் .

No comments:

Post a Comment