Friday, April 30, 2021

இந்து மதத்தில் சமத்துவம்

 

தலித் மக்கள் நலன் சார்ந்த உரையாடலில் என் நண்பர் அடிக்கடி சொல்வது இந்து மதத்தில் அடிப்படையிலேயே சமத்துவம் கிடையாது, தலித் மக்கள்  இந்து மதத்தில் இருந்து வெளியேறும் பட்சயதிலேயே அவர்கள் சமத்துவ தளத்திற்குள் வர முடியும், அதனால்தான் அம்பேத்கர் தன் மக்களை கூட அழைத்து கொண்டு  இந்து சமூகத்தில் வெளியேறி பவுத்தம் தழுவினார் என்பார்.  இதை முழுதும் ஒப்புக்கொள்ள முடியாவிட்டாலும் இந்துக்களிடம் இப்போதும் சாதிய நோக்கு, சாதி வழியான உயர்வு தாழ்வு பார்வைகள் இருப்பதை மறுக்க முடியாது, உண்மையில் சமீப ஆண்டுகளில் சாதிய சங்கங்களின் எழுச்சி காரணமாக இது பெருகி வருகிறது. இந்த கீழ்நோக்கு உண்மையில் இந்து சமூகத்தில் இருந்து அகற்ற வாய்ப்பு உள்ளதா என்பதை பார்க்கவே இந்த கட்டுரை எழுதி பார்க்கிறேன். 


சமீபத்தில் கோவை ஞானி மறைவையொட்டி ஜெயமோகன் எழுதிய தொடர் கட்டுரைகளை படித்தேன்,  இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தட்டுப்பட்டது. மார்க்சியர் என்றாலும் கூட கோவை ஞானிக்கு பண்பாடு/கலாச்சாரம்/மதம் மக்களில் செலுத்தும் தாக்கம், பங்களிப்பு பற்றிய புரிதல் இருந்திருக்கிறது.  இதை மறுக்க முடியாது என்று தெரிந்திருக்கிறது, எனவே இந்த பட்டபாட்டினுள் தங்கள் மார்க்சிய தத்துவத்திற்கு இயைந்து போகக்கூடிய கூறுகளை தேடி கண்டடைய முயன்றிருக்கிறார்கள்,  முக்கியமாக கோவை ஞானியின் இணை சிந்தனையாளரான எஸ். என். நாகராஜன் இதற்கு கிட்டத்தட்ட தீர்வையும் கண்டிருக்கிறார்.  அது அத்வைத பின்னணி கொண்ட வைணவ மனநிலையும் அதை வெளிப்படுத்திய ஆழ்வார்களும் கிட்டத்தட்ட மார்க்சியம் முன்வைக்கும் சமத்துவத்தை போதிக்க கூடியவைதான் என.  இவர் சமஸ் க்கு அளித்த பேட்டியில் வைணவ செயல்பாட்டில் ஒரு விஷயமாக முக்குறும்பை துறத்தல்  என்ற ஒன்றை சொல்கிறார், அந்த முக்குறும்பு என்பது சாதி செருக்கு, செல்வ செருக்கு, ஞான செருக்கு என இந்த மூன்றையும் துறத்தல் என.  இவைகளை வாசிக்கும் போது இந்து மதத்திலேயே சமத்துவத்திற்கான வழி இருந்திருக்கிறது, இருக்கிறது என்பதை உணர்ந்தேன். 


