Thursday, May 7, 2020

ஞானகங்கை நூல் முன்வைத்து -2

அரசு அதிகாரம் வழியாக மக்களுள் மாற்றங்களை நிகழ்த்தி விட முடியாது,  மாறாக மக்களுக்குள் சென்று விழுப்புணர்வு ஏற்படுத்துவதன் வழியாகவே மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்கிறார் கோல்வால்கர்,  இது எனக்கு படிக்க ஆச்சிரியமாக இருந்தது, ஏனெனில் இப்போது ஆட்சியில் இருக்கும் bjp சங்கத்தின் குழந்தை ! அதேசமயத்தில் நாட்டை நேசிக்கும் சுயம்சேவர்களை சங்கம் உருவாக்குகிறது, அவ்வாறு உருவாகி வந்தவர்கள் நாட்டை ஆளும் இடத்திற்கு வருகிறார் என்பதாக இதை எடுத்து கொள்கிறேன்.

இந்த நூலில் ஒரு சுயம்சேகவர் எப்படிப்பட்ட பண்புநலன்களுடன் இருக்க வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்றெல்லாம் விளக்குகிறார்,  பெரும்பாலும் மரபின் தொன்ம கதைமாந்தர்களை வைத்து, மகாபாரத வீரர்கள்,  ராமர்,  புராண கதாபாத்திர வீர புருஷர்களை வைத்து என,  மேலும் சிவாஜி போன்ற  இந்து மன்னர்களை இந்து வரலாற்று வீரர்களை எல்லாம் முன்வைத்து விளக்குகிறார்.  இந்திய நிலத்தின் மரபை இந்த நிலத்தின் மைந்தர்கள் பேணுவதே என்பதே இயல்பானதாக இருக்கும், மேற்கிலிருந்து கடன்வாங்கி பிரதி எடுக்கும் இயல்புகள் போலித்தனம் கொண்டவை, அவை நம்மை முன்னேற்றாது,  தவிர்க்க வேண்டியவை என்றெல்லாம் சொல்கிறார்.  இதற்கு சற்று இணையான ஒரு விவாதம் சமீபத்தில் ஒரு இலக்கிய விவாத அரங்கில் நிகழ்ந்தது,  தமிழ் நவீன கவிதைகளில் இந்திய தொன்மத்தின் படிமங்களை வேண்டுமென்றே தவிர்க்கும் போக்கு பற்றி விவாதிக்க பட்டது,  அப்படி தவிர்த்து மேற்கின் படிமங்களை பயன்படுத்தும் பொழுது கவிதை மேலெழாமல் ஆகிவிடுகிறது என்ற வாதம் வைக்கப்பட்டது, அதற்கு காரணமாக தனது சொந்த ஆழ்மன படிமங்களை பயன்படுத்தும் பொழுதே இக்கவிதைகளில் உச்சங்கள் நிகழும் சாத்தியங்கள் இருக்கும் என்று சொல்லப்பட்டது.  கோல்வால்கர் சொல்வதும் கிட்டத்தட்ட இதேதான், இவர் கவிதை எனும் இடத்தில் மனிதனின் மனதை, இயல்பை, நெறிமுறையை,  வாழ்க்கையை, நோக்கத்தை முன்வைக்கிறார் அவ்வளவுதான். என்னளவில் இந்த நிலைப்பாடுகள் வரை கோல்வல்கரின் வாதங்களை சரி என்றே ஏற்கிறேன்.

கோல்வால்கரின் கருத்துக்களில் இரண்டு விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை,  ஒன்று அவர் இந்திய தேசியத்தை இந்து பணப்பண்பாட்டின் தேசியமாக முன்வைப்பது,  இதை தற்கால சூழல் வைத்து சொல்கிறேன்,  இன்று இந்தியா என்பது அனைத்து மதங்களையும், தரிசனம்களையும், வாழ்க்கை முறைகளையும் அனுமதிக்கும் ஒன்றாக பார்க்கும் ஒரு தேசியத்தில் நிற்கிறது,  இதை மதசார்பின்மை பண்பாக முன்வைக்கிறது,  இந்த நிலைப்பாட்டிலிருந்து இந்தியா பின்னகரும் என்று தோன்ற வில்லை.  ஆனால் கோல்வால்கர் முன்வைக்கும் கருத்துக்கள் முக்கியமானவை,  அவர் இந்தியாவின் ஜீவனை சரியாகவே அடையாளப்படுத்தி முன்வைக்கிறார் என்றே நினைக்கிறேன்.

