" வாடா சீக்கிரம், நான் வெளிய போகணும் "
" அண்ணா 5 நிமிஷம்னா வந்துடுவா, பார்த்துட்டு வந்துடறேன் ணா " என்றேன். போனில் அழைத்தது சேகர்அண்ணன், என் முதலாளி, இவரின் பலசரக்குக் கடையில்தான் பத்து ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இப்போது நான் தினமும் காலையில் சந்திக்கும் விநாயகனையும் செல்வியையும் காண வந்தேன், விநாயகன் கல் என்பதால் எங்கும் ஓடிவிட முடியாதது என்பதால் இருந்தே இடத்திலேயே அமர்ந்திருக்கிறார். கொஞ்சம் முறைப்பது போல தெரிகிறது, நான் அவர் சிரிப்பது போல தோன்றுகிறார் என்று எண்ணிக்கொண்டேன், அந்த எண்ணம் அவருக்குள் புகுந்து கொள்வது போலத்தான் தெரிகிறது ! ஐயர் அருகில் வந்து " என்ன இன்னும் உன் சினேகிதியை காணுமே " என்று சொல்லி சிரித்தார். செல்வி இந்நேரம் வந்து இருக்க வேண்டும், இன்னும் காண வில்லை, சாலையையே பார்த்து கொண்டிருந்தேன், அவள் வருவதை எதிர்நோக்கி, வெளிர்மஞ்சள் மஞ்சள் தாவணி இன்று அணிந்து வருவாள் என்று எண்ணிக்கொண்டேன், அவளுக்கு அது பிடித்த நிறம், எனக்கும் !.
அவள் தற்போது லூர்து மாதா கல்லூரியில் வணிகவியல் மூன்றாம் ஆண்டு படிக்கிறாள். நாங்கள் காதலிக்க ஆரம்பித்து 5 வருடம் கடந்து விட்டது. அவள் 10 வது முடிக்கும் போது ஆரம்பித்தது. யாருக்கும் தெரியாது, எங்களுக்கே பிடி கிடைக்க 5-6 மாதம் ஆனது, பிறகுதான் அவளை நேசிக்கிறேன் என்று புரிந்து கொண்டேன், அதை அவளிடம் சொன்னவுடனே ஏற்று கொண்டு வெட்க சிரிப்புடன் பொருள் வாங்காமலே திரும்பி சென்றாள் ! கல்லூரி படிப்பு முடிந்தவுடன் அவள் வீட்டில் சேகர் அண்ணாவிடம் பேச சொல்ல எண்ணியிருந்தேன். அண்ணனுக்கும் சமீபத்தில்தான் தெரியும், கேட்டதும் அதிர்ச்சி கொண்டவர் பாக்கலாம் என்று சொன்னார், பிறகு இந்த காதலை பற்றி எதுவுமே என்னிடம் கேட்டதில்லை.
7 வது படிக்கும் போது அப்பாவிற்கு உடல்நலம் சுகமில்லாமல் போனது, சாதாரண காய்ச்சல் முற்றி, தீவிர காய்ச்சல் ஆகி படுக்கையில் வீழ்ந்தார், பிறகு உடல்நலம் தேற பல மாதங்கள் ஆனது. தேறினாலும் முன்பு போல அவரால் பணிகளை செய்ய இயல வில்லை. அம்மா கடன்வாங்கி குடும்பம் நடத்தினாள். நான் காந்திஅக்கா மற்றும் நளினிதங்கைக்குட்டி மூவரும் அம்மா அப்பா, அப்பாவின் அம்மா என 6 பேர் சேர்ந்து வாழ்ந்தோம், வீட்டின் பத்திரம் அடகு வைத்து சிலமாதம் குடும்பம் ஓடியது. அம்மா அருகில் வீட்டுவேலைகளுக்கு செல்ல ஆரம்பித்தாள். நாங்கள் மூவரும் படித்து கொண்டிருந்தோம். பாட்டி அம்மாவை எப்போதும் வைது கொண்டிருப்பாள், அதனாலேயே அவளை எனக்கு பிடிக்காது. எனக்கு அம்மாதான் பெரிய இஷ்டம், அப்பா மீது விருப்பமும் இல்லை வெறுப்பும் இல்லை, ஆனால் அவர் உடல்நிலையில் நிகழும் சின்ன பிரச்சனைகளும் எனக்கு மனநடுக்கம் கொடுத்தன. ஒரு இரவு அம்மா ஏதும் உணவு செய்ய வில்லை, என்னிடம் வள்ளியம்மை பேக்கரியில் பிரட் வாங்கி வர சொன்னாள் . பங்கு பிரித்து ஆளுக்கு மூன்று துண்டுகள் கிடைக்க சாப்பிட்டோம், அக்கா மெதுவாகத்தான் சாப்பிடுவாள், நான் சீக்கிரம் சாப்பிட்டு