Saturday, June 2, 2018

முதற்கனல் நாவல் வாசிப்பனுபவம்- 1


முதற்கனல் சார்ந்த என் எண்ணங்களை பகுதிகளாக இதில் பகிர்கிறேன் , இது முதல் பகுதி . 

மகாபாரத கதை  என்பது பண்டைய இந்திய வரலாற்றினை அடித்தளமாக கொண்டு உருவான காவியம் , இந்த காவியத்தை ஆதாரமாக கொண்டு உண்மைக்கு நெருக்கமான இந்திய வரலாற்றை அறியும் முயற்சி என வெண்முரசு நாவல் வரிசையை சொல்லலாம் , இதன் சொல்முறை   வரலாற்று நாவல் வகை என்பதால் காவியத்தில் இருக்கும் இடைவெளிகளை பிற தொன்மங்கள் வழியாகவும்,  புனைவின் சாத்தியம் வழியாகவும்   நிரப்பி ஒரு முழுமையான வரலாற்றை சொல்ல  முயல்கிறது .
காவல் கோட்டம் மாதிரியான பிற வரலாற்று நாவல்களுக்கும் வெண்முரசு நாவல் வரிசைக்கும் உள்ள வித்தியாசம் என்பது இந்நாவல் வெறும் யதார்த்த வகை நாவல் அல்ல என்பதுதான் , காவியத்தின் இயல்பையும் அதேசமயம் யதார்த்தத்தில் நிகழும் சாத்தியங்களுக்குள் அடங்கியுள்ள தன்மையையும்  ஒருசேர கொண்டிருப்பது என்பதுதான் இந்நாவலின் வடிவத்திலிருக்கும் பிராதன அம்சம் , மேலும் இந்நாவல் மூலத்தில் இருக்கும் யதார்த்தம் மீறிய விஷயங்களை கைவிட வில்லை ,அவைகளை  கதைக்குள் வரும் கதைகளாக  மாற்றி முன்வைக்கிறது .
காவியத்தின் பிராதன இயல்பு என்பது அதில் வரும் மாந்தர்கள் தெய்வ புருஷர்களாக இருப்பார்கள் , இந்த இயல்பு ஒரு வகையில் வீர வழிபாட்டின் உச்சம் என கொள்ளலாம் , பொதுவாக இக்கதைகள் ,தெய்வங்கள் மனிதர்களாக  அவதரித்து வாழ்ந்த வரலாறுகளாக இருக்கும் , பிறப்பு என்பது வானோர்களின் தொடர்ச்சியாக  இருக்கும் .  காவியங்களை  யதார்த்த தளத்தில் நிறுவிட சாத்தியம் இல்லாத அம்சம் என்பது இந்த இயல்புதான் ,வெண்முரசு நாவல் கதை மாந்தர்களை அவர்களின் காவிய அம்சத்தை இழக்காமால், அதேசமயம் மண்ணில் நிகழும் யதார்த்த தளத்தில் நிற்க வைக்கிறது .
இந்நாவலை போன்ற இயல்புள்ள இன்னொரு நாவல் என கொற்றவையை  சொல்லமுடியும் , மண்ணில் நிகழ்ந்த வரலாறு , பிறகு அது காவிய இயல்பால் தெய்வதன்மை கொண்டதாகிறது  , காவியத்தில் கண்ணகியின்  கோபம் மதுரையை  எரிக்கிறது  , கொற்றவையிலும் மதுரை எரிகிறது  ,ஆனால் அவள்  கோபம் என்பது பற்றி எரிவக்த்ற்கான ஒரு  துவக்க புள்ளி மட்டுமே .  கண்ணகிக்கு    இழைக்கபடும் அநீதி  ஏற்கனவே அநீதிகளால்  எரிவதற்கு  தயாராக  இருந்த மதுரையை எரிக்கும்  தீப்பொறியாக  அமைகிறது .  அதேசமயம் இது முற்றிலும் யதார்த்த  தளத்தில் நிற்கும் நாவலும் அல்ல , கண்ணகி  பிறக்கும்  கணத்திலிருந்தே  அவளில் தெய்வஅம்சம்  சொல்லப்படுகிறது  ,
வெண்முரசு நாவல் வரிசையின் முதற்நாவலான முதற்கனல் இந்த  இயல்பு கொண்ட ஒரு பெண் கொற்றவையாகி  மாறி பெரும் அழிவிற்கான முதற் கனலை   வெளிப்படுத்தும் கதைதான்￰.