என் புரிதலில் இந்தியா தன் இயல்பாக இந்து மரபின் இயல்புகளை வெளிப்படுத்த வேண்டும் என்கிறார்,  வலுவான நாடாக,  அந்த வலுவின் நிறை கொண்டு பணிவை வெளிப்படுத்தும் நாடாக இருக்க வேண்டும் என்கிறார்,  முக்கியமாக தனித்து பிரியும் இயல்புகளை இந்நாட்டில் அனுமதிக்க கூடாது என்கிறார்,  இஸ்லாம் அப்படி தனித்து பிரிந்து நிற்கும் மதம் என்பதால் அதை எதிர்க்கிறார்,  இப்போது வைத்து யோசிக்கும் போது கூட இந்த பார்வையில் உண்மை உள்ளது என்றே தோன்றுகிறது, ஏனெனில் இன்று இஸ்லாமியர்கள் தங்களை பொது சூழலுக்குள் இணைத்து கொள்ளாமல் தனித்தே இயங்குகிறார்கள் பெரும்பாலும்.  அதேசமயத்தில் கோல்வால்கர் தனிப்பட்ட மத நம்பிக்கை விஷயத்தில் இருக்கும் சுதந்திரத்தை ஆதரிக்கவே செய்கிறார்,  உதாரணமாக ஒரு இஸ்லாமியர்கள் தன் வழிபாட்டில் தன்  மதத்தில் இருந்து செயல்படுவது அவர் சுதந்திரம், அதை எவ்வவகையில் எதிர்க்கவில்லை என்கிறார், ஆனால் ஒரு சமூகம் என்று வரும்பொழுது இந்த நிலத்தின் பண்பாட்டில் நிற்கும் பொழுது மட்டுமே அது சரியானதாக இருக்கும்,  எனவே பண்பாட்டு தளத்தில் இந்த மரபிற்குள் இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் வர வேண்டும் என்கிறார், இந்த கருத்து நிலைப்பாடு எனக்கு ஓரளவிற்கு  ஏற்புடையதே.  ஆனால் தற்கால சூழலில் இப்படியான இந்துக்கள் உட்பட எல்லோரிலும் மரபை நேசிக்க வேண்டும் எனும் கட்டாய சூழலை எதிர்பார்க்க முடியாது என்றே நினைக்கிறன்.  நவீன சூழலில் வெறும் நம்பிக்கை மட்டும் சார்ந்து மட்டும் அல்லது அப்படியானால் ஒரு நிலைப்பாட்டில் மட்டும் எல்லா மக்களையும் அடைக்க முடியாது என்று நினைக்கிறன்,  அதேசமயம் தற்பொழுது வழக்கில் இருக்கும் இந்திய தேசியம் எல்லோரையும் உள்ளடக்கிய ஒன்று இதற்குள் நின்று அல்லது இதை மேம்படும் வழியாக மட்டுமே ஏதேனும் மாற்றங்களை உருவாக்க முடியும் என்று நினைக்கிறேன்,  அதாவது இந்த மதசார்பின்மை தேசியத்தில் உருவாகும் சிக்கல்களை இந்த தேசியத்தில் நின்று கொண்டே எதிர்கொள்ள முடியும் என்று எண்ணுகிறேன்.