அக்காவிடம் பிடுங்க பார்ப்பேன், அவள் ப்ரட் மீது விளையாட்டுக்கு துப்பி வைப்பாள், நான் பிடுங்க கூடாது என்று, ஆனாலும் அதையும் பிடுங்க பார்ப்பேன், ஆனால் நளினி குட்டியிடம் பிடுங்க மாட்டேன், அம்மா அவளாகவே ஒரு துண்டை எனக்கு கொடுப்பாள். அம்மாவுக்கு டீ பிடிக்கும், டீ பைத்தியம் என்றே சொல்லலாம், ப்ரட் ம் டீ யும் தான் எங்கள் வீட்டில் வாரத்திற்கு மூன்று நாலாவது துரித உணவாக இருக்கும். அப்பா முன்பு வேலைக்கு போய் கொண்டிருக்கும் போது நல்ல பணம் அன்று கிடைத்தால் ஆபிதா கடையில் புரோட்டாவும் சுக்காவும் வாங்கி வருவாள், அவர் வரும் நேரம் நாங்கள் தூங்கி கொண்டிருப்போம், அம்மா எழுப்பி விட்டு கொடுப்பாள், ஆசைஆசையாக தின்போம், அம்மா சுக்கா விரும்பி சாப்பிடுவாள். அப்பா முடியாமலான பிறகு புரட்டடா சாப்பிடவே இல்லை.
அன்று டீ, பிரட் சாப்பிட்டு உறங்க பாயில் வரிசையாக நளினி குட்டி நான் எல்லாம் படுக்கும் போதுதான் என்னை அழைத்தாள், வெளியே வந்தேன், அம்மா வெளித்திண்ணையில் அமர்ந்து என்னை அருகில் உட்கார சொன்னாள். அருகில் உட்கார்ந்தேன், கைகளால் என் உடலை அனைத்து கொண்டாள், பின் கைகளால் என் முடியை கோதினாள். அவள் கண்கள் கலங்கி இருந்தன, " உனக்கு சேகர் அண்ணாவ தெரியும்ல, அவரு திருப்பூர்ல மளிகை கடை வச்சிருக்கார், வேலைக்கு பையன் வேணும்னு சொன்னார், அப்பானால இனி முன்ன போல வேலைக்கு போக முடியாது, என்னால தனியா சமாளிக்க முடியல, எனக்கு வழி தெரியல, காந்தி பெரிய பொண்ணு ஆனதுல இருந்து வயிறுல எந்நேரமும் நெருப்பு எரியுது, எப்படி இதுகளை பாத்துக்க போறேன் னு தெரியாம பயமாவே இருக்கு. சேகர் அண்ணா மாசம் 1000 ரூபா தரேன் சொன்னார், 3000 ரூபா முன்னாடியே கொடுத்து கூட்டிட்டு போயிக்கறேன் னு சொல்றார், மாசம் கொஞ்சம் கிடைச்சா வீட்டுல கொஞ்சம் பசி அடங்கும், உன்னையும் நல்லா பாத்துக்கறேன் னு சொல்றார், பத்து வருஷம் போனா உனக்கு தனியா கடை வச்சு கொடுத்திடறேன் னு சொல்றார், உன் படிப்பு போயிடும், ஆனா அம்மாக்கு வேற வழியில்லைடா" சொல்லி முடிக்கும் போது அம்மா அழுதாள். " நான் போறேன்மா " என்று சொல்லி அம்மாவை கட்டி கொண்டேன். " அழாதமா " என்றேன்.
அடுத்த நாளே சேகர் அண்ணாவுடன் கிளம்பி விட்டேன். கடை காலை 5.30 க்கு திறந்தால் இரவு மூட 11 மணி ஆகிவிடும். சேகர் அண்ணாவின் மனைவி மஞ்சுக்கா என்னை தன் குட்டி சகோதரன் போல் பார்த்து கொண்டாள், அவர்கள் என்ன சாப்பிடுவார்களோ அதுதான் எனக்கும் கிடைக்கும். நான் இவர்களின் பிள்ளையான ராணி குட்டியிடம் என் காந்திஅக்கா, நளினிகுட்டிகெல்லாம் கொடுக்க வேண்டிய அன்பையெல்லாம் சேர்த்து கொடுத்தேன் . அவளுக்கும் என்னை பிடிக்கும், வால் போல என் பின்னாலேயே திரிவாள்.
மூன்று மாதம் ஒருமுறை வீட்டுக்கு வருவேன், என் சம்பளத்தை அம்மாவிற்கு மாதம் மாதம் சேகர் அண்ணா அனுப்பி விடுவார், நான் ஊருக்கு போகும்போது 500 ரூபா தருவார், நான் எல்லாவற்றையும் அம்மாவுக்கு அப்பாவுக்கு அக்காவுக்கு நளினிக்கு வாங்கி கொடுப்பேன்.
