Thursday, February 25, 2021

கடலொரு பக்கம் வீடொருபக்கம் -நூல் பற்றி

 உரைநடையை விட கவிதை ஏன் இன்னும் சிறந்தது என்பதை இந்த கவிதை நூல் வாசிக்கும் பொழுது உணர முடிந்தது. பெரிய நாவல் வழியாக சொல்ல முயல்தை  ஒன்றிரண்டு பக்கங்கள் அல்லது அதற்குள்ளாக கவிதை மூலம் சாதாரணமாக செறிவான மொழி கொண்டு, படிமங்கள் கொண்டு சொல்லி விட முடியும் என்பதை இந்த கவிதை நூலின் பல கவிதைகள் வழியாக கண்டுகொண்டேன்.  இதை போலவே உரைநடையை விட கவிதை வழியாக அதை எழுதுபவன் ஆளுமை முன்வந்து நிற்பதை உணர முடிந்தது,  இந்த நூலின் பெரும்பாலான கவிதைகளில் கவிஞர் லட்சுமி மணிவண்ணனை கண்டேன்,  உண்மையில் அவர் கண் வழியாக இக்கவிதைகளை வாசித்தேன் என்று சொல்லலாம். 


இந்த நூல்தான் நான் வாசிக்கும் முதல் லட்சுமி மணிவண்ணன் அவர்களின் கவிதை நூல்,  இந்நூல் மட்டும் கொண்டு இந்நூலில் இருக்கும் கவிதைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவரது கவிதை செயல்படும் தளங்களை பற்றி எழுதி பார்க்கலாம் என்றிருக்கிறேன் !

 இவர் கவிதைகளில் இருக்கும் முக்கியமான படிமம் என்று பார்த்தால் கடல்  சொல்லலாம்,  நூலின் தலைப்பே கடலை படிமமாக கொண்டதுதான், இன்னொரு படிமம் மழை,  படிமம் என்று சொல்வதை விட நேரடியாக காட்சி அனுபவமாக கவிதைகளில் மழை வருகிறது, காலைபொன்னிறத்தின்  சாரலாக ,  மின்மினி ஒழுகுவதை போல , புஸ்பம் போல என  மழையை காட்சி வழியான அனுபவத்தில் எப்படி அடைவது என்பதை கவிதைகள் வழியாக கற்றுத்தருகிறார் என்று கூட சொல்லலாம்,  மழை பற்றி நம்முள் இருக்கும் மன சித்திரங்களையெல்லாம்  அழித்து விட்டு வெறும் மழையை அதில் நனைந்து மூழ்காமல் வெறும் காட்சி அனுபவமாக வெளியில் நின்று காட்சியனுபவமாக ரசிக்க சொல்கிறார், மழை என்ற பெயரில் இருக்கும் அர்த்தத்தை கூட எண்ணாமல், மழை பற்றிய கவிதைகளை எண்ணாமல், மழை மீது சேர்க்கப்பட்டிருந்த ஞாபகங்களை அர்த்தங்களை என எதையும் கூட சேர்க்காமல் பார்க்க சொல்கிறார்!

கவிதையில் இயற்கை வழியாக கவிஞன் காண சொல்வது அதில் தன்னியல்பான எந்த தவறுமற்ற சரியான முடிவை நோக்கி செல்லும் படிப்படியான நகர்வை கண்டு ரசிப்பதற்குத்தான் என்று தோன்றுகிறது,  கூடவே சிறுகதையில் நிகழும் கடைசி திருப்பம் போல இயற்கையில் நடக்கும் நகர்வுகளில் முடிவில் வரும் அடைதலை காணும்பொழுது இதற்காகவா இந்த நடனங்கள் என்று நம்மை உற்சாகம் செய்யவைக்கவோ என்றும் தோன்றுகிறது, மேலதிகமாக இந்த நூலில் இருக்கும் கவிஞன் மரபை மறுப்பவனல்ல, ஆகையால் இம்மரபு அளித்த இயற்கையில் கரைந்தழிலையும் சொல்லி செல்கிறார்,  கடலும் இவரும் வேறல்ல,  தன் விடுதலையின், சேர்தலின் இடமாக,  தன் மனவிருப்பமாக,  தன் மனரூபமாக கடலை முன்வைக்கிறார்,  இவரது முதற்படிமம் கடல்தான்,  தன் உள்ளமாக கடலை முன்வைக்கிறார்,  அதில் தன்னை மறந்து மன ஊற்றுகளில் செல்ல முடிவதை சொல்கிறார்,  குழந்தையின் உற்சாகத்திற்கு காரணம் சொல்லமுடியுமா, கடலின் அலைகளுக்கு காரணம் சொல்ல முடியுமா என்கிறார் ஒரு கவிதையில், அதை வாசித்த போது அவரின் இலக்கு இந்த என்றும் தணியாத கடலின் குழந்தையின் உற்சாகம்தான் என்று தோன்றியது. 