ஜெயமோகன் ஞானி பற்றிய கட்டுரைகளில் சொன்ன இன்னொரு விஷயமும் இந்த விவாதத்தில் முக்கியமானது என்று நினைக்கிறேன்,  அது இந்து மதத்தில் இருந்த சீரழிவுகளை போக்க தோன்றிய சீர்திருத்தவாதிகள் எல்லோரும் அத்வைத தரிசன மனநிலை கொண்டவர்கள் என்பது,  அதனை அடிப்படையாக கொண்டு இயங்கியவர்கள் என்பது.  என்னளவில் இது முக்கியமான திறப்பு, ஏனெனில் இந்து மதத்தின் பிரதான ஆதாரமான ஒரு தரிசனம் சமத்துவத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது என்பது, அதாவது அனைத்தும் கடவுளின் ரூபங்கள் என்றால் எல்லாமே சமம்தான் என்றாகி விடுகிறதுதானே, மனிதர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு பொருட்களும் சமம்தான்.  மனித சமத்துவத்தை முன்வைக்கும் மார்க்சியம் விட மேலான உலகிலுள்ள காணும் எல்லாமும் சமம் என்பது பலமடங்கு மேலானதல்லவா. இதை கையில் எடுத்து கொண்டுதான் இந்து மத சீர்திருத்தவாதிகள் மக்கள் சேவையே மகேசன் சேவை என்றார்கள்,  மக்களுக்கிடையே இருந்த சமத்துவமின்மையை நீக்க முயன்றார்கள். என்னளவில் இந்து மதத்தில் அதன் ஆதார தளத்தில் சமத்துவமின்மை இல்லையென்றிருந்தால் இம்மதம் மீது மனவிலக்கம் அடைந்திருப்பேன்.  ஏனெனில் ஆதார தளத்தில் இந்த அம்சம் இல்லையெனில் எவ்வளவு விவாதித்தாலும், மாற்றங்களை நோக்கி நகர முயன்றாலும் அது வீண்தான்.  இந்து மதத்தில் சமத்துவம் இருக்க வேண்டும் என்று எண்ணும் ஒருவனாக எனக்கு இந்துமதத்தில், அதன் ஆதார தளத்தின் அடிப்படை அம்சமே சமத்துவம்தான் என்று உணர்வது பெரிய கொண்டாட்டத்தை அளிக்கும் விசயம். 


ஆனால் புராணங்களில் சாதியவருண  உயர்வு தாழ்வு பார்வைகள் உண்டு,  இதை மறுக்க முடியாது, ஆனால் இந்த புராணங்கள் இந்து மதத்தின் ஆதாரங்கள் அல்ல,  மேலும் வருணங்கள் மாற்றிக்கொள்ள முடியும் என்பது, சாதிகள் மேல் கீழ் நகர முடியும் என்றிருப்பது இந்து மதத்தில் சாதிய ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் அவை நிலையானவை, மாற்றமுடியாதவை அல்ல என்பதை உணர முடிகிறது. 


இந்து மதத்தை வளர்ச்சி பாதைக்கு திருப்ப வேண்டும் என்றால் முதலில் நிகழ்த்த வேண்டியது இந்து மதத்தை பற்றி வெளித்தோற்றத்தில், மக்கள் எண்ணங்களில் இருக்கும் " இந்துமதத்தில் சமத்துவம் இல்லை " எனும் பிம்பத்தை கலைவதுதான்.  முதலில் இந்து மக்களில் உயர்சாதி மனநிலை கொண்டவர்களில் உயர்வு மனநிலையை நீக்கி சமத்துவ நோக்கை உருவாக்க வேண்டும், தலித் மக்களில் தன் மதம் எந்த விதத்திலும் தங்களை தாழ்ந்தவர் ஆக்கவில்லை, எல்லாரையுமே சமமாகதான் பாவிக்கிறது என்ற எண்ணத்தை கொண்டு செல்ல வேண்டும். 


எந்த ஒன்றிற்கும் அதன் அடித்தளத்தில் இருக்கும் தத்துவ கட்டுமானத்திற்க்கேற்பவே அது நிற்கும் வளரும்,  எனவே இந்துமதத்தின் அத்வைத, சமத்துவ தரிசனத்தை மீண்டும் முன்னெடுத்து அடித்தளமாக அமைத்தால் போதும் சமத்துவமின்மை சிக்கலை விட்டு இந்துமதம் நகர ஆரம்பித்து விடும். 

Saturday, April 17, 2021

இசூமியின் நறுமணம் - வாசிப்பு அனுபவம்

 

இசூமியின் நறுமணம் சிறுகதை நூலை தொகுத்து கொள்ள வசதியாக இரண்டாக பகுத்து கொள்கிறேன்.  முதலில் தமிழ் நிலத்தில் நிகழும் கதைகள். 