வெண்முரசை  இரண்டு வகையாக பிரிக்க வேண்டும் என்றால் ஒன்று அது முன்வைக்கும் காவிய தன்மை  , இரண்டு நாவல் வழியாக முன்வைக்கப்படும் வரலாறு .
வரலாறு சார்ந்து முதற்கனல் நாவல் சத்ரிய அரசுகளுக்கிடையிலான  மோதல் ,மற்றும் சிறுகுடிகளை சத்ரியர்கள் தங்கள் ஆளுகைக்குள்  கொண்டுவருதல் மற்றும் குலங்களுக்கிடையிலான  மோதல் போன்றவை  நேரடியாக சொல்கிறது  , அதேசமயம்  நாகர் -  சத்திரியர் மோதலை முற்றிலும் மாய இயல்பில் சொல்கிறது
  நாகர் -  சத்ரியர் மோதல் இருவிதங்களில்  வெளிப்படுகிறது , ஒன்று. நாகம் தூய மனித இயல்புகளான காமம் ,க்ரோதம்  ,மோகம்  போன்றவற்றின்  வெளிப்பாடாக. இன்னும் கதை வழியாக சொல்ல வேண்டுமெனில் பீஷ்மர் சத்திரிய இயல்பான கடமைகளை தோளில் சுமந்து நிற்கும் வடிவம் எனில் , அம்பை இயற்கை பெண்ணிற்கு கடமையாக வைத்த வலிமையான மகவை உருவாக்க வலிமையான ஆணை  அடைய முற்படும் ,அதை தாண்டி  தவிர வேறு புற உலக கடமைகள்   எதையும் பொருட்படாத  தூய நாக  இயல்பின் வடிவம் .
இரண்டு. பாரதத்தில்  வேத காலம் முன்பு நாகர் காலம் இருந்ததற்கான சாத்தியங்கள் பேசப்படுவது , இது நாவலில் எங்கும் நேரடியாக பேசப்படுவதில்லை  , நாகர் சத்திரியர் மோதலுக்கான  காரணம் கூட சொல்லப்படவில்லை  ,  ஆனால் நாவல் முழுதும்  நாகங்கள்  சத்ரியர்களை அழிக்க விரும்புகிறது , ஷத்ரியர்கள் நாகர்களை நாகங்களை கண்டு அஞ்சுகிறார்கள்  ,
இந்நாவல் நாகர்கள் சார்ந்து விரிவாக பேசுகிறது  ,ஒவ்வொரு தரிசனமும் தனக்கென  வைத்திருக்கும் தனியான பிரபஞ்சம் உருவான விதம் சார்ந்த அவதானம் போல நாகர்களுக்கும்  பிரபஞ்சம் உருவான விதம் சார்ந்த அவதானம்  சொல்லப்படுகிறது ,மேலும் பிரபஞ்சம் சார்ந்த நாக உருவக கதைகள் விரிவாக பேசப்படுகிறது  ,   நாகர் தரிசனங்கள்  வேத தரிசனங்களின் முன்தொடர்ச்சியாக  இருக்கலாம் என்பதற்கான  சாத்தியத்தை இந்நாவல் சொல்கிறது எனவும் கொள்ள முடியும் .

No comments:

Post a Comment

சிதை

  அப்பாவுக்கு எப்போதும் பதபதைப்பு உண்டு , நானோ ,அக்காவோ வீடு வர கொஞ்சம் தாமதம் ஆனாலும் பதறி விடுவார் . கொஞ்சம் தாமதம் ஆனாலும் நாங்கள் வீடு வ...