இது தவிர பெண்களை, அவர்களின் ஆழங்களை, அவர்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் (!) என்பதை கவிதைவில் உவமைகள் வழியாக படிமங்கள் வழியாக அழகாக சொல்லி செல்கிறார்,  அந்த கவிதையின் பெயர் "பெண்களை தொடுவது பற்றி" என தொடங்கும் கவிதை,  அந்த கவிதை படித்த போது பெண்களை அணுகாமல் வெளியே நின்று பார்ப்பவன் பாக்கியவான் என்று தோன்றியது. 

இதும் தவிர இன்னும் நிறைய திசைகளில் கவிதைகள் இதில் இருக்கின்றன,  அம்மனின் புன்னகை என்றொரு கவிதை,  தெய்வசிலைகளை வெறும் கற்களாக காண்பவர்கள் அபாக்கியவான்கள் என்று உணர வைக்கும் கவிதை,  நம் திராவிட சித்தாந்த பகுத்தறிவாளர்கள் ஒவ்வொருவரையும் படிக்க வைத்து தாங்கள் எதை இழக்கிறோம் என்பதை இந்த கவிதை மூலம் உணர வைக்க செய்யவேண்டும் என்று விளையாட்டாக எண்ணினேன்,  தேவி தன்னை காணும் கண்களில் மாயம் செய்கிறார் என்று இந்த கவிதை சொல்லும், இது அபாரமான இடம், ஏனெனில் தேவியின் முகங்களில் இருக்கும் மாற்றம் என்பது நாம் கண்டுணரும் எண்ணங்களே தவிர தேவியின் சிற்பத்தில்/முகத்தில்  உருவத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் அல்ல !

இயற்கையை கிட்டத்தட்ட 'ஏசுவை' போன்ற அன்பை மனிதனிடம் அள்ளிக்கொட்டும் இயல்பினை கொண்டதாக காட்டுகிறார்,  தன்னை ஆட்டி சிலிர்க்க வைத்த பெண்ணை பின்தொடர விரும்பும் மரமென, தான் வாழ்ந்த நிலத்தில் இருந்து நகர்ந்து வேறு இடம் சென்றபோதும் மறக்காத இயற்கையின் நினைவுகளென,  எந்த உதவியும் அளிக்கவில்லையெனிலும் அதை பொருட்படுத்தாது அளிக்க விரும்பும் இயற்கையின் இயல்பு என இயற்கையை முன்வைக்கிறார், முக்கியமாக தான் தனியன் என்ற எண்ணத்தினை காலிசெய்யும் படியான கவிதைகள் இவை,  தாங்கள் உன்னை உணர்ந்து உன்னுடன் கூடவே இருக்கிறோம் என்று சொல்கிறது இவர் கவிதைகள். 

இந்த பண்பாடு சூழல் உருவாக்கி அளிக்கும் படிமங்களை பயன்படுத்தும் கவி இவர் என்று சொல்லலாம்,  தெய்வத்தின் வேடங்களை எடுத்து இடும்,  இட்டுப்பார்க்கும் மனிதர்களை பற்றிய இரு கவிதைகள் உண்டு இந்த கவிதை நூலில், ஒன்று சிசேரியன், அதை ஒரு மாயஎதார்த்த சிறுகதையின் கவிதை வடிவம் என்று சொல்லலாம்,  அதில் பத்ரகாளி வேடம்  அணியும் ராசாமணி நாடார் பாத்திரம் வரும்,  இவர் பத்திரகாளி வேடத்தை கொள்ள, பத்ரகாளி இவன் வேடத்தை எடுத்து கொள்ளும்,  அந்த கவிதையை முழுதாக உள்வாங்கினேனா என்று சொல்லமுடியவில்லை, கிட்டத்தட்ட ஒரு சிறுகதை போலவே இந்த கவிதை வளர்ந்து முடிவதை போல தோன்றியது. 

உண்மையில் இப்படி எல்லா கவிதைகளையும் யோசிக்க தோன்றியபடியே வருகிறது,  நிறுத்தி கொள்ளலாம் என்பதால் விடுகிறேன் !

ஒரு முழுமையான கவிஞன் என்ற இடம் என சில தகுதிகள் உண்டு என்று எண்ணுகிறேன்,  இயற்கையை ஒரு பிரசங்க கவிதையாக வெளிப்படுத்தாமல், அதனுள் இருக்கும் லீலையை நடனத்தை காட்சி களாக ஆக்கி முன்வைப்பதன் வழியாக இயற்கையை மனதளவில் நெருங்க வைப்பது, அதன்அடுத்து அதற்கும் நமக்கும் இருக்கும் விலகல் மற்றும் இயற்கையும் நாமும் வேறுவேறல்ல என்பதை உணர வைத்தல், இதை போன்றவைகளை இயற்கையை அதன் ஆத்மாவை காணவைத்து வாசகனை உணர வைப்பது என்று சொல்லலாம்,  பெரும்பாலும் வேத வரிகள் ( உதாரணம் ஈஸா வாஷய உபநிட பாடல்கள் ) இப்படியானதாக இருப்பதை பார்த்திருக்கேன், இப்படி எழுதிய ரிஷிகளை கவிஞராகவே நித்யசைன்தய யதி முன்வைக்கிறார் ( ஈஸா வாஷய உரை நூல் ),  இதையே ஒரு முழுமையான கவிஞனின் தகுதிகளில் முதன்மையான ஒன்றாக நினைக்கிறேன். 