இந்த தொகுதியில் தமிழ் நிலத்தில் நிகழும் கதைகள் என 4 உள்ளன,  அதில் மூன்று பெரிய குடும்பங்களின் வீழ்ச்சிகளை, அதையொட்டிய மனநிலைகளை பேசும் கதைகள்.  இந்த காலகட்டத்தின் இக்கதைகளில் வரும் குடும்பங்களின் வரலாற்று ஆவணங்கள் என கூட இந்த சிறுகதைகள் சொல்லமுடியும், கூடவே இந்த நிலத்தில் இருந்த சமூகங்களில் நிகழ்ந்த  மாற்றங்களையும் சொல்லி செல்கிறது,  முதல் நோக்கில் இந்த விதத்திலேயே இந்த சிறுகதைகளை முக்கியத்துவம் அமைகிறது என்று நினைக்கிறேன். உதாரணமாக இந்த நான்கில் ஒன்றான "அறமென படுவது யாதென கேட்பின்" எனும் சிறுகதை, இதில் பெரிய குடும்பமாக இருந்து வீழும் குடும்பமாக பிள்ளை சமூகத்தை சேர்ந்த நவநீதம் பிள்ளை வருகிறார்,  சாதாரண நிலையில் இருந்து, அதாவது பிள்ளையிடம் வேலை செய்யும் தொழிலாளியாக இருந்து கடைசியில் பிள்ளையின் வீட்டையே ஜப்தி செய்யும் ஒருவராக சாமிநாத முனையரியராக (கள்ளர் சமூகம் ) வருகிறார்.  பிள்ளை எவ்வாறு வீழ்கிறார், முனையதிரியர் எவ்வாறு மேலே எழுகிறார் என்பதெல்லாம் இந்த சிறுகதை படுசுவாரஸ்யமாக சொல்லிச்செல்கிறது, அதன் வழியாக இந்த கதை மாந்தர்களின் குணநலன்களையும். இது ஆவணம் என்பதை தாண்டி ஸ்வாரஸ்யமான கதை என்பதை, தாண்டி, பாத்திரங்களின் குணங்களை அழகாக காட்டுவதை தாண்டி எவ்வகையில் இலக்கியமாகிறது என்றால் இந்த கதை மனித மனதில் கசடு புகுந்தால் உருவாக்கும் தாக்கங்களை சொல்கிறது என்பதால்தான்.  இந்த கதை தலைப்புதான் அதுவும்.  மேல் விளக்கத்திற்காக இந்த பாடலையும் அதன் அர்த்ததையும் காப்பி பேஸ்ட் செய்கிறேன். //அறமெனப் படுவது யாதெனக் கேட்பின் மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்.’

பிறர்க்கென உதவும் பெருமனம் யாருக்கு வரும்? மனத்துக்கண் மாசில்லாதவனுக்கே வரும் என்க. மனத்துக் கண் மாசு புகுந்துவிட்டால் அங்குப் பொறாமைப்பேய் முதற்கண் குடிபுகும். ஆசையெனும் அரக்கன் வாழ்வான்; வெகுளி எனும் வேண்டாத பண்பு வீறிடும்; இன்னாச் சொல் இனியதோர் இடம்பெறும். என்வேதான் மனத்துக் கண் மாசற்றுத் துலங்கவேண்டும்; அஃதே அறம் என் கிறார் வள்ளுவர்.//

இதில் சாமியாத முனையதிரியர் மனதில் இருக்கும் மாசு அவரை எவ்வளவு பாவத்தின் சம்பளங்கள் வாங்கி கொண்டாலும் கடைசிவரை தூய்மை அடையாமல் தடுக்குகிறது,  கருணையோ,  நன்மையை செய்யும் மனமோ இல்லாமல் ஆக்கி விடுகிறது.  ஒரு  நல்ல இலக்கியம் எதை விட்டு விலகி இருக்க வேண்டும் என்பதை சொல்வதை அது நிகழ்த்தும் மாயத்தை காட்டி புரிய வைக்கும், இந்த கதை அதை நிகழ்த்துகிறது. 