இப்படியே நாட்கள் போனது. நான் வளர்ந்தேன், எனக்கு வருடம் கூடக்கூட சம்பளம் சேர்த்து கொடுத்துவந்தார். அக்காவுக்கு நல்ல வரன் வந்ததும் அடமானம் வைத்த வீட்டை அடமானம் வாங்கியவரிடமே விற்று மேலும் பணம் வாங்கி அக்காவை கட்டி கொடுத்தோம், வீட்டை வாங்கிய அண்ணாச்சி நல்லவர், சொற்ப வாடகை வாங்கி எங்களை அங்கேயே தங்கிக்கொள்ள அனுமதித்தார், அம்மாவுக்கு அப்பாவுக்கு போன் வாங்கி கொடுத்தேன், அம்மாவுக்கு என் மீது பெருமை, குடும்பத்தை கட்டி காப்பாற்றுகிறேன் என்று. நளினியை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதே எனக்கும் அம்மாவுக்கும் கனவாக இருந்தது.
செல்வியை காதலிப்பது என்பதை அம்மாவிடம் சொன்னால் எப்படி எதிர்கொள்வாள் என்று என்னவே திகிலாக இருந்தது, எனக்கு என் தனிவிருப்பம் எதுவும் என் குடும்பத்திற்கு தீங்கு தந்து விட கூடாது என்ற பயம் இருந்தது, நான் தனியாக கடை வைத்து என்னிடம் காசு வந்த பிறகே அவளை கட்ட முயற்சிப்பேன், இதுதான் என் எண்ணம், அம்மா போன வருடம் சேகர் அண்ணா ஊருக்கு வந்த பொழுது " பையனுக்கு கடை வச்சு தரேன் னு சொன்னீங்க " என்று கேட்டாள், அவரும் "தெரியும்மா வருஷ கடைசில பண்ணி கொடுத்திடறேன் " என்றார். நான் கிட்டத்தட்ட பகல்கனவுகளில் என் புது கடையில் வாழ்ந்து கொண்டிருந்தேன்.
செல்வி நன்றாக படிப்பாள், நாங்கள் எங்கேயும் சேர்ந்து சுற்றியதில்லை, பேசி கொண்டது கூட குறைவுதான், உண்மையில் இந்த 5 வருடமும் பார்வைகள் வழியாகவே காதலித்தோம், முதலில் கண்டுபிடித்தது மஞ்சு அக்காதான், அன்றே சேகர் அண்ணாவிடம் சொல்லி விட்டார், அவர் கேட்கவும் நான் தயங்காமல் ஆமாம் என்றேன். அதிகப்பிரசங்கி தைரியத்தில் " அண்ணா நீங்கதான் சேர்த்து வைக்கணும் என்றேன் " அவர் ஒன்றும் சொல்ல வில்லை, ஆனால் அவர் பிறகு கொஞ்சம் கடுமை காட்டினார், ஆனால் அந்த கடுமைக்கு காரணம் இந்த காதல் எனக்கு தோன்றவில்லை, ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று சற்று புதிராக இருந்தது எனக்கு.
ஊர் விட்டு இங்கு வந்ததில் இருந்தே தினமும் இந்த பிள்ளையார் சன்னதிக்கு வந்து விடுவேன். அய்யருக்கு என்னை பிடிக்கும், பிரசாதம் அல்லது பழம் அல்லது தேங்காய் துண்டு ஏதாவது தருவார், ஒன்றும் தராமல் அனுப்ப மாட்டார். செல்வி காலேஜ் போக துவங்கியதில் இருந்து தினம் கோவிலுக்கு வர துவங்கினாள், இருவரும் ஒரே நேரத்தில்தான் வருவோம், அவள் என்னை பார்க்கத்தான் கோவிலுக்கு வருகிறாள் என்றே சொல்லிக்கொள்ளலாம். பேச வெல்லாம் மாட்டோம், அவளை நான் பார்ப்பேன், அவள் என்னை கிட்டத்தட்ட பார்ப்பாள்!, அவ்வளவுதான், இன்று வரும் நேரம் கடந்து 20 நிமிடம் ஆகிவிட்டது. இன்னும் வரவில்லை. பார்க்காமல் போனால் நிம்மதியாக இருக்காது, எனவே நகம் மனம் தவித்தபடி நின்றிருந்தேன்.
