Tuesday, August 26, 2025

சாதியற்ற இந்துமதம் - 1

 சமீபத்தில் நடந்த ஆணவக் கொலை சார்ந்த இணைய விவாதங்களில் ஒன்றில் எழுத்தாளர் BR மகாதேவன் அவர்கள் இப்படி எழுதி இருந்தார் ' சொந்த சாதிக்குள் திருமணம் செய்ய வேண்டும் , பிற சாதி பெண்களை சகோதிரிகளாக பார்க்க வேண்டும் ' என , இதை வாசித்த போது எனக்கு திக்கென்று இருந்தது . Br மகாதேவன் அவர்கள் இந்து மத நலன்விரும்பி , மதத்திற்குள் இணைவும் பரஸ்பர நட்பும் இருக்க வேண்டும் என்பதற்காக இதை முன்வைக்கிறார் . ஆனால் இது மிக பிற்போக்கான அபத்தமான கருத்து . ஏன் இந்துமத நலன் விரும்பும் தரப்பு ( பெரும்பாலானோர் ) சாதி கடந்த திருமணத்தை எதிர்க்கிறது ? இந்த பதிவில் இதை பற்றி சற்று விரிவாக அணுகவிருக்கிறேன் .

சாதிய ஆதரவு இந்துமத நலன்விரும்பிகள் தரப்பு முன்வைக்கும் நிலைப்பாடுகள் என்பது சாதி இடையிலான ஏற்ற தாழ்வுகள் ஏதும் இல்லை , ஒவ்வொரு சாதியும் தனித்துவமானது , இந்து மக்களின் உட்பிரிவு கிளைகள் இவை . இவைகளுக்கு இடையே இணக்கமும் நட்பும் இருக்க வேண்டும் , ஒவ்வொரு சாதியும் பிற சாதியை சமமாக மதிக்க வேண்டும் , ஏற்ற தாழ்வு காண கூடாது ... இந்த வகையான பார்வைகள் எல்லாம் சரியானவைகள்தான் . ஆனால் இதை எல்லாம் சொல்பவர்கள் சாதி தாண்டிய திருமணத்தை மட்டும் எதிர்க்கின்றனர் . காரணம் சாதி அமைப்பு இந்து மதத்திற்கு வழு சேர்க்க கூடிய ஒன்று என்று நினைக்கின்றனர் , எனவே சாதிய இணைவை ஆதரிக்கின்றனர் , தற்கால சாதிய மனநிலை கோரும் விசயங்களையும் ஆதரிக்கின்றனர் , தற்கால சாதியம் சாதி தாண்டிய திருமணத்தை கடுமையாக எதிர்க்கிறது . இந்து நலன் விரும்பிகளும் இவர்களை பின்பற்றி ,அதாவது சாதிய கட்டமைப்பை ஆதரிக்க அந்த கட்டமைப்பு முன்வைக்கும் விசயங்களை எந்த விமர்சனமும் இன்றி அப்படியே ஆதரிக்கின்றனர் . 

சாதி கட்டமைப்பு பிற சாதியில் இருந்து திருமண உறவுகளை ஏன் ஏற்பது இல்லை என்பது முக்கியமான வினா , சாதிய அமைப்பு சாதி தாண்டிய திருமண உறவுகளை ஏற்கிறது என்றால் சாதிய கட்டமைப்பை எதிர்க்க வேண்டிய முக்கியமான அம்சம் இல்லாமல் ஆகி விடுகிறது . ஆனால் சாதிய கட்டமைப்பு இதில் உறுதியாக இருக்கிறது , சாதி தாண்டிய திருமணங்களை உறுதியாக எதிர்க்கிறது . எந்த அளவு வீரியமாக கட்டமைப்பு இருக்கிறதோ அந்த அளவு எதிர் நிலை எடுக்கிறது . கொலைகள் செய்யும் அளவிற்கு செல்லுகிறது . 

சாதி தாண்டிய திருமணத்தில் முக்கியமாக பெண்கள் வெளியே செல்வதுதான் பெரிய அளவில் எதிர்ப்பு காணப் படுகிறது . மதுரையை ஒட்டிய ஒரு தெலுங்கு பின்னணி கொண்ட நண்பரிடம் பேசும் போது தன் சாதியை சேர்ந்தவர் பிற சாதி பெண்ணை திருமணம் செய்திருந்தால் அவரை விலக்கி வைத்து விடுவோம் , அவர் அந்த பெண்ணை கைவிட்டு வந்தால் அபராத தொகை விதித்து பிறகு சேர்த்து கொள்வோம் என்றார் ! பெரும்பாலும் ஆண்கள் சாதி தாண்டி திருமணம் செய்வது பெரிய எதிர்ப்பை வன்முறையை உருவாக்குவது இல்லை என்று நினைக்கிறேன் . மாறாக பெண் சாதி தாண்டி திருமணம் செய்கிறாள் என்றால் பெண் மற்றும் அவளை திருமணம் செய்யும் ஆண் இருவருமே அபாயத்திற்கு உள்ளாகின்றனர் . சாதியம் பெண் வெளியேறுவதைதான் , சாதி தாண்டுவதைதான் அவமானமாக , சிறிதும் ஏற்க முடியாத செயலாக பார்க்கிறது . 