இன்னொன்று கவிஞன் அறத்தை முன்வைப்பவனாக அதைவிட நல்வழி சொல்பவனாக இருப்பவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறன், நல்வழி என்று சொல்லும்பொழுதே அதை நக்கலாக பார்க்கும் குணம் நம் பொதுப்புத்தியில் உள்ளது, அதும் எழுத்தாளன் என்பதற்கு 420 இயல்பு மிக அவசியம் எனும் பிரச்சாரம் வென்று நிற்கும் சமகால சூழலில் இந்த எதிர்பார்ப்பு நகைப்பாக பார்க்க படும்,  நான் சொல்லவந்தது கவிஞனுக்கு தன் அனுபவத்தால் முன்னுணர்ந்து சொல்லும் திறம் உண்டு என்று நினைக்கிறேன், இந்த கவிதை நூலிலேயே அறிவதை அறி என தொடங்கும் கவிதை ஒன்றுண்டு,  அறிவதை முன்பே அறிந்து கை காலத்தை மிச்சப்படுத்தலாம், இன்னும் நிறைய அந்த கவிதை சொல்லும்,  நான் செய்த தவறுகளை காணும்போது முன்பே தவிர்த்திருந்தால் பல வருடங்களை வீணாக்காமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது, இதை போன்ற விஷயங்களை ஒரு கவிஞன் முன்னுணர்ந்து அல்லது தன் வாழ்வில் கற்று அதை பகிர்ந்து சொல்லிவிட முடியும் என்று தோன்றுகிறது, ஜெயமோகன் திருக்குறளை நீதி நூல் என்பதை விட அதை கவிதை நூலாக வாசித்து நுகர முடியும் என்கிறார், அதாவது வள்ளுவன் நீதியை முன்வைப்பன் என்பதை விட கவிஞன், நான் எண்ணுவது அவன் கவிஞன் என்பதாயேயே நீதியை வெளிப்படுத்துகிறான் என்பதே,  எந்த கவிஞனும் நீதியை முன்வைப்பதாலேயே அறத்தை,  வாழ்நெறியை, வழிகாட்டுதலை முன்வைப்பதாலேயே முழுமையான கவிஞனாக ஆகிறான் என்று எண்ணுகிறேன்.  இதற்குமேல் கட்டுரை நீள கூடாது என்பதால் முடிக்கிறேன் ! என்னளவில் இந்த கவிதை நூல்களை காணும்பொழுது இந்த மரபின் தொடர்ச்சி கொண்ட முழுமையான கவிஞனுக்குரிய தகுதிகள் கொண்டவர் கவிஞர்  லட்சுமி மணிவண்ணன் என்று எண்ணுகிறேன். 

இதையெல்லாம் தாண்டி அவரை பிரியமானவராக எண்ணுவதற்கு காரணம் வேறு,  அது unfriend என தான் கட்டித்து வெளி வீசியவனுக்கும் அவன் வாழ்வு நன்றாக அமைய வேண்டும் என்று எண்ணி வேண்டி கொள்ளும் மனம் :)

ஒரு கவிதையில் மழை பெய்து முதிய மஞ்சள் முருங்கை இலைகள் உதிரும், அந்த உதிர்வை மழை உருவாக்குகிறது, பிறகு தரையில் வீழ்ந்த அந்த இலைகளை மழை மூடி மறைக்கிறது, மறுநாள் காலையொளியில் உற்சாகத்துடன் (முருங்கை) பூக்கள் பூத்திருக்கின்றன,  அதை அந்த பூக்களின் உற்சாகத்தை பார்த்த கவிஞனின் மழையிடம் இதற்காகவா இவ்வளவு நடனம் என்கிறார்,  இந்த காட்சியை அதை அளிக்கும் கவிஞனை பெரிய கவிஞன் னு நினைக்கிறேன். 

மேலும் இந்த நூலில் இருக்கும் சில கவிதைகள் ஞாபகம் வருகின்றன,  ஆஸ்பத்திரியில் இருக்கும் சிறுவன் " இப்படி பண்ணினா அப்பா வரமாட்டாரமா, என்னால முடியலமா "என்று சொல்லும் வரி அந்த சிறுவனை அப்படியான நிலைக்கு ஆளாக்கியவன்  அவள் அம்மாவோ என்று திகைக்க வைக்கிறது. 





No comments:

Post a Comment