Friday, April 30, 2021

இந்து மதத்தில் சமத்துவம்

 

தலித் மக்கள் நலன் சார்ந்த உரையாடலில் என் நண்பர் அடிக்கடி சொல்வது இந்து மதத்தில் அடிப்படையிலேயே சமத்துவம் கிடையாது, தலித் மக்கள்  இந்து மதத்தில் இருந்து வெளியேறும் பட்சயதிலேயே அவர்கள் சமத்துவ தளத்திற்குள் வர முடியும், அதனால்தான் அம்பேத்கர் தன் மக்களை கூட அழைத்து கொண்டு  இந்து சமூகத்தில் வெளியேறி பவுத்தம் தழுவினார் என்பார்.  இதை முழுதும் ஒப்புக்கொள்ள முடியாவிட்டாலும் இந்துக்களிடம் இப்போதும் சாதிய நோக்கு, சாதி வழியான உயர்வு தாழ்வு பார்வைகள் இருப்பதை மறுக்க முடியாது, உண்மையில் சமீப ஆண்டுகளில் சாதிய சங்கங்களின் எழுச்சி காரணமாக இது பெருகி வருகிறது. இந்த கீழ்நோக்கு உண்மையில் இந்து சமூகத்தில் இருந்து அகற்ற வாய்ப்பு உள்ளதா என்பதை பார்க்கவே இந்த கட்டுரை எழுதி பார்க்கிறேன். 


சமீபத்தில் கோவை ஞானி மறைவையொட்டி ஜெயமோகன் எழுதிய தொடர் கட்டுரைகளை படித்தேன்,  இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தட்டுப்பட்டது. மார்க்சியர் என்றாலும் கூட கோவை ஞானிக்கு பண்பாடு/கலாச்சாரம்/மதம் மக்களில் செலுத்தும் தாக்கம், பங்களிப்பு பற்றிய புரிதல் இருந்திருக்கிறது.  இதை மறுக்க முடியாது என்று தெரிந்திருக்கிறது, எனவே இந்த பட்டபாட்டினுள் தங்கள் மார்க்சிய தத்துவத்திற்கு இயைந்து போகக்கூடிய கூறுகளை தேடி கண்டடைய முயன்றிருக்கிறார்கள்,  முக்கியமாக கோவை ஞானியின் இணை சிந்தனையாளரான எஸ். என். நாகராஜன் இதற்கு கிட்டத்தட்ட தீர்வையும் கண்டிருக்கிறார்.  அது அத்வைத பின்னணி கொண்ட வைணவ மனநிலையும் அதை வெளிப்படுத்திய ஆழ்வார்களும் கிட்டத்தட்ட மார்க்சியம் முன்வைக்கும் சமத்துவத்தை போதிக்க கூடியவைதான் என.  இவர் சமஸ் க்கு அளித்த பேட்டியில் வைணவ செயல்பாட்டில் ஒரு விஷயமாக முக்குறும்பை துறத்தல்  என்ற ஒன்றை சொல்கிறார், அந்த முக்குறும்பு என்பது சாதி செருக்கு, செல்வ செருக்கு, ஞான செருக்கு என இந்த மூன்றையும் துறத்தல் என.  இவைகளை வாசிக்கும் போது இந்து மதத்திலேயே சமத்துவத்திற்கான வழி இருந்திருக்கிறது, இருக்கிறது என்பதை உணர்ந்தேன். 