அதாவது இப்படி சொல்லலாம் இந்தியா வெறும் இந்துக்கள் நாடு என்றிருந்தால் பிற மதத்தினரிடம் உரையாடல் நிகழாமல் போகும்,  இப்போதைய சூழல் என்பது ஒரு உரையாடலுக்கான ஒரு களம்,  இந்து மரபை இந்த பொது களத்திற்குள் கொண்டு வருவதன் வழியாக பிற மதத்தினரை அவர்களது மதம் தாண்டி விவாதத்திற்குள் கொண்டு வர முடியும் என்று எண்ணுகிறேன்,  இப்படியாக மரபை,  மரபின் கனிகளை எல்லோருக்கும் கொண்டு செல்லும் சாத்தியம் இதில் உண்டு, உதாரணமாக யோகா, யோகாவில் மதத்தின் சாயலை தவிர்க்கும் பொழுது அது எல்லோருக்கும் பொதுவானதாக ஆகிறது, அப்படி ஆகும் பொழுது உலகெங்கும் போகிறது,  அதனால் மாற்றங்களும் நிகழ்கிறது,  இப்படியாக இந்து மரபில் இருக்கும் நன்மைகளை பொதுவில் எடுத்து வைக்கும் பொழுது அதில் அனைவரையும் சென்றடையும் வாய்ப்பு உள்ளது, அப்படி ஆகும் பொழுது இந்துக்கள் மட்டுமல்ல எல்லோரையும் இந்து மரபின் மனநிலைக்குள் கொண்டு வரும் சாத்தியம் இதில் உள்ளது,  ஈஷா யோகா,  மகாபாரதத்தை வெண்முரசாக மறுஉருவாக்கம் செய்து பொதுவில் முன்வைப்பது எல்லாம் இப்படியான செயல்பாடுகள்தான்,  ஆனால் இவை உடனடி பலன்களை தராது என்பதும் உண்மைதான்,  ஆனால் நீண்ட கால அளவை கணக்கும்போது கண்டிப்பாக மாற்றங்களை உருவாக்கும். உடனடி தீர்வுகளை அரசு அதிகாரம்  வழியாகவே நிகழ்த்த இயலும்,  ஆனால் அவை தற்காலிக தீர்வுகளாகவே இருக்கும்.

கோல்வால்கருக்கு இந்திய பிரிவினை மிகுந்த துன்பம் கொடுத்த ஒன்று,  அதை சற்றும் அவரால் ஏற்க முடியவில்லை என்பது இந்த நூலில் விரிவாக அறியமுடிகிறது,  பாகிஸ்தான் பிரிவினையை "அன்னையின் உடலை வெட்டுவதை போல "என்கிறார்,  ஆதிக்கம் அற்ற சுதந்திரமான மத சூழல் என்பது இந்த நிலத்தின் இயல்பு,  இந்த நிலத்தின் இது வரையிலான மக்கள் தங்களுக்குள் உரையாடி இந்த ஆன்மீக சூழலை உருவாக்கி வைத்திருந்தார்கள்,  அந்நிய படையெடுப்பால் அது பாதிப்பிற்குள்ளானது,  பிறகு சுதந்திரம் பெற்ற பிறகு மீண்டெழும் என நினைக்கும் பொழுது நிலமே துண்டு துண்டாகி போனது , இப்போது கையில் இருக்கும் நிலம் இந்தியா, இதிலாவது இந்த மண்ணின் ஆன்மீக மரபான மனநிலையை அதன் ஆண்மை இயல்பை மீட்டெடுக்க வேண்டும் / இதுதான் கோல்வால்கர் சொல்வது.  மேலும் இப்போதிருக்கும் நிலம் கூட அந்நிய சக்திகளின் சார்பாக இங்கிருக்கும் கரங்களால் துண்டாகும் சாத்தியம் உள்ளது, அப்படி நிகழாமல் இருக்க பார்த்து கொள்ள வேண்டும் என்கிறார்.  இவர் நோக்கில் இவர் வாதங்கள் சரிதான், ஆனால் இப்படி இந்த மதம் சார்ந்த இந்தியா மீதிருக்கும் இந்த சிக்கலை நிரந்தரமாக வெல்ல அந்த மதங்களை இந்து மதம் வெல்லும் போது மட்டுமே தீரும் என்று நினைக்கிறேன்,  அதற்கேற்ற விதத்தில் இந்து மதம் மாற்றி கொள்ள வேண்டும் என்று நினைக்கிறன், எப்படி ஆங்கில மருத்துவம்,  உயர் தொழில் நூட்பம் அனைவரையும் சென்றடைந்ததோ அது போல இந்து மதமும் உலகெங்கும் சென்றடைய வேண்டும், அப்படி சென்றடையும் விதத்தில் தன்னை மாற்றி கொள்ளும் பொழுது மட்டுமே அந்நிய மதம் சார்ந்த சிக்கல்கள் இந்த நிலத்தில் இருந்து நீங்கும்,  இன்னும் வெளிப்படையாக முன்வைக்க வேண்டுமெனில் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவரும் இந்துக்களாக ஆகும் பொழுதும் அந்நிய நாடுகள் இந்து மதத்தை கொண்டிருக்கும் பொழுதும் மட்டுமே நமக்கு இருக்கும் பிரச்சனைகள் நிரந்தரமாக தீரும்,  இன்றைய சூழலில் மதம் எனும் கட்டுக்குள் இருந்து இந்து மரபின் செழுமையை வெளிக்கொணர்ந்து அனைவருக்கும் ஒன்றாக ஆக்குவதன் வழியாக மட்டுமே அந்த சாத்தியத்தை அடைய முடியும், கண்டிப்பாக கடினமான பணிதான், ஆனால் வரலாற்றை நோக்கும்பொழுது முடியாதது அல்ல என்றுதான் தோன்றுகிறது.