இந்த சிறுகதை தொகுப்பில் இருக்கும் இன்னொரு உலகம் என்பது ஆண் பெண் உறவு, அது நிகழ்த்தும் மாயங்கள்,  இடர்கள்,  த்ரோகங்கள் முக்கியமாக கைவிடல்கள், அது உருவாக்கும் நிராதரவு நிலைகள்.  இதிலிருக்கும் பல கதைகள் இதை மையமாக கொண்டவைதான். இதை அடித்தளமாக கொண்டு வாழ்வில் நிகழும் நம்ப முடியாத புதிர்களையும்,  அது அளிக்கும் ஆச்சிர்யங்களையும் சொல்கின்றன.  உதாரணமாக செர்ரி பிளாசம் கதை,  அதில் வரும் நாயகிக்கு ஜப்பான் மீது கட்டற்ற பிரியம், ஈர்ப்பு இருக்கிறது,  அது ஒருவகையில் முன்குறிப்புணர்த்தலாக கதையில் வருகிறது, ஏனெனில் வாழ்வில் வெறும் மூன்றுநான்கு  நாள் மட்டுமே தங்கும் அங்கு தங்கும் அவள் தன் வாழ்வின் முக்கியமான ஒன்றை இழக்கிறாள், உண்மையில் இழப்பதற்காகவே அங்கு வருகிறாள் ! அந்நிலம் மீதான ஈர்ப்பெல்லாம் இதில் வந்து முடியவா என்பதை காணும் போது வாழ்வின் மர்மம் மீது மிகுந்த திகைப்பு உருகாகிறது. இந்த சிறுகதை இதை தாண்டியும் பல இழைகள் கொண்ட கதை,  குடி உருவாக்கும் சிக்கலை தீவிரமாக சொல்கிறது,  அதை விட குடும்ப உறவில் போன பிறகு தனது உடல்நலன் தன் குடும்பத்தையும் உள்ளடக்கியது எனும் பொறுப்பை தட்டிக்கழிக்கும் பொறுப்பின்மையின் விளைவுகளையும் பேசுகிறது,  இதை தாண்டி இந்த கதையில் இன்னொரு மனித மனம் எடுக்கும் வடிவம் பற்றிய குறிப்பு,  அவள் கணவன் இறந்த அந்த மூன்று நாட்கள் அழாதது.  இக்கதைக்கு சற்று இணையான சூழலை நான் நேரில் பார்த்திருக்கிறேன், என் நண்பன் தன் மனைவியுடன் கர்நாடகாவில் இருந்து ரயிலில் வரும் வழியில் உடல் கோளாறினால் இறந்தான்,  இறந்த கணவனை கொண்டு கோவை வந்திறங்கினாள் அவள் மனைவி,  நான் அவர்களை பார்த்தது பிறகு வீட்டில் நண்பன் அலங்கரிக்க பட்டு சடலமாக,  அருகில் அவள் அவனையே பார்த்தபடி அழாமல் இருந்து கொண்டிருந்தாள், அவள் அழாதது எனக்கு, அங்கிருந்தவர்களுக்கு பெரிய பதபதைப்பை அளித்தது, இந்த சிறுகதை இந்நிகழ்வை ஞாபக படுத்தியது,  மனம் ஏன் அப்படி ஒரு நிலை எடுத்து அழாமல் தடுக்க வைக்கிறது என்பதை யோசிக்கும் போது எனக்கு புதிராக இருக்கிறது. 

எனக்கு மிக பிடித்த இன்னொரு கதை "தானிவத்தாரி ".  ஒரு தவறு, அதனால் தன் வாழ்வு சூன்யமானதை சொல்லும் பெண், இன்னொரு இயற்கையின் உலகில் அந்த தவறை இனிமையான அனுபவமாக காண்கிறாள். இந்த சரிதவறை தாண்டியை சமன்தான் இந்த சிறுகதையை சிறந்த ஒன்றாக மாற்றுவதாக எண்ணுகிறேன். ஒவ்வொரு நாளும் புதிதாக இணையை தேடி கொள்ளும், அதற்காக கலைஞனாக மாறும் அந்த உகியிசு குருவி இந்த சிறுகதைக்கு இந்த சிறுகதையில் வரும் நாடோடியான சிமுராவிற்கு அழகான உவமானம் ! ஒரு நல்ல கதை ஒருவரின் பல மனநிலைகளை,  மனநிலை வேறுபாடுகளை முன்வைக்கும்,  இந்த கதையில் நாயகி துயரத்தை வெளிப்படுத்துகிறாள்,  இன்னொரு இடத்தில் அதை மறந்து ஒரு பெண்ணாக (பெண்மன விருப்பங்கள் ) சிமுராவை ரசிக்கவும் செய்கிறாள்.  ஒன்றிற்காக இன்னொன்றை இழக்க விரும்பாத மனம் ! ஒரு இடத்தை தன் அலைபாயும் மனதை வெறுக்கிறாள், இன்னொரு இடத்தில் ரசிக்கிறாள்.  கதையில் அலைபாயும் மனம் வார்த்தை வரும் இடம் கதையின் திருப்புமுனை இடம், இது கதையில் அழகாக காந்திருக்கிறது,  உள்ளே அழகாக ஜப்பானிய மொழி இதில் கலந்தும் கொள்கிறது. 