ஜெயமோகன் ஞானி பற்றிய கட்டுரைகளில் சொன்ன இன்னொரு விஷயமும் இந்த விவாதத்தில் முக்கியமானது என்று நினைக்கிறேன்,  அது இந்து மதத்தில் இருந்த சீரழிவுகளை போக்க தோன்றிய சீர்திருத்தவாதிகள் எல்லோரும் அத்வைத தரிசன மனநிலை கொண்டவர்கள் என்பது,  அதனை அடிப்படையாக கொண்டு இயங்கியவர்கள் என்பது.  என்னளவில் இது முக்கியமான திறப்பு, ஏனெனில் இந்து மதத்தின் பிரதான ஆதாரமான ஒரு தரிசனம் சமத்துவத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது என்பது, அதாவது அனைத்தும் கடவுளின் ரூபங்கள் என்றால் எல்லாமே சமம்தான் என்றாகி விடுகிறதுதானே, மனிதர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு பொருட்களும் சமம்தான்.  மனித சமத்துவத்தை முன்வைக்கும் மார்க்சியம் விட மேலான உலகிலுள்ள காணும் எல்லாமும் சமம் என்பது பலமடங்கு மேலானதல்லவா. இதை கையில் எடுத்து கொண்டுதான் இந்து மத சீர்திருத்தவாதிகள் மக்கள் சேவையே மகேசன் சேவை என்றார்கள்,  மக்களுக்கிடையே இருந்த சமத்துவமின்மையை நீக்க முயன்றார்கள். என்னளவில் இந்து மதத்தில் அதன் ஆதார தளத்தில் சமத்துவமின்மை இல்லையென்றிருந்தால் இம்மதம் மீது மனவிலக்கம் அடைந்திருப்பேன்.  ஏனெனில் ஆதார தளத்தில் இந்த அம்சம் இல்லையெனில் எவ்வளவு விவாதித்தாலும், மாற்றங்களை நோக்கி நகர முயன்றாலும் அது வீண்தான்.  இந்து மதத்தில் சமத்துவம் இருக்க வேண்டும் என்று எண்ணும் ஒருவனாக எனக்கு இந்துமதத்தில், அதன் ஆதார தளத்தின் அடிப்படை அம்சமே சமத்துவம்தான் என்று உணர்வது பெரிய கொண்டாட்டத்தை அளிக்கும் விசயம். 


ஆனால் புராணங்களில் சாதியவருண  உயர்வு தாழ்வு பார்வைகள் உண்டு,  இதை மறுக்க முடியாது, ஆனால் இந்த புராணங்கள் இந்து மதத்தின் ஆதாரங்கள் அல்ல,  மேலும் வருணங்கள் மாற்றிக்கொள்ள முடியும் என்பது, சாதிகள் மேல் கீழ் நகர முடியும் என்றிருப்பது இந்து மதத்தில் சாதிய ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் அவை நிலையானவை, மாற்றமுடியாதவை அல்ல என்பதை உணர முடிகிறது. 


இந்து மதத்தை வளர்ச்சி பாதைக்கு திருப்ப வேண்டும் என்றால் முதலில் நிகழ்த்த வேண்டியது இந்து மதத்தை பற்றி வெளித்தோற்றத்தில், மக்கள் எண்ணங்களில் இருக்கும் " இந்துமதத்தில் சமத்துவம் இல்லை " எனும் பிம்பத்தை கலைவதுதான்.  முதலில் இந்து மக்களில் உயர்சாதி மனநிலை கொண்டவர்களில் உயர்வு மனநிலையை நீக்கி சமத்துவ நோக்கை உருவாக்க வேண்டும், தலித் மக்களில் தன் மதம் எந்த விதத்திலும் தங்களை தாழ்ந்தவர் ஆக்கவில்லை, எல்லாரையுமே சமமாகதான் பாவிக்கிறது என்ற எண்ணத்தை கொண்டு செல்ல வேண்டும். 


எந்த ஒன்றிற்கும் அதன் அடித்தளத்தில் இருக்கும் தத்துவ கட்டுமானத்திற்க்கேற்பவே அது நிற்கும் வளரும்,  எனவே இந்துமதத்தின் அத்வைத, சமத்துவ தரிசனத்தை மீண்டும் முன்னெடுத்து அடித்தளமாக அமைத்தால் போதும் சமத்துவமின்மை சிக்கலை விட்டு இந்துமதம் நகர ஆரம்பித்து விடும். 

No comments:

Post a Comment