மேலே நான் சொன்னது கூட பிழையான பார்வைதான், சரியான பார்வை என்பது மக்களை மதத்தின் பிடியில் இருந்து வெளியே கொண்டு வருவது,  மண்ணின் இயல்பை அவர்களின் கொண்டு சேர்ப்பது, இவ்வழியாக ஒருங்கிணைப்பை உருவாக்குவது.  இதில் முக்கியமான விஷயம் இந்த நிலத்தின் மரபை இந்து மத பின்னணியில் வைத்து கொண்டு செல்லாமல் மத அம்சங்களை விடுத்து பொதுவான ஒன்றாக மாற்றி முன்வைக்க வேண்டும்,  இதை இந்து மதத்தில் இருந்து பிரித்து எடுத்து வெளியே எடுத்து செல்லப்படுகிறது என்ற நோக்கில் பார்க்க வேண்டியதில்லை, இந்திய மரபு எனும் இந்து மரபு  எல்லோரிடமும்  செல்கிறது என்ற நோக்கில் அணுகினாலே போதும், இதில் எந்த நோக்கிலும் இந்த செயல் வீழ்ச்சியை தரும் என்று என்ன வேண்டியதே இல்லை,  அப்படி ஆகவே ஆகாது. இந்த நோக்கில் இந்தியர்கள் தங்கள் மரபை உணர்ந்து அதை அனைவரும் கொண்டு செல்ல வேண்டும் என்று முனைந்தால் கண்டிப்பாக மாற்றங்கள் நடக்கும். மாறாக இந்து மதத்தை பிற மதங்களிடம் இருந்து தற்காத்து கொள்வது என்று போகும்பொழுது நாம் மனதளவிலும் சுருங்கி போகவே வாய்ப்பதிகம்.

மேல் சொன்னவை அனைத்தும் என் எண்ணங்களே,  கோல்வல்கரின் கருத்துக்களை முன்வைத்து அது சார்ந்து சேர்த்து இதில் சொல்லி வருகிறேன், அவ்வளவே.

