Tuesday, September 24, 2024

துயர் ( குறுங்கதை )

 நான் மூன்று நேரமும் ஹோட்டல்களில் சாப்பிடுபவன் , திருப்பூர் வந்த இந்த 10 ஆண்டுகள் முழுதும் என் உணவு ஹோட்டல்களில்தான் , மூன்று நேரமும் ஓரளவு நல்ல விதத்தில் உணவு உன்ன வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு 200 ரூபாய் வரை ஆகி விடும் , என் பகுதியில் எந்த எந்த கடைகளில் ஓரளவு நல்ல உணவுகள் கிடைக்கும் என்று என்னால் சொல்லி விட முடியும் . அப்படி தேர்ந்து தேர்ந்து முடிவில் நான் வந்தடைந்த இடம் தான் , பரணி ஹோட்டல் . பெரியவர் கல்லாவில் இருந்தாலும் உணவு அளிப்பது ,பார்த்து கொள்வது எல்லாம் குணவதி அக்காதான் . எனக்கு அவங்களை மிக பிடிக்கும் , காரணம் எப்போதும் அவங்க முகத்தில் இருக்கும் துயரம் தோய்ந்த சாந்த முகம்தான் , எப்போதும்  எந்த நேரத்திலும் அந்த முகத்துடன் மட்டுமே பார்த்து இருக்கிறேன் . ஒரு முறை "நீங்கள் சிரிக்கவே மாட்டீர்களா "என்று கேட்டே விட்டேன் , அப்போதுதான் அக்காவிடம் இருந்து சின்ன புன்னகை வெளிவந்தது ,பிறகு " சாப்பிடு" என்று போய் விட்டார்கள் .


அவங்களுக்கும் என்னை பிடிக்கும் , பிரியத்தோடு பரிமாறுவார்கள் . உண்மையில் அவங்களை கடைக்கு வரும் எல்லோருக்கும் பிடிக்கும் . பெரும்பாலும் பேசவே மாட்டாங்க , கல்லாவில் இருக்கும் பெரியவரான அவங்க அப்பாவும் , பரிமாற கூட இருக்கும் அவங்க அம்மாவும்தான் பேசி கொண்டிருப்பார்கள் . எனக்கு குணவதி  அக்காவும் பேச வேண்டும் என்று ஆசையாக இருந்தது ,குறைந்தபட்சம் அவரின் துயரத்திற்கான காரணத்தையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று . 


வேலை இல்லாத சமயங்களில் அங்கு சென்று அமர்ந்து கொண்டிருப்பேன் , பெரியவர் ஏதாவது பேசி கொண்டிருப்பார் , அவை பிடிக்கா விட்டாலும் கேட்டு கொண்டிருப்பேன் . மெல்ல நான் ஆபத்தானவன் இல்லை என்று உணர்ந்து  பெரியவரும் அம்மாவும் சகஜமாக உரிமையுடன் பழக துவங்கி விட்டனர் , கடைகளுக்கு சென்று பொருள்கள் வாங்கி கொடுப்பது போன்ற வேலைகள் எல்லாம் செய்து கொடுப்பேன் . நாட்கள் செல்ல செல்ல குணவதி அக்காவும் என்னிடம் மனம் விட்டு பேச ஆரம்பித்திருந்தார்கள் . 


அக்காவுக்கு திருமணம் ஆகி ஒரு பையன் இருக்கிறான் ,அவன் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான் என்பது வரை தெரியும் ,ஆனால் அவர் கணவர் பற்றி எதுவும் தெரியாது , அவர் கூட இல்லாமல் இருப்பதை வைத்தும் , தன் பெற்றோருடன் இருப்பதை வைத்தும் கணவர் அக்காவை கைவிட்டு சென்று விட்டார் என்று எண்ணி இருந்தேன் . அதை பற்றி கேட்க வேண்டும் என்று வெகுநாள் எண்ணி இருந்தேன் . ஒரு சந்தர்ப்பம் அமைய கேட்டும் விட்டேன் .