இந்த சிறுகதைகளில் நான் மேலே சொன்னவை தாண்டி இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன, கிட்டத்தட்ட எல்லாமே நல்ல வாசிப்பனுபவத்தை அளிக்கும் கதைகள், நடு ஆணிகளாய் எஞ்சியவர்கள் கதை மிக முக்கியமானது,  இலக்கியமாகவும்,  பேசப்படாதவர்களின் வரலாறாகவும் இந்த கதை முக்கியமானது.  பாதிக்கபட்டவனின் வலியை சுமந்த மகனின் கதை இது,  உண்மையில் இங்கிருக்கும் ஒடுக்கபட்டவர், இவர் எல்லாம் ஒன்றுதான்,  இவர்கள் வளர்ந்த பிறகு தங்களை ஒடுக்கியர்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை காண.. இந்த கதை நாயகரிடம் தன் தந்தையின் வலிமிகுந்த வாழ்வின் துயரம் அப்படியே உள்ளது,  ஆனால் அதை உருவாக்கியவனின் மீது வெறுப்பில்லை,  அவன் சந்ததியிடம் கூட தன் தந்தையின் ஞாபகம் வந்ததால்தான் தன்னை மீறிய தார்மீக கோபத்தை தன் அலுவலக செயல்பாடு வழியாக கெளிப்படுத்தினான், பிறகு அதையும் விட்டான். 

இதையெல்லாம் மீறி இம்மாதிரியான சிறுகதைகள் இதையொற்றிய  நம் அனுபங்களை திரும்ப நம்மிடம் கொண்டுவருவதும் வாசிப்பில் கிடைக்க கூடிய இன்னொரு விஷயம் என்று நினைக்கிறேன்.  உதாரணமாக மலரினும் மெல்லியது எனும் சிறுகதை,  இந்த கதை ல பெண் வெறுமையை கடக்க வேறு ஏதுமில்லை,  காமம் மட்டுமே இருக்கிறது என்பது கிட்டத்தட்ட ஒரு கண்டத்தால்தான்,  கோபிகிருஷ்ணனின் லாகிரி என ஒரு சிறுகதை உண்டு,  சற்றுநேரம் ஒரு ரேசன் கடையில் ஒரு திருமணமான பெண்ணும், திருமணமான கதை நாயகனும் மாறிமாறி பார்த்து ரசித்து கொள்வார்கள்,  கதை அந்த நேரத்து வெறுமையை கடக்கும் போதை அது என்று சொல்லும், இந்த கதை படிக்கும்போது முற்றிலும் வெறுமை கொண்ட இளமை வயதிலிருக்கும் பெண் காமம் எனும் போதையில் விழுவதை தவிர வேறு வாய்ப்புகளே இல்லை என்று எண்ண வைத்தது. சைமன் அதை தவறு என்று எண்ணாமல் தாண்டி தன்னை விடுவித்து கொண்டு நகரும் மனநிலை மேன்மையான மனிதர்களுக்குரியது !  ஆனால் அவன் மன்னித்தாலும், மறக்க வில்லை என்பது தெரியாவார்கள் துரோகம் இழைக்க மாட்டார்கள் என்ற வார்த்தைகளில் வெளிபடுகிறது, இவருக்கு நெருக்கமானவர்கள் மனைவியும், மனைவியுடன் தகாத உறவு வைத்துக்கொண்ட அவனது அண்ணனும்தான்.  நான் இதுபோல வெளிநாடு போய் குடும்பம் சிதைந்த சிலரை சந்தித்து இருக்கிறேன்,  அதில் ஒருவர் மறக்க முடியாதவர்,  ஒரு மகன் உண்டு, இவர் இல்லாததால் உள்ளே நுழைந்த ஒருவனும், இவர் மனைவியும் சேர்ந்து மகனை மிக கொடுமை படுத்தி உள்ளனர்.  பிறகு இவர் வந்து, அவனை வெளியேற்றி எல்லா பஞ்சாயத்தும் முடிந்து அந்த பெண் தவறை உணர்ந்து இவரும் மன்னித்து சேரும்போது மகனால் அதை ஏற்க இயலவில்லை,  மகனுக்காக அவர் மனைவியை விட்டுவிட்டு ஆனால் அவர் நினைவாக ஏங்கி கொண்டிருந்தார் என்னிடம் பேசும் போது !


சரி குறை சொல்லாமல் முடித்தால் விமர்சனம் என்பது ஒரு சார்பாக அமைந்து விடும் என்பதால்,  இந்த கதையில் சைமன் சாமிக்கு கிடா வெட்டுவதாக வருகிறது,  ஒரு கிரிஸ்துவர் கிடா வெட்ட மாட்டார் என்று நினைக்கிறேன், எனவே கதை ஆசிரியர், அடுத்த பதிப்பில் சைமனை, அவர் மனைவியை, மகளை தாய்மதம் திருப்பும் படி "ஆடிட்டர்" பார்வையில் நின்று கேட்டு கொள்கிறேன்:)