ராஷ்டிரிய சேவா சங்கம் வெளியில் இருந்து பார்க்கும் பொழுது எனக்கு ஒரு ராணுவத்தை போலவே தோன்றுகிறது,  ஒரே மனதை கொண்டவர்கள் இதில் உள்ளவர்கள் பெரும்பாலும்,  என் நோக்கில் இந்த அம்சத்தில் நிறையும் உள்ளது குறையும் உள்ளது,  நிறை என்பது அபாரமானது ஒருங்கிணைப்பு சாத்தியம், எந்த இடரையும் இந்த சாத்தியம் மூலம் வெல்ல முடியும், மேலும் எந்த ஒரு நோக்கத்தையும் இப்படி ஒருங்கிணைவாகி சாத்தியமாக்கி காட்டிவிட முடியும். இப்படி ஒத்த மனநிலை கொண்டவர்கள் ஆகிறார்கள் என்பது சுவாரஸ்யமான ஆராய்தலுக்குரிய விஷயம்,  தேசத்தை அன்னையாக வணங்கும் மனநிலை வழியாக இவர்கள் ஒன்றாகிறார்கள்,  ஒரே தெய்வத்தை வழிபடும் பக்தர்களை போன்றவர்கள்தான் இவர்கள்,  கோல்வால்கர் உருவாக்கியது ஒரு பக்கதர்கள் கூட்டத்தை என்றும் கூட சொல்லலாம், கோல்வால்கர் மரபில் இருந்து வாழ்க்கைமுறையை எடுத்து அதை தேச அன்னையை நோக்கி சற்று தவமைத்து ஒரு எளிதான சூத்திரத்தை அளிக்கிறார்.  அதாவது இந்திய வாழ்வியல் முறையான அறம் பொருள் இன்பம் வீடு என்பதை அறம் வழியாக பொருள் இன்பத்தை தேடுவதை அப்படியே முன்வைத்து விடுகிறார்கள், வீடு ( முக்தி ) என்பதைத்தான் சற்று தகவமைக்கிறார், ஆனால் அதுவும் மரபில் இருந்து எடுத்த ஒரு வழிமுறைதான்,  அதாவது முக்தி என்பதை இறைவனை வழிபடுவது, அது வழியாக அடைவது என்று சொல்லலாம்,  இந்த அடைதலுக்கான வழியைத்தான் தேச வழிபாட்டோடு இணைக்கிறார், அதாவது இறைவனை வழிபடுவதை அத்வைத நோக்கில் முதலில் முன்வைக்கிறார், அத்வைத நோக்கில் எல்லா உயிர்களிலும் இந்த பிரபஞ்சம் முழுவதிலும் இருப்பது இறைவன்தான், இதை கோல்வால்கர் எடுத்துக்கொண்டு "எனவே பிற உயிர்களை ( மனிதர்களை ) ஆராதிப்பது என்பது இறைவனை ஆராதிப்பதுதான் என்கிறார்,  இது இந்து மதத்தின் பற்பல ஞானிகள் ஏற்கனவே சொன்னதுதான், அதையெல்லாம் கூட இந்த நூலில் உதாரணம் காட்டுகிறார்,  இதற்கு பிறகு இருக்கும் இணைப்புதான் முக்கியமானது,  அதாவது இறைவன் எனும் இடத்தில் பாரத அன்னையை முன்வைக்கிறார்,  பாரதத்தின் மைந்தர்களை தன் சகோதரர்களாக பிற மனிதர்களாக கொண்டு அவர்களுக்கு சேவை செய்வதன் வழியாக இறைவனை அடையமுடியும் என்கிறார்,  இதன் வழியாக இந்(து )தியர்களுக்குள் ஒருங்கிணைவை முன்வைக்கிறார்.  இது நல்ல வழிமுறைதான்,

பாரதத்தை ஆன்மீகபூமி என்று எண்ணுவது முதலில் இருந்தே இருக்கும் உணர்வு ஆனால் பாரத நிலத்தை மட்டும் ஓர் அன்னையாக ( பாரத அன்னை ) நோக்கும் வழக்கம் சுதந்திர கால உருவாக்கம் என்று நினைக்கிறேன், . அதே சமயத்தில் நிலத்தை பூமாதேவி என வழிபடும்  , மேலும் நிலத்தை அன்னையாக வழிபடும் வழக்கம் முன்பே இருந்தது, பாரத அன்னை எனும் சட்டகம் சுதந்திர கால உருவாக்கம் என்று நினைக்கிறேன் ( சமீபத்தில் ஜெயமோஹன் இப்படியான ஒரு பார்வையை( பாரத அன்னை- பூமா தேவி ) முன்வைத்தார், அதையொட்டியே இதை சொல்கிறேன் ),  சங்கம் இந்த பாரத அன்னை படிமத்தை முன்னெடுத்து கொண்டு சென்றது,  இந்த படிமம் வழியாக தன் நோக்கை முன்வைத்தது என்று நினைக்கிறேன்.

இந்த நூல் சார்ந்து அது முன்வைக்கும் ஒவ்வொன்றையும் இப்படி முன்வைத்து பேச நிறைய விஷயங்கள் இதில் இருக்கிறது.

ஒரு தன்னலமற்ற முன்னோடியாக தேசம் மீது பற்று கொண்ட ஒருவரராக கோல்வால்கர் மீது இந்த நூல் படித்த பிறகு பெரும் மதிப்பும் மரியாதையும்  உருவாக்கியிருக்கிறது..

No comments:

Post a Comment