" அக்கா உங்க வீட்டுகாரர் எங்கே, உங்களை விட்டுட்டு போயிட்டாரா" என்று கேட்டேன் அப்போது .


" ஆமா " என்று சொல்லி பிறகு ஏதும் சொல்லாமல் அக்கா சமையல் வேலையை பார்க்க உள்ளே சென்று விட்டார் . நானும் அக்கா பின்னே கூடவே உள்ளே சென்று " உங்களை போல ஒருவரை விட்டுவிட்டு போறார்னா ,கண்டிப்பா அவர் முட்டாளாதான் இருப்பார் " என்றேன் . 


ஆச்சிர்யமாக நான் சொல்வதை கேட்டு அக்கா சிரித்தாள் , " போடா " என்றாள்.


நான் " அப்பறம் வேறென்ன சொல்ல சொல்றீங்க " என்றேன் .


அக்கா சிலகணம் பேசாமல் நின்று ,பிறகு என்னை நிமிர்ந்து பார்த்து " அவர் ரொம்ப நல்லவர் , என் மேல ரொம்ப அன்புள்ளவர் " என்றேன் .


நான் மேற்கொண்டு ஏதோ கேட்கவர, அக்கா உடனே " இதை பத்தி பேச வேணாம் " என்றாள். சரி என்று அதோடு விட்டு விட்டேன் . 


சில நாட்கள்தான் என்னால் அதை பற்றி கேட்காமல் இருக்க முடிந்தது . மீண்டும் சந்தர்ப்பம் அமைய பேச ஆரம்பித்தேன் .


ஒருமுறை " அவர் எங்க இருக்கார் க்கா" என்றேன் . அக்கா " தெரியல " என்றார் , அப்போது அக்கா முகம் பார்த்தபோது அழுது விடுவாளோ என்று தோன்றியது . நான் " வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாரா " என்று கேட்டேன் . அக்கா " தெரியல " என்ற அந்த ஒற்றை பதிலையே சொன்னார் . மேலும் " அவங்க போனதில் இருந்து அவங்களை நான் திரும்ப பாக்கவே இல்லை , எங்க இருக்கார்னே தெரியாது , நான் கடவுள்கிட்ட வேண்டறது ஒன்னு மட்டும்தான் ,அவங்க நல்லா இருக்கனும் என்பது மட்டும்தான் " என்றார் . 


உண்மையில் நான் குழம்பினேன் , "அவங்களை தேடலையா நீங்க " என்றேன் , அக்கா பதில் ஏதும் சொல்லாமல் என்னை பார்த்தாள் , கண்களில் நீர் வந்து கொண்டிருந்தது . 


பிறகு என் எண்ணங்கள் முழுதும் அக்கா மீதுதான் இருந்தது . அக்காவின் கணவர் எங்கு இருக்கிறார் என்று தேடி கண்டு சேர்த்து விட வேண்டும் என்று கூட எண்ணினேன் , அக்காவிடம் ,அக்காவின் பெற்றோரிடம் பேசி தகவல்கள் வாங்க வேண்டும் என்று எண்ணினேன் . என் எண்ணங்களை அக்காவிடம் சொல்லவும் செய்தேன் . 


அக்கா " சேர்ந்திருக்க முடியாதுடா " என்றாள். " ஏன்" என்று கேட்டேன் ,அக்கா எதுவும் சொல்லாமல் போய் விட்டாள் . நான் திரும்ப தொடர்ந்து நச்சரித்தேன் . பிறகு ஒருமுறை " நீங்க எவ்வளவு நாள் சேர்ந்து இருந்தீங்க" என்று கேட்டேன் , "மூனு வருடம் " என்று அக்கா சொன்னாள். சட்டென்று ஏதோ யோசித்து " காதல் திருமணமா" என்று கேட்டேன் , " ஆமா" என்றாள், "சொந்தமா"  என்றேன் ," ஆமா ,சித்தப்பா ,அப்பாவோட கடைசி தம்பி " என்றாள்!