சாதியம் மட்டுமல்ல ,இஸ்லாமிய சமூகத்திலும் பெண் வெளியேறுவதை , மதம் தாண்டுவதை அந்த மதத்தினர் சற்றும் ஏற்பது இல்லை . ஆனால் இந்த இரு தரப்பிற்கும் உள்ள வித்தியாசம் சாதியில் பிற சாதி ஆணை தங்களது ஆளாக சேர்ப்பது இல்லை , ஆனால் இஸ்லாமில் மதம் மாறுவதாக இருந்தால் ஏற்றுக் கொள்கிறார்கள் . சாதி மட்டுமே தங்களது சமூகம் இல்லை என்றால் அவர் என்ன செய்தாலும் தங்களது ஆளாக ஏற்று கொள்ளாது , இரத்த உறவு அடிப்படையில் காணும் மனநிலைதான் இப்படி ஏற்க முடியாமல் இருக்கும் மனநிலைக்கு முக்கிய காரணம் . 

ஏன் ஆணை விட பெண் சாதி தாண்ட இவ்வளவு எதிர் மனநிலை இருக்கிறது என்றால் அதற்கு முதல் காரணம் சாதிய அமைப்பு ஆணாதிக்க இயல்பு கொண்டது என்பதுதான் . இங்கு பரிசோதனை எலி என்பது பெண்தான் , அவளுக்கான புற சூழலை, அரணை ஆண்கள் அமைக்கிறார்கள் . வெளி சாதி ஆண்கள் நண்பராக இருப்பது கூட தடுக்க படுகிறது . தங்களது கவுரவம் என்பது பெண் தனது சாதிக்குள் தான் தேர்ந்தெடுத்து தரும் , அல்லது தனது சாதிக்குள் அவளே தேர்ந்து கொள்ளும் உறவு அமைவதே என்பதாக இருக்கிறது . பெண் சாதி தாண்டினால் அது பெற்றோருக்கு அவமானத்தை அளிப்பதாக சாதிய கட்டமைப்பு வைத்திருக்கிறது . பெண்ணின் பெற்றோர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கெல்லாம் இது இருக்கிறது . சுற்றம் வழியாக இந்த நெருக்குதல் கட்டமைக்க படுகிறது . பெண் சாதி தாண்டினால் பெண்ணை சரியாக வளர்க்க வில்லை என்று பெற்றோர் குற்றம் சாட்ட பாடுகின்றார் . இதிலிருந்து தப்பிக்க பெற்றோர் / பெண்ணின் சகோதரர்கள் பெண்ணை அவளை திருமணம் செய்த ஆணை கொலை செய்யும் அளவிற்கு செல்கின்றனர் , அதாவது ஜெயிலுக்கு செல்லும் , குற்றம் செய்யும் அவமானத்தை விட பெண் சாதியை கடந்து செல்வது பெரிய அவமானமாக பார்க்க படுகிறது. 

கவர்ந்து செல்வது , கொள்ளை அடிப்பது , தங்களது உரிமைக்கு உரிய ஒன்றை தங்களிடம் இருந்து அபகரிப்பது என்பதாகத்தான் பெண் சாதி தாண்டி செல்வதை சாதிய கண்ணோட்டத்தினர் பார்க்கிறார்கள் . இதை வெறும் பெண்ணை சொத்தாக பார்க்கும் மனநிலை என்று குறுக்கி விட முடியாது . உண்மையில் இவர்கள் தங்கள் பெண்ணை அளவு கடந்து மதிக்கின்றனர் , சரியான கணவன் அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர் , அந்த பெண்ணின் நல்வாழ்வையே நாடுகின்றனர் . ஆனால் சாதிய மனநிலை சாதி தாண்டிய ஆட்களை வெளி ஆட்களாக அபகரிப்பாளர்களாக காட்டுகிறது . தங்களை மேலானவர்களாகவும் ,பிற சாதியினரை கீழானவர்களாகவும் காட்டுகிறது . கீழானவர்களுக்கு தங்கள் பெண்ணை அளிப்பது என்பது தங்களது மேன்மையை கீழ்மை படுத்தி கொள்வதாக சாதிய கட்டமைப்பு எண்ணங்களை உருவாக்கி வைத்திருக்கிறது . 

சாதியம் சுய கவுரவம் எனும் மாயையை ஊதி பெருக்கி வைத்திருக்கிறது , ஒவ்வொருவனின் மனதிலும் , ஆண்ட பரம்பரை போன்ற கற்பிதங்கள் எல்லாம் இந்த கவுரவ மன நிலையை ஊதி பெருக்கதான் . இப்படி ஊதி பெருக்க பட்ட மனநிலை தன் பெண்ணே வீசி தள்ளி செல்லும் போது அது அவனால் ஏற்க முடியாமல் ஆகிறது !

சாதியத்தை ஏன் விரும்புகிறார்கள் என்பது இன்னொரு முக்கியமான வினா , பொதுவாக ஒவ்வொருவருக்கும் தங்களை ஹீரோவாக காட்டிக்கொள்ளும் விருப்பம் இருக்கிறது . திறன் கொண்டவர்கள் அதற்காக உழைத்து அதை அடைகிறார்கள் , அப்படியான திறன் இல்லாதவர்கள் தனது சாதி ,மதம் அளிக்கும் பெரிமிதங்களை சூடி கொண்டு தங்களை விசேஷமானவர்கள் என்று காட்டி கொள்கிறார்கள் , விஷேச திறன் அற்றவர்கள் மிகுதி என்பதால் சாதியவாதிகளும் மிகுதியாக இருக்கிறார்கள் !





சாதியற்ற இந்துமதம் - 1

 சமீபத்தில் நடந்த ஆணவக் கொலை சார்ந்த இணைய விவாதங்களில் ஒன்றில் எழுத்தாளர் BR மகாதேவன் அவர்கள் இப்படி எழுதி இருந்தார் ' சொந்த சாதிக்குள் ...