இரண்டு ஆட்டோக்கள் கோவில் நோக்கி வேகமாக வந்தன, 10 பேர் மேல் இறங்கினர், எல்லோரும் கரடு முரடாக இருந்தார்கள், வந்தவர்கள் என்னை கோவிலில் இருந்து வெளியே இழுத்து வந்து அடித்து கீழே போட்டு மிதித்தனர், ஐயர் வந்து தடுக்க பார்த்தார், ஒருவன் அவரிடம் " ஐயர் னு பாக்க மாட்டேன், மிதிச்சுடுவேன், அந்த சைடு போ " என்று சொல்லி அவரை மிரட்டினான். வந்தவர்களில் ஒருவர் செல்வியின் அப்பா! நான் யாரிடமும் எதுவும் வேண்ட வில்லை, அடிக்காதீர்கள் என்று கூட சொல்ல வில்லை, அடிவாங்கி வாங்கி கொண்டிருந்தேன். அலையலையாக என் உடலில் கைகளும் கால்களும் வேகமாக வந்து மோதி கொண்டிருந்தன, நெற்றியில், பற்கள் இடையில் ரத்தம் வந்து கொண்டிருந்தன, ஒருவர் சற்றென என் மர்ம உறுப்பின் மீது காலால் ஓங்கி மிதித்தான், அதுவரை அமைதியாக இருந்த நான் வழி தாங்க முடியாமல் கத்தி கதறினேன்.
அரசு ஆஸ்பத்தியில் இருந்து மூன்றாம் நாள் வெளியே வந்தேன், சங்கடம் இருந்தாலும் வேறு வழியில்லாமல் கடைமுன்பு போய் நின்றேன், இந்த மூன்று நாளும் என்னிடம் விசாரிக்கவோ, மருத்துவமனை பக்கமோ சேகர் அண்ணன் வரவே இல்லை. எனக்கு அவர் முகம் பார்க்கவே சங்கடமாக இருந்தது தெருவில் என்னால் அவருக்கு அவப்பெயர் வந்துவிட்டதே என்று வருந்தினேன்.
என்னை பார்த்ததும் மெல்ல அதிர்ச்சி அடைந்தார், சட்டென கோபம் வந்தவராக " இங்க எதுக்கு வந்த, வெளிய போ, இங்க வராதே, உன்னால என் மானமே போச்சு " என்றார். தலைகவிழ்ந்து நின்று கொண்டிருந்தேன், பிறகு அங்கிருந்து நகர்ந்து விட்டேன். எனக்கான கடை எனும் கனவு முறிந்த ஒரு பக்கம், காதல் முறிந்த வேதனை ஒருபக்கம், இதையெல்லாம் விட இதை எப்படி வீட்டில் அம்மாவிடம் சொல்வேன் என்ற பயம்தான் என்னை புரட்டி எடுத்தது. என்ன செய்வது, எங்கு போவது என்றே தெரியவில்லை, கால்கள் தன்னிச்சையாக கோவில் பக்கம் வந்து நிறுத்தியது.
ஐயர் இருந்தார், அவரை பார்க்கவே நாணமாக இருந்தது. வெளியேவே நின்று கொண்டேன், அவர் என்னை எதேச்சையாக பார்க்கவே ஓடிவந்து கையை பிடித்து கொண்டார், உள்ள வாடா என்று அழைத்து உள்ளே கூட்டி போனார். எல்லோருக்குமே வைத்திருந்த பிரசாதத்தை பெரிய தட்டில் போட்டு என்னை சாப்பிட சொன்னார், கண்கள் கலங்கி அழும் நிலைக்கு வந்து விட்டிருந்தேன். " சாமி எனக்கு எங்க போறது, என்ன பண்றதுனே தெரியல " என்று சொல்லச்சொல்ல அழுதேன். " உனக்கு ஒன்னும் ஆகாது, சாமி உன் கூட இருக்கும், நான் கீரைக்கார வீதியில் இருக்கற சண்முகம் அண்ணாச்சி கிட்ட உன்ன பத்தி சொல்லி இருக்கேன், நீ அங்க போ, நான் அனுப்பினேன் னு சொல்லு, அவர் உன்னை பாத்துக்குவார் " என்றார், நான் நன்றியில் கண்ணீர் மல்கினேன். அழாதடா என்றார் சொல்லும் போது அவர் முகத்திலும் கண்ணீர் திரண்டது, நான் என் அம்மாவை அவரில் கண்டேன்.
கிளம்பும் போது 100 ரூபாய் என் மேல் சட்டைக்குள் வைத்தார், "போகும்போது டீ சாப்பிடு,முகம் எல்லாம் கழுவி சுத்தமா போ " என்றார். பின் " அந்த பொண்ணோட அப்பாட்ட சொன்னது யாருனு தெரியுமா " என்றார், நான் அதிர்ச்சியில் நின்றேன் " சேகர்தான், அவனுக்கு இப்ப உனக்கு கடை வச்சு கொடுக்க வேண்டிய காசு மிச்சம் " என்றார்.
No comments:
Post a Comment